Sunday 27 December 2020

பாவமூட்டை

சிறுகதை போட்டிக்கு நான் எழுதிய மூன்றாவது கதை


                                                  

                                                            

 

" என்னடா வெங்காய மூட்டையெல்லாம் வண்டியில அனுப்பியாச்சா" என்று கேட்டபடி வெள்ளை வேட்டி,சட்டையுடன் வந்து நாற்காலியில் அமர்ந்தான் ராமமூர்த்தி. பெயரளவில் தான் ராமமூர்த்திஅவனது தந்தையின் காய்கறி வியாபாரத்தை தானே ஏற்று நடத்தி வந்தான்.அவனது தந்தை தனது கடும் உழைப்பால் காய் கறி வியாபாரத்தை வளர்த்திருந்தார்.எதிர்பாராத விதமாக நேர்ந்த ஒரு விபத்தினால் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, வியாபாரத்தை தான் ஏற்று நடத்தினான் ராமமூர்த்தி. அவனிடம் நிறைய வியாபாரிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்குவர். "என்னப்பா கண்ணப்பா மூனு மாசமா வட்டி வரல, வீட்டுப் பத்திரம் ஞாபகம் இருக்குதா?" என்றான் ஒரு வியாபாரியிடம்." அண்ணே, மழையில சரியா வியாபாரமே இல்லண்ண, கொஞ்சம் பொறுங்கண்ண, அடுத்த மாசம்..." என்றிழுத்த வியாபாரியிடம் " அப்படியா, சரிப்பா... அடுத்த மாசமே குடு ஆனா வட்டிக்கு வட்டியா சேர்த்து வரணும்" என்றான். அந்த வியாபாரி " ஐயா....."என அழுதவாரே இழுத்தான் அந்த அப்பாவி வியாபாரி." "அது சரி...உன் கஷ்டம் உனக்கு என் கஷ்டம் எனக்கு சரி ஒன்னு செய்யலாம் உன் வீட்டில் ஒரு சிட்டிருக்கே அதை என்னிடம் வர சொல்லு கணக்க தீத்துபுடலாம்" சற்றும் இரக்கமில்லாமல் அனைவரின் முன்னிலையிலும் பச்சையாக கூறினான் ராமமூர்த்தி. இதனை கேட்ட வியாபாரி அழுது கொண்டே போய் அவமானம் தாங்க முடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். 

    ராமமூர்த்தி தான் அவர் தற்கொலைக்கு காரணமென தெரிந்திருந்தும் விலை போன காவலர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. பாவம் அந்த குடும்பம் நிர்கதியானது.ஊரில் காய் கறி வியாபாரிகளுக்கு அவனால் மிகுந்த இடையூறுகள் ஏற்பட்டன.  ராமமூர்த்திக்கு  மந்திரி செல்வாக்கு கூட அதிகம். தன்னிடம் இருக்கும் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி அவ்வூரில், அவனிடம் மட்டுமே அனைத்து சில்லரை வியாபாரிகளும் காய் கறிகளை வாங்கும் நிலையை ஏற்படுத்தி விட்டான். விலையையும் கூட்டி அநியாயம் செய்து கொண்டிருந்தான். எதிர்த்துக் கேட்டவர்களுக்கு தந்திரமான முறையில் தொல்லைகள் கொடுத்து அவர்களைக் கடன் வாங்கத் தூண்டிடுவான். 

   

   ஒரு கட்டத்தில் அவனிடம் கடன் வாங்கியவர்கள் அனைவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வளவு அக்கிரமங்களைச் செய்யும் அவனை கேட்க மக்கள் எவரும் துணியவில்லை. தனது ஊர் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் சொந்த காரர்களுக்கு மட்டும் நல்லது செய்து, ஊர் உயர் பதவிகளில் அந்த படித்த இளைஞர்களை அமரவைத்து தனது மகுடிக்கு ஆடும் பாம்புகளாக அவர்களை வைத்திருந்தான். அவர்களின் மூலம் பல நிலம் சம்பந்தப்பட்ட அரசாங்க வேலைகளை தானும் சாதித்துக் கொண்டு இருந்தான். இதுபோக,  ஊரில் அதிக வட்டிக்கு தன் பணத்தை விட்டு வியாபாரம் செய்தான். வட்டி கட்ட இயலாத சிறு வியாபாரிகளின்  நிலங்களை கையகப்படுத்தினான். இன்னும் கொடுமை என்னவென்றால் அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களிலுள்ள பெண்களை சீரழித்தான். இவ்வாறு ஒரு ஏகாதிபத்தியம் போல தன் அரசியல் பலத்தாலும் பண பலத்தாலும் ஊரையே தனது ஆளுகைக்குக் கீழ் வைத்திருந்தான் ராமமூர்த்தி. 


     அவன்  பல அநியாயங்களை அரங்கேற்றிய வண்ணமிருந்தான்.ஒருமுறை, ராமமூர்த்தி தனது அறையில் வேறொரு பெண்ணை அணைப்பதை அவன் மனைவி கண்டுவிட்டாள். அவனது அநியாயங்களை பொறுக்கமுடியாமல்  அவனது மனைவி அவனை விட்டு விலகி தன் தந்தை வீட்டிற்கே சென்றுவிட்டாள். ராமமூர்த்தியின் கொடுமைகள்    இறைவனுக்கே பொறுக்கவில்லை போலும். அவனுக்கு குழந்தைகளே இல்லாமல் போனது. அவன் போகாத கோவில்கள் இல்லை பார்க்காத மந்திரவாதிகள் இல்லை.  .ராமமூர்த்தி சுடுகாட்டு வெட்டியான் ஆறுமுகத்தைக்கூட்டாக வைத்துக்கொண்டு இரவில் இருவரும் மது அருந்துவார்கள். அப்போது வெட்டியானின் தேவைகளுக்காக நிறைய பணம் தருவான் ராமமூர்த்தி.வெட்டியானை பொறுத்தவரை ராமமூர்த்தி தான் அவனுக்கு தெய்வம்.வெட்டியானின் மகனுக்கு அரசு வேலையும் வாங்கிக்கொடுத்தான்.  


      தற்கொலை செய்த நபரின் இறுதி சடங்கிற்கு மாலையுடன் மயானத்துக்கு அவன் சென்ற போது அவனை ஒரு பெண் " நீயெல்லாம் விளங்கவே மாட்டாய். சத்தியமா சொல்லுறேன் என் புருஷன் உன்கிட்ட கைநீட்டின பாவத்துக்கு அவர நோகடிச்சு கொன்னுட்டியேடா பாவி" என்றபடி சுடுகாட்டு மண்ணை தூற்றி சாபமிட்டாள். அடுத்த நாள் காலையே அதிர்ச்சியான செய்தியொன்று அவனுக்கு காத்திருந்தது. வழக்கம் போல் காலையில் எழுந்து தனது நாற்காலியில் அமர்ந்து சிகரெட்டை பற்ற வைத்தான். மேஜை மீதிருந்த அவனது அலைபேசி அலறியது.  அழைப்பை ஏற்றவனுக்கு திடீர் அதிர்ச்சி. 


    மறுமுனையில்,"அண்ணே, சரக்கு வந்த வழியில மல செக்போஸ்ட் ல போலீஸ் கிட்ட நம்ம லாரி மாட்டீருச்சு அண்ணே. நான் தப்பிச்சோம் பிழச்சோமென காட்டிற்குள் புகுந்து  வந்து உங்களோட பேசறேன். நம்ம பசங்க வசமா போலீஸ் கிட்ட மாட்டிகிச்சு"என்றான் ராசு.  "காசு குடுக்க வேண்டீது தேன" என்றான் ராமமூர்த்தி. "அண்ணே, யாரோ புது ஆளாம்."  "சரி நீ தலைமறைவாகிடு.நான் பாத்துக்கிறேன்" என்று கூறி அழைப்பைத் துண்டித்தான். விரைந்து தனக்குத் தெரிந்த காவல்துறை உயரதிகாரியை தொடர்பு கொண்டு விஷயத்தை கூற முற்பட்டான். ஆனால் அந்த அதிகாரியின் இடத்தில் வேறொரு அதிகாரி நியமிக்கபட்டிருந்தார். அழைப்பு துண்டிக்கப்பட்டது. இது போல் பல நிகழ்ந்தன. 

 

        சரக்கு வரத்து குறைந்ததால் அவனது வியாபாரத்தில் படிப்படியாக வீழ்ச்சியை சந்தித்தான். இதற்கு ஏற்றாற்போல்,அவனது வாடிக்கையாளர்களும் மெதுவாக அவனை ஏமாற்ற ஆரம்பித்தார்கள். இதனால் மனமுடைந்த ராமமூர்த்தி மந்திரவாதியொருவரை வரவழைத்து தனக்கு ஏன் தற்காலத்தில் இவ்வளவு துன்பங்கள்  என்பதையறிய முயற்சி செய்தான். அந்த மந்திரவாதியோ ராமமூர்த்தியிடம் அந்த பூஜை இந்த பூஜை யென நிறைய பணத்தைக் கொள்ளையடித்து சென்றுவிட்டான்.

    

       ராமமூர்த்தி மிகுந்த வருத்தமடைந்தான்.அவனை சுற்றியிருந்த கூட்டம் அவனிடம் செல்வம் குறைய தொடங்கியதையறிந்து அவனிடமிருந்து படிப்படியாக விலகிச் செல்லலாயினர். அவனது செல்வாக்கு குறைய ஆரம்பித்தது.அவனால் பாதிப்படைந்த பலர் அவனை பழிவாங்க துடித்தனர். படிப்படியாக தனது சொத்துக்களை இழந்தான்.  போதாக்குறைக்கு வயோதிகம் வேறு அவனை படுத்தியெடுத்தது.மருத்துவமனைக்கு நடந்து நடந்து அவன் கால்கள் தேய்ந்ததுதான் மிச்சம். 

       

       ஒருநாள், ராமமூர்த்தி தனது வீட்டு முற்றத்தில் நாற்காலியில் அமர்ந்து சற்று கண் வளர்ந்தான். அப்போது அவனால் பாதிக்கபட்ட ஒருவன் அவன் மீது கல்லெறிந்தான் அந்த கல் ராமமூர்த்தியின் நெற்றியில் பட்டு ரத்தம் கசிந்தது. "ஐய்யோ அம்மா..." ராமமூர்த்தி கூச்சலிட்டுக்கொண்டே நிலத்தில் சரிந்தான். அவ்வழியாக வந்த வெட்டியானின் மகன் கலைச்செல்வன் ராமமூர்த்தியை மருத்துவமனையில் சேர்த்தான். வெட்டியானும் விசயமறிந்து மருத்துவமனைக்கு விரைந்தான். 


         ராமமூர்த்தியை அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருந்தனர். "ரத்தம் அதிகமா போனதால...மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதில் சிரமம் இருக்கு, வி வில் ட்ரை அவர் பெஸ்ட்" மருத்துவர் கூறி சென்றார். நாட்கள் கடந்தன ராமமூர்த்தியின் உடல் நிலை சற்று சீரடையவே அவனை அவசர சிகிச்சை பிரிவிலிருந்து அறைக்கு மாற்றினர். அறையில் ராமமூர்த்திக்கு நினைவு திரும்பிடவே, தான் செய்த தவறுகளை எண்ணிவருந்தினான்.  ராமமூர்த்தி கண் திறந்ததைக்கண்ட ஆறுமுகம் சற்று ஆறுதலடைந்து "சாமி ஏதாது ச்சாப்பிட்ரீகளா?" என கண்ணீரோடு கேட்டான்.   ராமமூர்த்தி ஏதும் பேசவில்லை. அவனது கண்களில் கண்ணீர் குளம் போல தேங்கியிருந்தது. தனது வாழ்க்கையை ஒரு முறை திரும்பிப்பார்த்தான். எத்தனை கொடுமைகள், எத்தனை அக்கிரமங்கள். கோரமான முகமொன்று அவன் கண் முன் தோன்றியது. தனது நிலையை கண்டு  தானே   அஞ்சி நடுங்கினான் ராமமூர்த்தி.


       "ஆறுமுகோ, இனி நான் பொழக்கமாட்ட. எனக்கு எஞ்சி இருக்கறது என் வூடு மட்டுந்தே.அத என் மனைவிக்கு அப்புரோ நீ எடுத்துக்கோ. ஊ மவன்  கிட்ட சொல்லி நா அடமானத்துக்கு அப்பாவி ஜனங்க கிட்ட புடுங்கி வைச்ச பத்தரத்த யெல்லா அவுங்கவுங்க கிட்டயே கொடுத்திட சொல்லு.இப்புடியாது என்னோட பாவ மூட்டையோட பாரோ கொஞ்மாவது குறயுதானு பாக்கலாம்" என்று சொல்லி கண்களை அகன்று விழித்தான் ராமமூர்த்தி. ஆறுமுகம் கதறிக்கொண்டு மருத்துவரை அழைத்து வருவதற்குள் ராமமூர்த்தியின் உயிர் பிரிந்திருந்தது. 


       காரியத்திற்கு பின்னர், இராம மூர்த்தியின் மனைவியின் துணைகொண்டு  ராமமூர்த்தி ஏற்கனவே யார் யாரிடம் வரவு செலவு என்ற விஷயங்களை எழுதி வைத்திருந்த குறிப்பேட்டை பெற்று, அதனைக் கொண்டு ஆறுமுகமும் அவன் மகனும் நேர்மையாக செயல்பட்டு பத்திரங்களைப் பத்திரமாக அவரவர்களிடம் ஒப்படைத்து விட்டனர். 

       

      இரண்டு நாட்கள் கழித்து அவ்வூர் டீக்கடை பெஞ்சில் சிலர் அமர்ந்திருக்க, "ராமமூர்த்தி கத இப்படி முடிஞ்சு போச்சே" என ஒருவர் கிசுகிசுக்க மற்றொருவர் அதற்கு "ஆமாப்பா, எப்படியோ என்னோட பத்திரம் வந்திருச்சு..இனிமே கொல சாமி சத்தியமா கடனே வாங்கமாட்டேனப்பா சாமி" என நிம்மதி பெருமூச்சு விட்டான்.


        டீ கடையில், " ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கத உனக்கு தெரியுமா" என்ற பாடல்  சன்னமாக ஒளித்துக்கொண்டிருந்தது. 

                  

                                          ***முற்றும்***

Friday 18 December 2020

பிரியமான தோழி


சிறுகதை போட்டிக்கு நான் எழுதிய  இரண்டாவது கதை 

        

                                                    

         சரஸ்வதி அவசரமாக தன் வீட்டுக்கு புறப்பட்டு கொண்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து அவளைப் பார்க்க ஓர் வயதான பாட்டி லொக்கு லொக்கு வென இரும்பிக்கொண்டு வந்தார். "பாட்டி, அங்கேயே உட்காருங்க.இதோ வருகிறேன்" பையை மேஜைமேல் வைத்தபடி பாட்டியிடம் கூறினாள் சரஸ்வதி. வேகமாக வந்து பாட்டியை பரிசோதித்து, " பாட்டி, உங்களுக்கு சளி பிடுச்சிருக்கு.நீங்க பனிகாலத்துல வீட்ல இருக்கறது தான் நல்லது.இந்தாங்க இந்த மாத்திரையை இரண்டு நாள் காலையும் மாலையும் சாப்பாட்டுக்கு பின் சாப்பிடுங்க" என்று தனது மேஜை மேலிருந்த மாத்திரை அட்டையை எடுத்து இலவசமாக பாட்டியிடம் வழங்கினாள்.சரஸ்வதி எப்போதுமே வயதான ஏழை பெண்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆகவே, அப்பகுதியில் அனைத்து பாட்டிமார்களும் மருத்துவத்திற்கு சரஸ்வதியைத்தான் அணுகுவார்கள்.

இவள்‌ அதன் பின் கிளம்பி வீட்டுக்கு சென்றாள். மணி இரவு பத்தரையாகியிருந்தது. தனது காரை‌யியக்கி வீட்டை‌ அடைந்தாள். வீட்டின் சாவியை மறந்து தனது மருத்துவமனை அறையிலேயே விட்டுவந்துவிட்டாள். தனது வீட்டில் வேலை செய்யும் உறவுக்கார மற்றும் நம்பிக்கையான பெண் கலைவாணியிடம் ஒரு சாவி அவசரத்திற்கு கொடுத்து வைத்திருந்தாள்.

கலைவாணியும் சரஸ்வதியும் சமவயதுப் பெண்கள். கலைவாணியின் குடும்பம் பொருளாதார வசதி இல்லாமல் கஷ்டப்படும் குடும்பம். சரஸ்வதியும்,கலைவாணியும் சிறுவயதில் ஒரே பள்ளியில் படித்தாலும் கலைவாணி பாதியில் படிப்பை நிறுத்தவேண்டிய சூழ்நிலை வந்தது. அதற்குக் காரணம் கலைவாணியின் குடிகாரத் தந்தையின் திடீர் மரணம். கலைவாணியின் தாயும் அதைத் தொடர்ந்து இரண்டே வருடங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அதிலிருந்து கலைவாணி சரஸ்வதியின் பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தாள். பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு சரஸ்வதியின் வீட்டிலேயே இருந்தாள். சரஸ்வதியின் பெற்றோர் கலைவாணிக்கு நல்ல வரனாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். சரஸ்வதிக்கும் மாப்பிள்ளை பார்த்தனர் ஆனால் அவள் வந்த வரன்களையெல்லாம் வேண்டாமென சொல்லிவிட்டாள். தான் மேலும் படிக்க வேண்டும்‌ எனக்கூறிவிட்டாள். தற்போது கலைவாணிக்கு திருமணமாகி ஒரு வருடமாகிவிட்டது.

சரஸ்வதி முழு நேர மருத்துவராக மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தாள். கலைவாணியிடம் வீட்டின் சாவியை கேட்க தனது அலைபேசியில் அழைத்தாள் கலைவாணி அழைப்பை ஏற்கவில்லை. சரஸ்வதியின் பெற்றோர் சுற்றுலா சென்றுவிட்டனர்.வருவதற்கு பத்து நாட்களாகும். இரண்டு தெருக்கள் தள்ளி கலைவாணியின் வீடு இருப்பதால் அங்கு சென்று வாங்கிவர எண்ணினாள் சரஸ்வதி. சரஸ்வதி கலைவாணியின் வீட்டை அடைந்த சமயம் அங்கு விளக்குகள் அணைந்திருந்தது. சரஸ்வதி மெதுவாக சன்னலோரம் செல்லும் போது அவர்கள் அந்தரங்கமாக இருப்பதை பார்த்து விட்டாள். சரஸ்வதிக்கு மனதில் கல்யாண ஆசை துளிர்விட்டது. வேகமாக அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.அவர்களை இந்த நேரத்தில் தொந்தரவு செய்யக்கூடாது என்றாலும் தனக்கு வீட்டின் சாவி வேண்டும் என்ற நிர்பந்தத்தால் கலைவாணியின் வீட்டுக் கதவை தட்டினாள் சரஸ்வதி.

கலைவாணியும் அவள் கணவனும் திடுக்கிட்டு வெளியே வந்து பார்த்தால் வெளியே சரஸ்வதி கோட்டோடு நின்றிருந்தாள். " என்ன அக்கா, இந்த நேரத்தில?" என்றாள் கலைவாணி. " பதறவேண்டாம் கலை. நான் க்ளினிக்ல புறப்பட்டப்போ ஒரு பாட்டி வந்ததால அவங்களுக்கு மருந்து கொடுத்திட்டு அவசரமாக கிளம்பினேன் கிளம்பினப்போ எனது வீட்டு சாவியை மறதியாக மேஜை மீதே விட்டுட்டு வந்துட்டேன்" என்று தலையை

 தேய்த்தபடியே சொன்னாள் சரஸ்வதி.

" சரி சரி அக்கா, இவ்ளோ தானா, இருங்க உங்க சாவிய எடுத்திட்டு வர்றேன்" என்று கூறிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் கலைவாணி. வீட்டிலிருந்து சரஸ்வதியின் வீட்டு சாவியை எடுத்துக்கொண்டு சரஸ்வதியுடன் புறப்பட்டாள் கலைவாணி. "இல்ல கலை. சாவிய மட்டும் கொடு நான் போய்கரேன்" என்றாள் சரஸ்வதி. "இல்லக்கா, வழியில நாய் தொல்லை அதிகம் அதனால நான் எதுக்கும் துணைக்கு வருகிறேன்" என்றால் கலைவாணி. "என்னங்க..நான் ராத்திரி சரஸ்வதி அக்கா கூடயே அவங்களுக்கு துணையாக இருந்திட்டு காலைல‌ வர்றேன்" என்று தன் கணவனிடம் கூறிவிட்டு சென்றாள்.

கலைவாணி சிறுவயதிலிருந்து அதே ஊரில் வளர்ந்தவள் என்பதால் அவளுக்கு அங்கு அனைவரையும் தெரியும். ஆனால் சரஸ்வதி அவ்வூரில் பிறந்திருந்தாலும் படிப்பு,கல்லூரி என நகரங்களிலேயே வாழ்ந்தவள். ஆனால் கலைவாணி,சரஸ்வதியின் நட்பு மட்டும் தொடர்ந்து கொண்டு இருந்தது. என்ன தான் சரஸ்வதி படித்திருந்தாலும் நடைமுறை விசயங்கள் அவளுக்கு ‌அவ்வளவாக தெரியாது. கலைவாணி தான் அவளுக்கு எல்லாம் செய்து கொடுப்பாள்.

கலைவாணி தனக்கு சரஸ்வதியின் பெற்றோர் அளித்த வாழ்க்கைக்கு நன்றியாக சரஸ்வதிக்கு தேவையான எல்லா வேலைகளையும் செய்தாள். அவ்வப்பொழுது சரஸ்வதி தன் தோழி இதையெல்லாம் செய்வது தனக்கு பிடிக்கவில்லை என கூறியும் கலைவாணி கேட்க வில்லை. " நான் உனக்காக செய்யவில்லை உன் அப்பா அம்மா எனக்கு கொடுத்த‌ வாழ்க்கைக்காக செய்கிறேன்.அன்னிக்கு என் அப்பாவும் அம்மாவும் இறந்தப்ப அவங்க என்ன கைவிட்டிருந்தா இந்நேரம் என்னோட நிலைமை என்னவாயிருக்குமுன்னு எனக்கு இப்ப நினைச்சா கூட பயமா இருக்குது"என்பாள்.

சரஸ்வதி அவளது புராணத்தை கேட்டு அழுத்துப்போய் தூங்கியே விடுவாள். அன்று கலைவாணியும் சரஸ்வதியும் சரஸ்வதியின் இல்லத்திலேயே தங்கி விட்டனர். சரஸ்வதி கலைவாணியிடம் "நாம ரெண்டு பேரும் சேர்ந்து தூங்கி எத்தன வருஷமாச்சு"என்றாள். இருவரும் பேசிக்கொண்டே இருந்தனர். சரஸ்வதி தனக்கு தூக்கம் வரவில்லை எனவும் ஏதேனும் திகில் படம் பார்க்கப் போவதாகவும் கூறிச்சென்றாள். சரஸ்வதியின் அறையில் சுவற்றை ஒட்டிய பெரிய திரை தொலைகாட்சியிருக்கிறது. அதை வீட்டுவேலை செய்யும் போதெல்லாம் கலைவாணி அதில் படம் பார்த்தால் நன்றாயிருக்கும் என்று நினைப்பாள். ஆனால் பாவம்‌ அவளுக்கு அந்த தொலைக்காட்சியை இயக்கத் தெரியாது. இப்போது சரஸ்வதி அதில் படம் காட்டப்போகிறாள் என்றவுடன் ஒரே ஆனந்தம் கலைவாணிக்கு. "அக்கா , எனக்கும் தூக்கம் வரல" நானும் படம் பார்க்க வருகிறேன் என்றாள்".

 

  இருவரும் படம் பார்க்க அமர்ந்தனர். சரஸ்வதி அமேசான் தளத்தில் புதிதாக வெளியான ஒரு திகில் படத்தைப்போட்டாள் அதில் வந்த சில காட்சிகள் கலைவாணியை பயமுறுத்தினாலும் சரஸ்வதியின் துணையோடு அவள் அதைப் பார்த்தாள்.அந்த படத்தில் ஒரு கயவன் சொத்துத் தகராறில் ஒரு பெண்ணைக் கொன்று அந்த பெண்ணின் சடலத்தை உருத்தெரியாமல் எரிக்க இடுகாட்டுக்கு கொண்டு செல்கிறான் அப்போது அங்கிருந்த வெட்டியானிடம் லஞ்சம் கொடுத்து அந்த பெண் சடலத்தை எரிக்கச் சொல்கிறான். சடலத்தை எரிக்க அவர்கள் எத்தனித்த போது அங்கு வானத்திற்கும் பூமிக்குமாக ஒரு பெரிய பெண்ணின் முகம் தோன்றியது.அந்த முகத்தை பார்க்கவே பயங்கரமாக இருந்தது.கலைவாணி தன் கண்களை மூடிக்கொண்டாள் ஆனால் சரஸ்வதி மும்மரமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

 அந்த முகத்தில் ஆங்காங்கே வெடிப்புக்களும் ரத்தக்காயங்களும் இருந்தன. திடீரென அந்த முகம் தன் வாய் திறந்து பேச ஆரம்பித்தது. அதன் வாயில் அனைத்து பற்களும் சுறாமீனின் பற்களை போல் கோரை பற்களாக இருந்தது. அந்த பேய் சொன்னது " எனது உடல் எரியும் முன் நீங்களிருவரும் எரிந்து சாம்பலாக போகிறீர்கள்" எனக் கூறி தனது விழிகளை அகன்று விழித்தது. உடனே அந்த கண்களிலிருந்து நெருப்பு வரத்தொடங்கியது. அந்த கயவனும், வெட்டியானும் பயந்து ஓடினர் ஆனால் அவர்களால் தப்பிக்கவியலவில்லை. அவர்கள் இருவரும் எரிந்து சாம்பலானார்கள். இதை மிகவும் விறுவிறுப்பாக இருவரும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

  இதன் பின் ஒருவழியாக படம் முடிவுக்கு வரவே, இருவரும் தூங்கிவிட்டனர். கலைவாணி இதற்கு முன் இது போன்ற பெரிய திரையில் படம் பார்த்ததில்லை என்பதால் அந்த காட்சிகள் அவள் மனத்தில் பதிந்து விட்டது. கலைவாணி திடீரென திடுக்கிட்டு கத்தி கூச்சலிட்டு எழுந்தாள். சரஸ்வதி எழுந்து பதற்றத்தோடுயிருந்த கலைவாணியை தெளிவித்து கேட்ட போது, இரவு ஆழ்ந்த உறக்கத்தில் அவளிருந்த போது கனவில் படத்தில் பார்த்த உருவத்தைப் போலவே ஒரு உருவத்தை கண்டதாகவும், அவ்வுருவம் நெருப்பை கக்கிக் கொண்டு தன்னை துரத்தியதாகவும் தெரிவித்தாள்.

சரஸ்வதி மருத்துவராதலால் கலைவாணியின் நிலைமையை புரிந்து கொண்டு தான் செய்த தவறை புரிந்துகொண்டாள். மேலும் கலைவாணியை சரஸ்வதி பரிசோதித்த போது கலைவாணி தாயாகும் அறிகுறிகளைக் கண்டறிந்து மகிழ்ச்சியுற்றாள். அப்போது எதுவும் கலைவாணியிடம் சொல்லாமல் அவளை அமைதியாக உறங்கவிட்டு காலையில் கலைவாணியிடம் ஒரு சூடான காபியைக் கொடுத்து கலைவாணியிடம் அந்த நல்ல செய்தியை பகிர்ந்தாள். கலைவாணியால் சந்தோஷத்தை தாங்க முடியவில்லை. தனது கணவனிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளத் தன் வீட்டுக்கு விரைந்தாள்.

  வீட்டில் கணவனிடம் கலைவாணி விசியத்தை சொல்லவே அவள் கணவன் ஆனந்தத்தோடு இனிப்புகளை வாங்கிக்கொண்டு சரஸ்வதியின் வீட்டிற்கு சென்று சரஸ்வதிக்கு இனிப்புகளை வழங்கினார். சரஸ்வதி, கலைவாணியை நன்றாக கவனித்து கொள்ளும் படி அவள் கணவனுக்கு அறிவுரைகளை வழங்கினாள். அவ்வப்பொழுது மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வருமாறும் கூறினாள். நாட்கள் நகர்ந்தது. சுற்றுலா முடிந்து வந்த பெற்றோர் விசியமறிந்து கலைவாணிக்கு நல்ல முறையில் சீமந்தமும் செய்து வைத்து மிகுந்த அக்கரையுடன் கவனித்தனர்.கலைவாணிக்கு மாதம் நெருங்கியது. சரஸ்வதி கலைவாணிக்கு அவ்வப்பொழுது இலவசமாக சிகிச்சைகள் செய்து, தக்க அறிவுரையும் வழங்கி இறுதியில் பிரசவமும் இலவசமாகச் செய்தாள்.

கலைவாணிக்கு பெண்பிள்ளை பிறந்தது. சரஸ்வதியின் தூய்மையான சேவைக்காக கலைவாணியின் கணவன் சரஸ்வதிக்கு பரிசு கொடுக்க எண்ணி தன்னால் இயன்ற ஒரு கிராம் தங்கத்தை வழங்கினான். அதனை மனதளவில் ஏற்றுக் கொண்ட சரஸ்வதி, அதனை அந்த பெண் குழந்தைக்கு என்றே வைத்திருந்தாள். கலைவாணியும் அவள் கணவனும் தங்கள் குழந்தைக்கு சரஸ்வதியே ஒரு நல்ல பெயரை வைக்க வேண்டியதையடுத்து, சரஸ்வதி அந்த குழந்தைக்கு இரண்டு கிராம் தங்க காசை அன்பளிப்பாக வைத்து 'மஹா ஸ்வேதா' என்ற பெயரையும் சூட்டி மகிழ்ந்தாள். மற்றொரு புறம், தாய்மையின் ஆனந்தத்தை உணர்ந்த சரஸ்வதி தன் பெற்றோரிடம் திருமணத்திற்கு சம்மதமும் தெரிவித்தாள்.

****முற்றும்****

சந்திரஜாலம்

சிறுகதை போட்டிக்காக நான் எழுதிய சிறுகதை

                                                            சந்திரஜாலம்

     சந்துரு (எ) சந்திரன் திருமண வயதையடைந்த ஆண் மகன். பெயருக்கு ஏற்ப வசீகரமான முகம், வாட்டசாட்டமான உடலமைப்பையும் கொண்டிருந்தான். அவனுக்கு வாழ்வில் அனைத்தும் கிடைத்தது. வசதியான குடும்பம்.அக்கறையான பெற்றோர் மற்றும் உறவினர்கள். நன்றாக படித்து மென்பொருள் துறையில் நல்ல வேலையிலும் அமர்ந்தான்.அவனுக்கு பல பெண் நண்பர்களும் இருந்தனர். அவனை பல பெண்கள் விரும்பினாலும் இவன் மட்டும் யாரையும் விரும்பவில்லை.

பெற்றோர் பார்த்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாக தன்னிடம் காதலை வெளிப்படுத்திய இளம் பெண்களிடம் கூறிவிட்டான்.சந்துருவிற்கு பெண் கொடுக்க பல குடும்பங்கள் போட்டி போட்டுக்கொண்டு இருந்தனர். இதற்கிடையில், சந்துருவிக்கு தனது வருங்கால மனைவியைப் பற்றின கற்பனையெல்லாம் இல்லாமலில்லை. பெற்றோரிடம் சொல்லத் தயங்கினாலும் தனது கனவுக்கன்னியை மானசீகமாக ஆராதித்து வந்தான்.

இவ்வாறு இருக்கையில் அவனது பெற்றோருக்கு ஒரு ஜாதகம் வந்தது. மகனுடன் கலந்தாலோசித்த பெற்றோர் பெண்ணின் புகைபடத்தை அவனிடம் காட்டினர். சந்திரனுக்கு பிடித்தும் போனது. பெண் வீட்டாரும் சம்மதம் சொல்ல சந்திரனுக்கு திருமணம் கை கூடியது. திருமணம் உறவும், நட்பும் சூழ பெரிய திருவிழாவைப் போல் நடந்தது.

சந்திரனின் மனைவி சுமதி பெயருக்கேற்ப நல்ல புத்திசாலியாகவும்,ரூபவதியாகவும் இருந்தாள். சுமதி சந்திரனை மிகவும் நேசித்தாள்..சந்துரு தனது ஆசைகளையெல்லாம் அவள் மேல் பூக்களைச் போல் வாரி இறைத்தான்.

 சுமதி நல்ல மனைவியாகவும்,மருமகளாகவும் தனது கடமைகளைச் செய்து வந்தாள்.

பல மாதங்கள் கடந்து நாள்கள் நகர்ந்தன. சமுதாயம் சும்மா விடுமா? சந்திரனின் பெற்றோர்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் ஏதேனும் விசேஷமுண்டா எனக்கேட்டு நச்சரித்தனர். சந்திரனின் தாயார் சந்திரனிடம் சுமதியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லச் சொன்னார். சந்திரனும் தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அங்கு மகளிர் நல மருத்துவர் சுமதியின் உடலை பரிசோதித்து விட்டு சந்திரனிடம் ரகசியமாக சுமதிக்கு இருக்கும் மரபணு சார்ந்த நோயைப் பற்றி விளக்கினார். இதனால் சுமதி என்றைக்கும் குழந்தை பெற முடியாது என்றும், நாளடைவில் தாம்பத்ய சுகத்தைக் கூட அவளால் துய்க்கவும்,‌ கொடுக்கவும் இயலாமல் போகும் என்ற உண்மையை சந்திரனிடம் கூறினார். சந்துரு இடிந்து போனான்

இதை ரகசியமாக காக்க வேண்டுமென சந்துரு முடிவு செய்தான். ஏனெனில், சுமதியின் குழந்தை பெறும் நம்பிக்கையை உடைக்க அவனுக்கு மனமில்லை. அதே சமயத்தில், அவளது உடலால் தாம்பத்ய சுகத்தையும் சந்திரனுக்கு தரவியலவில்லை. சந்துரு தனது மனைவியை வெறுக்க மனமில்லாமல் அவளிடம் இயல்பாக இருந்தான். சுமதியும் அவள் அத்தையும் கோவில் கோவிலாக சென்று குழந்தை வரத்துக்காக பிரார்த்தனைகள் செய்த வண்ணமிருந்தனர்.

    இந்நிலையில், சந்திரனுக்கு தனது உடலின் இச்சையை திருப்திப்படுத்த இயலாமல் தவித்தான். அவர்களது பெரிய வீட்டை சுத்தம் செய்ய ஒரு பெண்ணை சந்திரனின் தாயார் வைத்திருந்தார். ஒரு ஞாயிறு அன்று ஒரு பெண் வீட்டை சுத்தம் செய்ய வந்தாள். அப்போது தான் சந்துரு அந்த பெண்ணைப் முதல் முறையாகப் பார்த்தான். அவளின் பெயர் செல்வி.  சந்திரனுக்கு அப்பெண்ணை பார்த்ததும் உடலெங்கும் காமத்தீ பரவியது.

 எப்படியாவது தனது இச்சையை அவளிடம் தீர்த்துக்கொள்ள எண்ணினான். அவளை ரகசியமாக கவனிக்கத் தொடங்கினான்.வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தான் அவளை நெருங்கவியலும் என்றுணர்ந்த சந்துரு ஒரு திட்டம் தீட்டினான்.

  அவனது பெற்றோர் ரொம்ப நாட்களாக காசி யாத்திரை பற்றி பேசிக் கொண்டிருந்ததை தொடர்ந்து அவர்களைப் புனித யாத்திரை அனுப்ப முடிவு செய்தான். தானே முழு செலவையும் ஏற்றுக்கொண்டதோடு இருப்பதிலேயே மிகவும் வசதியான பயண நிறுவனத்தை அணுகி தன் பெற்றோரின் யாத்திரைக்கு ஏற்பாடு செய்தான். முப்பது நாட்கள் யாத்திரை அது. சார்தாமில் தொடங்கி காசி வரை ஏற்பாடானது. அவனது பெற்றோரிடம் திடீரென யாத்திரைக்கான விவரங்களைப் பகிர்ந்தான். அவர்களும் தங்கள் மகனின் குணத்தை எண்ணிப் பெருமையோடு யாத்திரைக்கு புறப்பட்டனர்.

ஒருவழியாக பெற்றோரை அனுப்பிய சந்துரு மனைவியையும் தன் அப்பா வீட்டுக்கு அனுப்பத் திட்டம் தீட்டினான். சுமதியிடம் மாமா வீட்டுக்கு செல்லலாம் எனக் கூறி அவளை அழைத்துச் சென்றான். அங்கு சென்றதும் சுமதிக்கு சில நாட்கள் தனது தாயுடன் இருக்க ஆசை வந்தது.

 இதையே காரணம் காட்டி, அவளை அங்கேயே இருக்க வைத்துவிட்டு ஊர் திரும்பினான். தற்போது வீட்டில் சந்துரு மட்டும் தான். எப்பவும் போல செல்வி தனது வேலைக்கு வந்தாள். சந்துரு அந்நாளில் அலுவலகத்திற்கு விடுப்பெடுத்துக் கொண்டான். சமையலறையில் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த செல்வியைப் பார்த்து தனது அறையில் நிறைய துணிகள் இருப்பதாகவும் வந்து எடுத்துப்போகச் சொன்னான். அவளும் யதார்த்தமாக சந்திரனின் அறைக்குள் செல்ல சந்துரு அறையை தாழிட்டான். செல்வி பதற்றமடைந்தாள். ஐயா துணி எடுக்கத்தானே சொன்னீர்கள் தற்போது ஏன் கதவை தாழிட்டீர்கள் எனக்கேட்டாள். அதற்கு சந்துரு அவளோடு சிறிது பேச வேண்டும் என்றான். அப்பாவியான அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் காட்டி, பணம் நிறையத் தருவதாக சொல்லி தனது ஆசைக்கு இணங்குமாறு வேண்டினான். ஆனால் அவள் இதெல்லாம் தவறு எனவும், தனது கணவருக்கு தான் துரோகம் செய்யக் கூடாது எனவும் கதறினாள். ஆனால் சந்துரு பலவந்தமான முறையில் அவளை தனது கட்டிலில் தள்ளினான். அவளின் புடவையை மெல்ல விலக்கினான். செல்வி பயந்திருந்தாலும் சந்திரனின் கை பட்டதும் இன்ப வெள்ளத்தில் தத்தளித்தவாறு இருந்தாள். புலியிடம் அகப்பட்ட மானைப் போல் செய்வதறியாது கிடந்தாள்.

இதற்கிடையில், வீட்டில் யாருமிருக்க மாட்டார்கள் என்றெண்ணிய சுமதி கணவனின் வீட்டுக்கு திடீரென வந்தடைந்தாள். வந்தவள், வாசலில் சந்திரனின் மகிழுந்து நிற்பதைக் கண்டாள். மெல்ல சென்று வாயிற் படியில் நின்ற போது அங்கு வேலைக்காரி செல்வியின் காலணிகள் மற்றும் அவள் தினமும் கொண்டு வரும் சாப்பாட்டுக் கூடையிருந்தது. சந்தேகமடைந்த சுமதி சற்று தூரம் திரும்பி வந்து சந்திரனை அலைபேசியில் தொடர்பு கொண்டாள். அப்போது சந்துரு தான் அலுவலகத்தில் அவசர வேலையாக இருப்பதாக பதற்றத்தோடு கூறி அழைப்பைத் துண்டித்தான். சந்துரு வீட்டிலிருப்பதை உறுதி செய்த சுமதி வீட்டைச் சுற்றி வர, வீட்டின் பின்னாலுள்ள படுக்கையறை ஜன்னலோரம் கிசு கிசு சத்தம் கேட்க அங்கு சென்று தங்கள் வீட்டுப் படுக்கை அறை சுவற்றிலிருக்கும் சிறிய துவாரத்தின் வழியாக பார்த்தபோது சுமதி பதறிவிட்டாள். தன் அன்பிற்குரிய கணவன் வேலைக்காரியின் புடவையை அவிழ்த்தவண்ணம் கிடப்பதைக்கண்டு மனமுடைந்தாள். அழுதே விட்டாள். கண்களை துடைத்துக்கொண்டு யாருமறியாமல் அங்கிருந்து வெளியேறி தன் அம்மா வீட்டிற்கே சென்றுவிட்டாள். தனது வேதனையை தன் பெற்றோரிடம் சுமதி பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. தானே ஒரு மருத்துவரை அணுகி தனக்கிருக்கும் நோயைப் பற்றி அறிந்து கொண்டாள். சந்துரு வீட்டில் அவள் பார்த்த காட்சிகள் அவள் மனதில் ஆழ்ந்த வடுக்களை உண்டாக்கினாலும் சந்திரனின் மேலிருந்த காதல் சிறிதும் கூட குறையவில்லை. சந்திரனின் திட்டமனைத்தும் சுமதிக்கு புரிந்துவிட்டது. ஏன் போனவுடனே திரும்பி விட்டாய் என்று கேட்கக்கூடிய தன் அம்மாவிடம் என்ன சொல்வதென திகைத்த சுமதிக்கு வாட்சப்பில் ஒரு நெருங்கிய சித்தப்பா முறையானவர் மறைந்த தகவல் காரணமாய் அமைந்தது. மறுபுறம்,  சந்துரு செல்வியை ஆரத்தழுவி தன் தாகத்தைத்தீர்த்துக்கொண்டான். " ஐயா, வயிற்றை கழுவுவதற்காக வேலைக்கு வருகிறோம் ஏன் இப்படி மிருகத்தனமாக நடந்து கொண்டீர்கள்” என சந்திரனை திட்டி தீர்த்தாள். தான் கலங்கப்பட்டு விட்டதாக கதறினாள்.கற்பை பறிகொடுத்த செல்வி செய்வதறியாமல் இங்குமங்கும் ஓடினாள். சந்துரு எவ்வளவு காசை அள்ளி வீசியும் அவள் கேட்கவில்லை. கடைசியில் சமையலறையிலிருந்த கத்தியை எடுத்து தன் வயிற்றில் தானே குத்திக்கொண்டு "உன்னை பழி தீர்ப்பேன்" எனக்கூறிக் கொண்டே சுருண்டு விழுந்தாள் செல்வி. ரத்த வெள்ளமோடியது. ஆறாக ஓடும் ரத்தத்தை கண்டதும் சந்திரனுக்கு பயம் தொற்றிக்கொண்டது.

உடல் இச்சையைத் தீர்த்துக்கொள்ள ஆசைப்பட்டு இப்படியொரு பாதகம் செய்து விட்டோமே என குமிறி குமிறி அழுதான். செல்வியின் உயிர் காற்றில் கரைந்திருந்தது. சந்துரு ரத்தத்தை சுத்தம் செய்து, நள்ளிரவு வரை பிணத்தை தனது அறையில் வைத்திருந்து, நள்ளிரவில் தனது மகிழ்வுந்தில் பிணத்தையேற்றி பக்கத்து

 கிராமத்திலுள்ள சுடுகாட்டுக்கு சென்று பிணத்தை எரிக்கத் திட்டமிட்டான்.

 

    திட்டத்தின்படி நள்ளிரவில் சுடுகாட்டையடைந்தான். அன்று அமாவாசை. சுற்றியும் கும் இருட்டு. சுற்றிலும் மரங்கள் வேறு. பிணத்தை சுமக்க முடியாமல் சுமந்து வந்த சந்திரனை எதிர்பாராத விதமாக அங்கு சுடுகாட்டு வெட்டியான் ஒருவன் இவன் பிணத்தோடு வருவதைப் பார்த்து இவனை நெருங்கி வந்தான்.

 வெட்டியானை பார்த்த பயத்தில் நடந்த உண்மையை உளறிவிட்டான் சந்திரன்.

வெட்டியானுக்கு தன் சட்டைப்பையிலிருந்த இரண்டாயிரம் ரூபாய் கட்டை நீட்டினான். வெட்டியான் முதலில் அதை வாங்க மறுத்தாலும் தனது குழந்தையின் படிப்புச் செலவை மனதில் கொண்டு அதைப் பெற்றுக் கொண்டான். பிணத்தைக் காலைக்குள் உருத்தெரியாமல் எரியவிடுவதாகவும் வாக்களித்தான்.சந்திரனும், வெட்டியானும் பிணத்தை எரிக்கத்தொடங்கியவுடன் திடீரென வானத்துக்கும் பூமிக்கும் ஓர் முகம் போன்ற உருவம் தோன்றி "அவனை பழி தீர்ப்பேன்" என இடியாக முழங்கி மறைந்தது. வெட்டியான் மயங்கி விழுந்தான்.பிணம் முழுவதும் எரிந்து சாம்பலானது. சந்துரு பதற்றத்தில் எப்படியோ காரை பிடித்து வீடு வந்து சேர்ந்தான். அப்போது அதிகாலை மூன்று மணி.தண்ணீரை கபக் கபக் கெனக் குடித்தான். பயத்தில் உறங்கியே விட்டான்.

இதற்கிடையில், காசியில் சந்திரனின் பெற்றோர் அங்கு நடந்து கொண்டிருந்த மகா ம்ருத்யூந் ஜய ஹோமத்தில் பங்கெடுத்தனர். அவர்கள் தங்களது மகனின் பூரண ஆயுளுக்காக யதார்த்தமாக பூஜை செய்தனர். அந்த மகாயாகத்தின் பலனாகவும் சுமதியின் பதி பக்தியின் பலத்தாலும் அந்தப் பேய் தூங்கிக்கொண்டிருந்த சந்திரனின் கனவில் தோன்றி அவனுக்கு உயிர் பிச்சையளிப்பதாகவும் ஆனால், அவன் செய்த பாவத்திற்கு ப்ராயச்சித்தமாக ஓர் அனாதைக் குழந்தையை தத்தெடுத்து அதற்கு செல்வி என்ற பெயரை வைத்து வளர்க்க ஆணையிட்டது. சந்துரு திடுக்கிட்டு எழுந்தான். மணி காலை ஏழாகியிருந்தது.

நாட்கள் உருண்டோடியது. சுமதி எதுவும் அறியாதது போல் வீட்டிற்கு வந்தாள். சந்துரு மனம் பொறுக்காமல் உண்மையை சுமதியிடம் உரைத்தான். சந்திரனின் பெற்றோரும் யாத்திரை முடிந்து வீடு திரும்பினர். பெற்றோர் சம்மதத்தோடு இருவரும் ஓர் பெண் குழந்தையை அரசாங்க விதிமுறைகளின் படி தத்தெடுத்து‌ அதற்கு செல்வி எனப் பெயரிட்டு வளர்த்தனர்.

***சுபம்***

   

                               



Saturday 28 November 2020

கொரானா காலத்தில் குருவாயூர் யாத்திரை

  வணக்கம் நண்பர்களே,

                          எனக்கு கடந்த புதன்(25/11/2020) அன்று குருவாயூருக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது.நவம்பர் ஐந்தாம் தேதி எனது திறன்பேசி(smart phone) மூலம் குருவாயூர் கோவிலின் வலைதளத்தைப் பார்த்து, ஏதோ ஆர்வத்தில் எனக்கான தரிசன சீட்டையும் பதிவு செய்து விட்டேன். குருவாயூர் ஏகாதசி இம்மாதம் 25/11/2020 அன்று வருகிறது என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததால் ஒருமுறை அதை உறுதிப்படுத்திக்கொண்டு, 25 ஆம் தேதி குருவாயூருக்கு என முன்பதிவு செய்தேன்.

       இதைத் தொடர்ந்து, ஏழாம் தேதி ஒரு பக்தரிடம் இந்த விவரத்தைக் கூறி அவருக்கும் அதே நாளுக்கு முன்பதிவு செய்தேன். நாட்கள் செல்லச் செல்ல யாத்திரைக்கு இருவரும் தயாரானோம். 25ஆம் தேதியன்று காலை பதினோரு மணி எங்களது தரிசனத்திற்கான நேரம் என சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.  அதற்கு ஏற்றாற்போல் பயணத்தையமைக்கத் திட்டமிட்டு 25 ஆம் தேதி காலை ஆறு மணிக்கு வாளையாரை அடைந்து அதன்பின், பாலக்காடு பேருந்து ஏற திட்டமிட்டிருந்தோம். 23 ஆம் தேதி திங்கள் மாலை வரை இது தான் எங்களது திட்டமாக இருந்தது. ஆனால் திடீரென திங்களன்று மாலை அந்த திட்டம் மாறியது. மேலே சொன்ன பக்தர் தனது கேரள நண்பர்களிடம் விசாரித்த போது பேருந்தை நம்ப வேண்டாம் எனக்கூறியதையடுத்து அவர் ரயிலுக்கு முன்பதிவு செய்யலாமென பரிந்துரைத்தார். உடனே ரயில் நிலையத்திற்கு விரைந்து பட்டாம்பி வரை முன்பதிவு செய்ய முற்பட்டோம் ஆனால், பட்டாம்பி வரை முன்பதிவு செய்ய இயலவில்லை. எனவே பாலக்காடு வரை முன்பதிவு செய்தோம். சென்னையிலிருந்து மங்களூர் செல்லும் அதிவிரைவு ரயிலில் இடம் கிடைத்தது.

        25ஆம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு ரயிலேற வேண்டும். நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து ரயில்நிலையம் 2.5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. எனவே, 25 ஆம் தேதி காலையில் 2:30 மணியளவில் நடக்க ஆரம்பித்து அரை மணி நேர நடையில்  ரயில் நிலையத்தையடைந்தோம். பின், உரிய தளத்திற்கு சென்று காத்திருந்த பின் நான்கு மணியளவில் ரயிலில் ஏறினோம். ஒரு மணி நேர பயணத்தின் விளைவாக காலை ஐந்து மணிக்கு பாலக்காட்டையடைந்தோம்.

   பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு ஐந்து கிலோ மீட்டர் செல்ல வேண்டும். அதற்கு பேருந்து கிடைக்க அரை மணி நேர தவம். பின் அங்கிருந்து பாலக்காடு பேருந்து நிலையத்துக்குச் சென்று திருச்சூர் பேருந்தைப் பிடித்து சுமார் இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு எட்டு மணியளவில் திருச்சூரை அடைந்தோம். திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து குருவாயூருக்கு நிறைய பேருந்துகள் உள்ளன. 1:15 மணி நேர பயணம் செய்து காலை 9:15 மணிக்கு குருவாயூரை அடைந்தோம். குருவாயூரில், தேவஸ்தான யாத்ரிகர் சௌகர்ய நிலையத்தில் குளித்துவிட்டு, நடைப்பயணமாக மம்மீயூர் மகாதேவனை தரிசிக்கச் சென்றோம். காலை பத்து மணியளவில் மம்மீயூரை அடைந்து மம்மீயூரப்பனையும்,மகா விஷ்ணுவையும் தரிசித்து, ஆலய த்வஜஸ்தம்ப (கொடிமரம்) பிரகாரத்தில் மகாவிஷ்ணு சந்நிதி முன்னமர்ந்து ஒரு பதினைந்து நிமிடங்கள் திருநாம சங்கீர்த்தனம் செய்து விட்டு பத்தே முக்கால் மணிக்கு மீண்டும் குருவாயூரை நோக்கி வந்து, தரிசனத்திற்கான வரிசையில் எங்களது இணையவழி தரிசன முன்பதிவு சீட்டை எடுத்துக் கொண்டு நின்றோம். தரிசனத்திற்கு செல்லும் போது எவ்வித மின்னணு சாதனங்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. கைப்பை முதலிய எதையும் அனுமதிப்பதில்லை. ஆண்கள் வேஷ்டியுடனும், பெண்கள் சம்பிரதாய உடைகளுடன் அனுமதிக்கப்படுகிறார்கள். 

      ஆண்கள், மேல் சட்டையை வரிசையில் காத்திருக்கும் போது மட்டும் அணியலாம். தரிசனத்திற்கு செல்லும் போது சட்டையைக் கழற்றி விட வேண்டும். காலை பதினோரு மணிக்கு வரிசையில் நின்று நாங்கள் மதியம் மூன்றே கால் மணிக்குத் தான் குருவாயூரப்பனைக் கண்டோம்.. வரிசையில் காத்திருந்த போது பக்தர்கள் சிலர் சேர்ந்து சத்தமாக நாம சங்கீர்த்தனம்  செய்தோம். நாங்கள் பாடிய பஜனை வரிகள் குருவாயூரப்பனின் பரமபக்தரான பூந்தானம் அருளிய,

" கிருஷ்ண கிருஷ்ணா முகுந்தா ஜனார்தநா

                               கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே

    அச்சுதானந்த கோவிந்த மாதவ

                                சச்சிதானந்த நாராயணா ஹரே"


     குருவாயூரப்பன் சங்கம்,சக்ரம், கதா,பத்மம் தாங்கி தரிசனமளித்தான்.       நல்ல தரிசனம் தான். நாலம்பலத்தில் அனுமதிக்காதது சற்று ஏமாற்றமாக இருந்தது. குருவாயூர் அப்பனின் கர்பகிரஹம் இருக்கும் இடம்   'ஸ்ரீ கோவில்' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்ரீ கோவிலைச் சுற்றியுள்ள முதல் பிரகாரமே நாலம்பலம் என்றழைக்கப்படுகிறது. பொதுவாக பக்தர்கள் இந்த நாலம்பலத்தில் சென்று குருவாயூரப்பனை தரிசனம் செய்வார்கள். ஆனால், தற்போது நோய் அச்சுறுத்தல் காரணமாக நாலம்பலத்தில் யாரையும் அனுமதிப்பதில்லை.

         தரிசனத்தைத் தொடர்ந்து த்வஜஸ்தம்ப பிரகாரத்தை வலம் வந்து  வெளியேவந்தோம்.  வெளியே இன்னும் கூட்டம் குறைந்தபாடில்லை...குருவாயூரப்பனுக்கும் கேரள மக்களுக்கும் என்ன அப்படியோர் பந்தமோ என எண்ணி பொறாமை கொள்ளச் செய்கிறது. அப்பனுக்கு காணிக்கையாக ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதை சமர்ப்பிக்கிறார்கள். அப்பப்பா, எத்தனை தார் தாராக பழங்கள், கனிவகைகள், பூக்கள், மூட்டை மூட்டையாக தானியங்கள் மற்றும் நெய். 

      அதுபோக, விழுந்து விழுந்து நமஸ்காரம் செய்யும் பக்தர்களைக் கண்டாலே நாத்திகனுக்கும் பக்தி வந்துவிடும். இவ்வாறு,  மாயக்கண்ணனின் சாம்ராஜ்யம் அமைதியாக குருவாயூரில் அவன் தலைமையில் அவன் அடியார்களுடன் நடக்கிறது.

          தரிசனம் கிடைத்த பரவசத்தோடு நேரே தெற்கு நடையிலுள்ள பிரசாத கவுண்டருக்கு வந்து பிரசாதம் வாங்க வந்து நின்றோம். அங்கு நான்கு மணிக்குத்தான் பிரசாதம் விநியோகம் தொடங்கும் என்பதைத் தெரிந்து கொண்டு காத்திருந்தோம்.  கவுண்டர் திறந்தவுடன் பிரசாதம் வாங்கி விட்டு பேருந்து ஏறப் புறப்பட்டோம். பாலகாட்டிற்கு பட்டாம்பி வழியாகச் செல்லும் பேருந்தில் ஓடி சென்று ஏறினோம்..அது தான் அன்றைய கடைசி பேருந்தாம். மணி அப்போது மாலை 4:40.


         காலை இரண்டு மணிக்கு கிளம்பியதால் ஏற்பட்ட அசதி காரணமாக சிறிது நேரம் உறங்கி விட்டோம். பேருந்து சொரனுர், ஒட்டபாலம் வழியாக இரவு 7:30 மணிக்கு பாலக்காட்டையடைந்தது.அங்கு இறங்கி கோவை பேருந்தை தேடினோம் கிடைக்கவில்லை. ஒருவரிடம் கேட்டபோது அவர் கோவைக்கு பேருந்து இனி  இல்லை வாளையாருக்கு சென்று போகுமாறு பரிந்துரைத்தார். எனவே வாளையார் பேருந்தைப் பிடிக்க ஆட்டோ பிடித்து அந்த நபர் கூறிய ஸ்டேடியம் பஸ் நிலையத்தையடைந்தோம்.ஆனால், அங்கு வாளையார் செல்லும் அன்றைய கடைசி பேருந்தும் புறப்பட்டுச் சென்றுவிட்டதாக கூறினார்கள்.


          என்னோடு வந்த பக்தர் மனம் தளர்ந்து,உடல் சோர்ந்து விட்டார். அடுத்து என்ன செய்யப் போகிறோம் என தெரியாமல் இருக்கும் சமயத்தில் குருவாயூரப்பன் அருளால் ஒரு சிந்தனை தோன்றியது. ரயில் நிலையம் சென்று ஏதேனும் ஒரு சிறப்பு ரயிலிலாவது ஏறி கோவையை அடைந்து விட வேண்டும் என்ற சிந்தனை. சற்றும் தாமதிக்காமல், ஒரு ஆட்டோவைப் பிடித்து உழவக்கோடு ரயில் நிலையத்தையடைந்து பயணச்சீட்டு அலுவலரிடம் விசியத்தைச் சொன்னோம்.


      அவர் சார்ட் க்லோஸ்சாகிவிட்டது . இனி தங்களால் ஏதும் உதவ முடியாது என்றார். பின் முன்பதிவு மையத்தில் இருந்த ஒரு இளம் பெண் நாங்கள் பதற்றத்தோடு இருப்பதைப் பார்த்து எங்களையழைத்து எங்கு போக வேண்டும் என்னவாயிற்று என்பதை விசாரித்து உடனே தனது கணினி திரையில் ஏதோ பார்த்த வண்ணம் 'கோவையா?' எனக் கேட்டார்.  நான் ஆம் என்று சொன்னேன். இரண்டு டிக்கெட் மட்டும் படுக்கை வகை பெட்டியில் இருப்பதாகக் கூறினார் அந்த பெண். அந்த பெண் மலையாளம் கலந்த தமிழில் அழகாகப் பேசினாள். ஆனால் அவள் பேச்சை ரசிக்க அப்போதைய சமயம் அனுமதிக்கவில்லை. விலை கொஞ்சம் கூடுதலாக ஆகும் எனக் கூறினாள். மேலும், அடுத்த நாள் அங்கு முழு அடைப்பு நிகழப்போவதாகவும் தெரிவித்தாள். நான் எப்படியாவது வீடு போய் சேர்ந்தால் போதுமென டிக்கெட் போடச்சொன்னேன். அந்த பெண் தொகையைக் கூறியதும் என்னிடம் போதிய பணமில்லை. எனவே, ஏ.டி.எம் சென்று பணம் எடுக்கச் சென்றேன். ஒரு இயந்திரம் இயங்கவில்லை. அருகிலிருந்த இயந்திரத்தில் பணத்தைப் பெற்று முன்பதிவு மையத்திற்கு விரைந்தேன். மணி அப்போது இரவு  8:40. 9:00 மணிக்கு வண்டி வந்துவிடும் என அந்தப் பெண் கூறியிருந்தார்.

       டிக்கெட் தொகையை செலுத்தியவுடன் எங்களுக்கான பயணச்சீட்டை அந்த பெண் அச்சடித்து கொடுத்தார். 'மதியெல்லோ' என மலையாளத்தில் சொல்லி, வண்டி பெங்களூரு செல்லும் சிறப்பு ரயில் எனவும், நான்காவது தளத்தில் சற்று தாமதமாக ஒன்போதரை மணிக்கு வரும் எனவும் பதற்றபடாமல் நிதானமாக செல்லுமாறும் கூறினார். நான், தோளில் எனது துணிப்பையையும், மனதில் அந்த பெண்ணின் முகத்தையும், இனிமையான குரலையும் சுமந்து கொண்டே நான்காம் தளத்தை நோக்கிச் சென்றேன்.


        நானும், என்னுடன் வந்த அந்த பக்தரும் அன்று ஏகாதசி என்பதால் எதுவும் உண்ணவில்லை. நான்காம் தளத்தை அடைந்ததும் எங்களை நாங்கள் ஆஸ்வாஸப்படுத்தி,  ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து குருவாயூரப்பனின் பிரசாதமான ஓர் வாழைப்பழத்தை மட்டும் உண்டோம்.


       இரவு 9:30 மணிக்கு ரயில் வந்ததும் எங்களுக்கான பெட்டியிலேறி எங்கள் இடத்தில் அமர்ந்தோம்.  ரயில் புறப்பட்டது. நாங்கள், ஒருவழியாக கோவையை இரவு 11:00 மணிக்கு அடைந்தோம்.  அங்கிருந்து ஒரு காரில் தத்தமது இல்லங்களை அடைந்து குருவாயூரப்பனுக்கு நன்றி கூறினோம்.

           நாராயண... நாராயண....







                      

Wednesday 1 July 2020

குருவாயூர் ஸ்தல வரலாறு


வணக்கம் நண்பர்களே,
           தேவசயானி ஏகாதசியான இந்த தினத்தில் குருவாயூர் ஸ்தல வரலாற்றை பகிர்வதில் ஆனந்தம் கொள்கிறேன்.

Monday 29 June 2020

வர்ஷா என்ற மழை மேகம்

வணக்கம் நண்பர்களே,

              நான் எனது ஆறாம் வகுப்பில் இருக்கும்போது மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்து வலது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு வீட்டிலேயே ஒரு மாத காலம் இருந்தேன்.

Saturday 27 June 2020

சூடி கொடுத்த சுடர்கொடி!


வணக்கம் நண்பர்களே,

     இன்று நாம் கோதை நாச்சியாரைப் பற்றி பார்ப்போம். ஆண்டாள் என்ற திருநாமத்துடன் பிரசித்தமாக விளங்கும் கோதை ஸ்ரீ வில்லிபுத்தூரில் வடபத்ரசாயி பெருமாளின் சந்நிதியருகே அமைந்த துளசி வனத்தில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் அவதரித்தார்.

Monday 22 June 2020

சொற்களஞ்சியம்- vocabulary


வணக்கம் நண்பர்களே,

                            ஆங்கிலம் சரளமாகப் பேச அடிப்படையான சில விஷயங்களை பார்த்தோம். அந்த வரிசையில் அடுத்து வருவது சொற்களஞ்சியம்.

Saturday 20 June 2020

சிதறி விழுந்த மழைத்துளிகள்


வணக்கம் நண்பர்களே,
 
 திருப்பதி மகேஷ் எனக்கு துளசிதரன் சார் எழுதிய 'காலம் செய்த கோலமடி' என்ற புதினத்தை எப்போதோ  தந்திருந்தார்.

Friday 19 June 2020

திருப்பதி யாத்திரை



வணக்கம் நண்பர்களே,

                       முதுகலை நாட்களை பற்றி எழுதி வெகுநாட்கள் ஆகி விட்டது. எனவே இந்த பதிவில் திருப்பதியை பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.

Wednesday 17 June 2020

'துர்கா மாதா' மொழிபெயர்ப்பு


வணக்கம் நண்பர்களே,

                நான் ஊரடங்கு காலத்தில் ஒரு நாவலை மொழிபெயர்க்க நேர்ந்தது. இது ஊரடங்கிற்கான திட்டமிடல் கூட இல்லை. கடந்த பிப்ரவரி மாதம் நண்பர் திருப்பதி மகேஷுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன்.

Tuesday 16 June 2020

கண்ணிநுன்சிறுதாம்பு


வணக்கம் நண்பர்களே,
   

    சென்ற வைணவம் பதிவில் நாலாயிரத்தை பெற்றுக் கொடுத்த ஸ்ரீமந் நாதமுனிகளின் சிறப்பைப் பார்த்தோம். இப்பதிவில் நாதமுனிகள் உருச்சொன்ன 'கண்ணிநுன்சிறுதாம்பு'  என்ற பதினோரு பாசுரங்களைப் பற்றிப் பார்ப்போம்.

Monday 15 June 2020

எதிர் வீட்டார் சந்தேகம்

வணக்கம் நண்பர்களே,

  கெட்ட கொழுப்பு அதிகமாகவுள்ளதால், எனது உணவுமுறைகளிலும்,வாழ்க்கை முறைகளிலும் சில மாற்றங்களை நடைமுறைபடுத்தியுள்ளேன்.

Saturday 13 June 2020

மொழித் திறன்



வணக்கம் நண்பர்களே,

                                    ஆங்கிலம் சரளமாகப் பேசுவது பற்றி நாம் சென்ற பதிவுகளில் பார்த்தோம். இந்த பதிவில் பொதுவாக மொழித் திறன்களைப் பற்றி பார்ப்போம்.

Wednesday 10 June 2020

ஸ்ரீமந் நாதமுனிகள்


   

                                                          ஸ்ரீ மதே ராமாநுஜாய நம:       
                                                                         
    
                                         நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட
ஜ்ஞான வைராக்ய ராஸயே
நாதாய முனயே அகாத பகவத் பக்தி ஸிந்துவே

 ஸ்ரீமந் நாதமுனிகள் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் அருகில் அமைந்துள்ள காட்டு மன்னார் கோவில்() வீர நாராயணபுரத்தில் கி.பி 823ல் சோபகிருது வருடம் ஆனி மாதம் 7 ம் தேதி புதன் கிழமை பெளர்ணமி திதி கூடிய அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார்.

Tuesday 9 June 2020

எனக்கு கணக்கு வராது


                       

    அப்போது 2010, நான் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதி தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த காலம்.

Sunday 7 June 2020

ஆழ்வார் தமிழமுதம்

               
                     
                                   ஸ்ரீ மதே ராமாநுஜாய நம:       
         ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
    
     ஸ்ரீமந் நாராயணன் தனது நிர்ஹேதுக க்ருபையால் மண்ணுலகில் வாழும் ஜீவாத்மாக்களை தன்னடியில் சேர்க்கத் திருவுள்ளம் கொண்டு யுகம் தோறும் அவதரிக்கிறான்.

Saturday 6 June 2020

கெட்ட கொழுப்பு அதிகமாயிருக்காமா!



வணக்கம் நண்பர்களே,

              கடந்த ஒரு வாரமாக பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டேன்.

Friday 5 June 2020

மொழிச்சூழல் இருக்க பயமேன்?

வணக்கம் நண்பர்களே,

     ஆங்கில மொழியைச் சரளமாகப் பேச விரும்புபவர்களுக்கு இடைவிடாத பேச்சு பயிற்சி என்பது இன்றியமையாதது.

     ஆரம்பத்தில் அவர்கள் சில வாக்கியங்களை மனப்பாடம் செய்தோ அல்லது யோசித்தோ பேசுவார்கள்.

Sunday 31 May 2020

விடியலும்,வேலையும்




வணக்கம் நண்பர்களே,

                                 தற்போது என் மனம் கொஞ்சம் பாரமாக இருக்கிறது.ஏனென்றால் என்னுடன் நன்றாக உரையாடிக் கொண்டிருந்த ஒரு பெண் திடீரென என்னை ப்ளாக் செய்துவிட்ட சோகம் தானது.

Friday 29 May 2020

மனமும்..சமணமும்!

வணக்கம் நண்பர்களே,

நான் அதிர்ந்து போயிருந்த அக்கணம்    என்னுள் நிறைய ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும்.

Wednesday 27 May 2020

நுனி நாக்கில் ஆங்கிலம்!



வணக்கம் நண்பர்களே,
                     ஆங்கிலம் நம் அனைவரின் மனதிலும் ஓர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது பல தலைமுறைகளாக நம்மிடம் ஒட்டி உறவாடி கொண்டு சமுதாயத்தில் தனக்கென ஓர் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

Tuesday 26 May 2020

ஏனுங்க கொஞ்சம் கேளுங்க....நான் கோயம்புத்தூர் ஆளுங்க...


வணக்கம் நண்பர்களே,

                  என்னதான் திருப்பதியில் முதுகலைக்குச் சென்றாலும் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் கோவையில் தான். கோவையைப் பற்றி தமிழுலகிற்கு நான் கூறி புரிவதற்கு ஏதுமில்லை.

Monday 25 May 2020

செண்பகமே....செண்பகமே...


 வணக்கம் நண்பர்களே,

                முதுகலை வகுப்புகளை காலை பத்து மணிக்கு சரியாக தொடங்கிவிடுவார்கள். மாணவர்கள் சாரை சாரையாக ஊர்ந்து வந்து கொண்டிருப்பர்.

மாலை நேரத்தின் மயக்கத்திலே....

 வணக்கம் நண்பர்களே,
 
                  மாலை நான்கு அல்லது ஐந்து மணிக்குள்ளாக வகுப்புகள் முடிந்துவிடும். அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியே வந்தபின் அவை பூட்டப்படும்.

Sunday 24 May 2020

நடை.... கடை..ஆஹா ஓசி வடை!



நமஸ்காரம் நண்பர்களே,

                               எனது முதுகலை முதலாமாண்டு காலங்களில் நான் திருப்பதிக்குப் புதிதாக இருந்ததால் எனக்கு அவ்வூரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாயிருந்தது.

Saturday 23 May 2020

கடன் பட்டார் உள்ளம் போல்...



நமஸ்காரம் நண்பர்களே,

ஒருவழியாக பல்கலைக்கழகத்தில், மகேஷ், நாயக், ராமகிருஷ்ணய்யா என நண்பர்கள் கூட்டம் அமைந்தது. முதுகலை முதலாமாண்டு எனக்கு அளிக்கப்பட்ட விடுதி 'H-block'.

Friday 22 May 2020

இக்கரைக்கு அக்கரை….




வணக்கம் நண்பர்களே,

       நான் 2010- 13 காலகட்டத்தில் இளங்கலை பட்டப்படிப்பு கோயம்புத்தூரில் இருக்கும் பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியில் படித்தேன்இறுதியாண்டில்,வகுப்பில்  இருந்த சக மாணவர்கள்  முதுகலைக்கு   பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் படிக்க  விண்ணப்பித்திருந்தனர்.

Wednesday 20 May 2020

என்னைப் பற்றி

நமஸ்காரம் நண்பர்களே, எனது பெயர் நவீன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூரில் தான். எனது பெற்றோர்களுக்கு நான் பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்துப்பிறந்ததால் எனது வாழ்க்கை சுகமாகவும்,ஆனந்தத்தோடும் இருக்கிறது...படித்தது கான்வென்ட் என்பதால் ஆங்கிலம் மட்டும் கைகொடுத்தது.