Wednesday 1 July 2020

குருவாயூர் ஸ்தல வரலாறு


வணக்கம் நண்பர்களே,
           தேவசயானி ஏகாதசியான இந்த தினத்தில் குருவாயூர் ஸ்தல வரலாற்றை பகிர்வதில் ஆனந்தம் கொள்கிறேன்.

        கிருஷ்ணன் குருவாயூரப்பனாக ஆனானா இல்லை குருவாயூரப்பன் தான் கிருஷ்ணனாக வந்தானா என்பதை ஸ்தல வரலாற்றைப் படித்து அறிந்துகொள்வோம் நண்பர்களே.

   குருவாயூர் கிருஷ்ணன் கோவில் மிகவும் பெருமை வாய்ந்தது. பகவான் கிருஷ்ணனே பூஜித்த மஹாவிஷ்ணு விக்ரஹம் தான் தற்போது குருவாயூரில் உள்ளது.

    தேவகியும் வசுதேவரும் பூஜை செய்த விக்ரஹம். முன் காலங்களில் வைகுண்டத்தில் இருந்த இந்த விக்ரஹம் ஸ்வயம் பகவானாலேயே பிருஷ்னி சுதபஸ் என்ற தம்பதிக்கு வழங்கப்பட்டது.

   பிருஷ்ணி சுதபஸ் தம்பதி பகவானை பிள்ளையாகப் பெற தவமிருந்தனர். அவர்களது தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு வைகுண்ட லோகத்திலிலுள்ள பாதாள அஞ்சனம் என்ற மூர்தத்தாலான  சதுர்புஜ விஷ்ணு விக்ரஹத்தை அவர்களுக்கு அளித்து தாம் மூன்று பிறவிகளில் அவர்களுக்கு பிறப்பதாக வரமளித்தார்.

  அதன்படி, முதல் அவதாரமாக பிருஷ்ணி கர்பன் என்ற பெயரோடு பிருஷ்ணி சுதபஸ் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

  பின், இவர்களே அதிதி கஷ்யபராக வர, அவர்களுக்கு வாமன மூர்த்தியாகப் பிறந்தார். அப்போதும் இந்த விக்ரஹம் கஷ்யபர் அதிதியின் வழிபாட்டில் இருந்தது.

  இறுதியாக, தேவகி வசுதேவருக்கு கிடைக்கப்பெற்ற இவ்விக்ரஹம் சிறையிலேயே அவர்களால் ஆராதிக்கப்பட்டது.

  அவர்களுக்கு கிருஷ்ணன் பிறந்தான்.

   கம்ஸவதத்திற்குப் பின், உக்ரசேனரை மதுராவின் மன்னனாக்கிய கண்ணன் ஆதிகேசவன் என்ற திருநாமம் கொண்ட அந்த விஷ்ணு மூர்த்தியை ஆலயம் அமைத்து ப்ரதிஷ்டை செய்தான்.

   பின் ஜராசந்தனால் ஏற்பட்ட கலகத்தால், மதுராவையே மாற்றி ஓர் இரவிலே துவாரகையாக்கினான். இவ்வாறு மக்களோடு சேர்ந்து ஆதிகேசவனும் துவாரகைக்கு சென்றான்.

    அங்கு வெகு காலம் கிருஷ்ணனால் பூஜிக்கப்பட்டு பின் உத்தவரால் பூஜிக்கப்பட்டு, துவாரகை கடலில் மூழ்கும் சமயத்தில் உத்தவரால் தேவகுரு பிருகஸ்பதி மற்றும் வாயு தேவனிடம் சேர்ந்தார்.

   பின், அதி புராதனமான விக்ரஹத்தை பரமசிவனின் ஆஞ்ஞையால் தற்போதைய கேரளத்தில் மேற்கு கடற்கரையோரமாக அமைந்த நாராயணசரஸ் என்ற குளக்கரையின் தெற்கே பரசுராமர் மற்றும் பரமசிவனின் மேற்பார்வையில் குரு மற்றும் வாயு தேவனால் ப்ரதிஷ்டை செய்யப்பெற்று குருவாயூரப்பனாக கலியுக ஜனங்களுக்கு கிட்டியுள்ளான்.

   இந்த நாராயண சரஸ் திருக்குளமானது ஸ்ரீமத் பாகவதத்தில் நான்காம் ஸ்கந்தத்தில் இடம் பெற்றுள்ளது. இங்குதான் பல கோடி வருடங்களுக்கு முன் சிவபெருமான் ப்ரசேதஸ் என்ற திருநாமமுடைய பத்து ராஜரிஷிகளுக்கு 'ருத்ர கீதம்' என்ற உபதேசத்தைச் செய்தாராம்.

    குருவாயூரப்பனுக்கு ஸ்ரீமத் பாகவதம் என்றால் மிகவும் ப்ரியம். அதனால் தான் குருவாயூரில் எப்போதும் ஸ்ரீமத் பாகவத பாராயணம் நடைபெற்றுக்கொண்டேயிருக்கும்.

"தமத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம்
சதுர்புஜம் ஸங்ககதார்யுதாயுதம்
ஸ்ரீ வத்ஸலக்ஷ்மம் களஸோபிகௌஸ்துபம் பீதாம்பரம் ஸாந்த்ர பயோத ஸௌபகம்

மஹார்ஹவைதூர்ய கிரீடகுண்டல
த்விஷா பரிஷ்வக்த ஸஹஸ்ர குந்தளம்
உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபிர் விரோசமானம் வஸுதேவ ஐக்ஷத"
                       ஸ்ரீமத்பாகவதம் 10-3-9,10

   மேற்சொன்ன ஸ்லோகங்களின் அர்த்தம், சிறையிலிருந்த வஸுதேவருக்கும் தேவகிக்கும் பகவான் காட்சியளித்த திருக்கோலத்திலேயே குருவாயூரில் இந்த ஸ்லோகத்தின் படி   இன்றும் நமக்காகக் காட்சியளிக்கிறான் பகவான்.

 கலியில், கிருஷ்ணன் ஸ்ரீமத் பாகவதத்தில் தான் இருப்பதாக உத்தவருக்கு கூறியுள்ளார்.

    குருவாயூரப்பனிடம் சரணடைவோம் பாகவத பாராயணம் மற்றும் கதா ஸ்ரவணத்தில் திளைத்து பிறவிப்பெருங்கடலை நீந்துவோமாக.

                   நாராயண நாராயண....
               ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்





11 comments:

  1. நல்ல தகவல்கள்.
    புதியவை எனக்கு.
    கௌஸ்துபம் என்ற சொல்லை ஜெயமோஹனின் விஷ்ணுபுரம் புதினத்தில் படித்த நியாபகம். அங்கே உடம்பின் நடுப்பகுதி போன்ற அர்த்தத்தில் வந்தது.

    ReplyDelete
  2. கௌஸ்துபம் என்பது திருப்பாற்கடல் கடைந்த போது வந்த இந்திரநீலக்கல் இது பகவானின் மார்புக்கு இடையில் துலங்கும் ஆபரணமாகும். ஜீவாத்மாக்களை பகவான் இந்த கௌஸ்துபத்தின் ஸ்தானத்தில் மதிக்கிறார். ஆனால் பல ஆத்மாக்கள் மாயையில் சிக்கி அவனையறியாமல் தவிக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. நானும் பல மாயைகளில் சிக்கி உழன்றுகொண்டிருக்கிறேன்.

      Delete
    2. நானும் தான் நண்பரே. அவனது மாயையிலிருந்து விடுபட சரணாகதி ஒன்று தான் வழி.

      Delete
    3. அவனையே சரணமாகப் பற்றுவோமாக.

      Delete
  3. நல்லதொரு பதிவு நவீன் ஹரி. பாராட்டுகள்.

    ReplyDelete
  4. ரொம்பவும் அழகா சொல்லியிருக்கீங்க நவீன்.

    என் தங்கை, நாராயணீயம் மற்றும் பாகவதம் கற்றுக் கொண்டு சொல்லியும் வருகிறாள். அவள் இருப்பது திருவனந்தபுரம் எனவே அங்கு இவற்றைப் போற்றுபவர்கள் அதிகம் உண்டு. கேரளத்தவர் உட்பட.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கேட்கவே ஆனந்தமாகவுள்ளது.

      Delete
  5. நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்! வாழ்த்துகள்.

    துளசிதரன்

    இதையும் நான் அப்படியே வழி மொழிகிறேன் நவீன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன் சார்.நன்றி கீதா மேடம்.

      Delete