Tuesday 4 October 2022

திடீர் குருவாயூர் யாத்திரை

 வணக்கம் நண்பர்களே, 


       வலைதளம் பக்கம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. காரணம் எழுத ஏதும் கிடைக்கவில்லை. அதே சோறு, தூக்கம், ஏக்கம், வேலை என ஸ்வரஸ்யமாக எதுவும் கிடைக்கவில்லை. 

      ஆனால் தற்போது ஒரு யாத்திரை மேற்கொண்டேன்  அதை குறித்து பகிர்கிறேன். 

      நேற்று அக்டோபர் 3,திங்கட்கிழமை திடீரென எந்த திட்டமிடலும் இல்லாமல் குருவாயூருக்கு கிளம்பி விட்டேன். அது சரி, திட்டமிட்டு கிளம்ப குடும்பமா  குட்டியா... தனிமரம் தனி சுகம். காலை ஏழு மணி அளவில் பையை தூக்கிக்கொண்டு பேருந்துக்கு சென்றேன். சுமார் ஏழரை மணிக்கு உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி 8:30மணிக்கு பாலக்காட்டில் இறங்கி அப்போதே திருச்சூர் பேருந்தில் ஏறினேன். ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகு திருச்சூரை 10:30 மணிக்கு அடைந்து பின் குருவாயூருக்கு போகும் பேருந்தில் ஏறி 11:30 மணியளவில் குருவாயூரை அடைந்தேன். அங்கே வேஷ்டி மற்றும் துண்டுக்கு மாறி, கோவிலில் வரிசையில்  நிற்கையில் மணி மதியம் 12:30. இரண்டு மணி நேர காத்திருப்பிக்கு பின் பிற்பகல் இரண்டரை மணிக்கு குருவாயூரப்பன் வராக மூர்த்தியாக தரிசித்து பின் வெளியே வந்தவுடன் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மாலை 4:30 மணிக்கு நடை திறப்பார்களாம். பல வண்ண வண்ணக் காட்சிகளைக் கண்ட வண்ணம், (சுவரோவியங்கள்) ஏனென்றால் நான் மிகவும் நல்லவன், நடந்து வெளியே வர ஒலிபெருக்கியில் இலவச மதிய உணவிற்கான அறிவிப்பு வந்தது. ஓசி சோற்றை விடுவேனா? புகுந்து விட்டேன். திருப்தியாக சாப்பிட்டு பின் வந்து பேருந்திலேறி திருச்சூரை அடைந்து அங்கிருக்கும் வடக்குநாதரையும், பரமேற்காவு பகவதியையும் தொழுதுவிட்டு பேருந்து நிலையம் வந்து பார்த்தால் திருச்சூரிலிருந்து உக்கடம் வரையிலான பேருந்து காத்துக் கொண்டிருந்தது. ஜாலியாக ஏறியமர்ந்தேன் 7:30 மணிக்கு. இரவு 10 மணிக்கு உக்கடம் வந்து சேர்ந்து பின் ஒரு உள்ளூர் பேருந்தில் ஏறி வீட்டை இரவு 11:00 மணிக்கு அடைந்தேன். இதில் நான் வியந்தது என்னவென்றால் எல்லாம் தகுந்த நேரத்தில் நடந்தது. மதியம் தரிசனம் செய்ய இயலாமல் போயிருந்தால் மாலை  4:30 மணிக்கு மேல் தான் தரிசனம் செய்திருக்கவியலும். பின் வடக்குநாதரை தரிசனம் செய்ய சமயமிருந்திருக்காது. என்னை யாத்திரை முழுவதிலும் பார்த்தசாரதியாய் வழிநடத்திய கண்ணன் எனது வாழ்க்கையையும் வழிநடத்துவான் என்பதில் சந்தேகமில்லை. நமது திட்டங்கள் பொய்த்துப் போகலாம் ஆனால்  இறைவனது திட்டம் என்றும் பொய்ப்பதில்லை என்பதை நேற்று உணர்ந்தேன்.