Saturday 28 November 2020

கொரானா காலத்தில் குருவாயூர் யாத்திரை

  வணக்கம் நண்பர்களே,

                          எனக்கு கடந்த புதன்(25/11/2020) அன்று குருவாயூருக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது.நவம்பர் ஐந்தாம் தேதி எனது திறன்பேசி(smart phone) மூலம் குருவாயூர் கோவிலின் வலைதளத்தைப் பார்த்து, ஏதோ ஆர்வத்தில் எனக்கான தரிசன சீட்டையும் பதிவு செய்து விட்டேன். குருவாயூர் ஏகாதசி இம்மாதம் 25/11/2020 அன்று வருகிறது என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததால் ஒருமுறை அதை உறுதிப்படுத்திக்கொண்டு, 25 ஆம் தேதி குருவாயூருக்கு என முன்பதிவு செய்தேன்.

       இதைத் தொடர்ந்து, ஏழாம் தேதி ஒரு பக்தரிடம் இந்த விவரத்தைக் கூறி அவருக்கும் அதே நாளுக்கு முன்பதிவு செய்தேன். நாட்கள் செல்லச் செல்ல யாத்திரைக்கு இருவரும் தயாரானோம். 25ஆம் தேதியன்று காலை பதினோரு மணி எங்களது தரிசனத்திற்கான நேரம் என சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.  அதற்கு ஏற்றாற்போல் பயணத்தையமைக்கத் திட்டமிட்டு 25 ஆம் தேதி காலை ஆறு மணிக்கு வாளையாரை அடைந்து அதன்பின், பாலக்காடு பேருந்து ஏற திட்டமிட்டிருந்தோம். 23 ஆம் தேதி திங்கள் மாலை வரை இது தான் எங்களது திட்டமாக இருந்தது. ஆனால் திடீரென திங்களன்று மாலை அந்த திட்டம் மாறியது. மேலே சொன்ன பக்தர் தனது கேரள நண்பர்களிடம் விசாரித்த போது பேருந்தை நம்ப வேண்டாம் எனக்கூறியதையடுத்து அவர் ரயிலுக்கு முன்பதிவு செய்யலாமென பரிந்துரைத்தார். உடனே ரயில் நிலையத்திற்கு விரைந்து பட்டாம்பி வரை முன்பதிவு செய்ய முற்பட்டோம் ஆனால், பட்டாம்பி வரை முன்பதிவு செய்ய இயலவில்லை. எனவே பாலக்காடு வரை முன்பதிவு செய்தோம். சென்னையிலிருந்து மங்களூர் செல்லும் அதிவிரைவு ரயிலில் இடம் கிடைத்தது.

        25ஆம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு ரயிலேற வேண்டும். நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து ரயில்நிலையம் 2.5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. எனவே, 25 ஆம் தேதி காலையில் 2:30 மணியளவில் நடக்க ஆரம்பித்து அரை மணி நேர நடையில்  ரயில் நிலையத்தையடைந்தோம். பின், உரிய தளத்திற்கு சென்று காத்திருந்த பின் நான்கு மணியளவில் ரயிலில் ஏறினோம். ஒரு மணி நேர பயணத்தின் விளைவாக காலை ஐந்து மணிக்கு பாலக்காட்டையடைந்தோம்.

   பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு ஐந்து கிலோ மீட்டர் செல்ல வேண்டும். அதற்கு பேருந்து கிடைக்க அரை மணி நேர தவம். பின் அங்கிருந்து பாலக்காடு பேருந்து நிலையத்துக்குச் சென்று திருச்சூர் பேருந்தைப் பிடித்து சுமார் இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு எட்டு மணியளவில் திருச்சூரை அடைந்தோம். திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து குருவாயூருக்கு நிறைய பேருந்துகள் உள்ளன. 1:15 மணி நேர பயணம் செய்து காலை 9:15 மணிக்கு குருவாயூரை அடைந்தோம். குருவாயூரில், தேவஸ்தான யாத்ரிகர் சௌகர்ய நிலையத்தில் குளித்துவிட்டு, நடைப்பயணமாக மம்மீயூர் மகாதேவனை தரிசிக்கச் சென்றோம். காலை பத்து மணியளவில் மம்மீயூரை அடைந்து மம்மீயூரப்பனையும்,மகா விஷ்ணுவையும் தரிசித்து, ஆலய த்வஜஸ்தம்ப (கொடிமரம்) பிரகாரத்தில் மகாவிஷ்ணு சந்நிதி முன்னமர்ந்து ஒரு பதினைந்து நிமிடங்கள் திருநாம சங்கீர்த்தனம் செய்து விட்டு பத்தே முக்கால் மணிக்கு மீண்டும் குருவாயூரை நோக்கி வந்து, தரிசனத்திற்கான வரிசையில் எங்களது இணையவழி தரிசன முன்பதிவு சீட்டை எடுத்துக் கொண்டு நின்றோம். தரிசனத்திற்கு செல்லும் போது எவ்வித மின்னணு சாதனங்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. கைப்பை முதலிய எதையும் அனுமதிப்பதில்லை. ஆண்கள் வேஷ்டியுடனும், பெண்கள் சம்பிரதாய உடைகளுடன் அனுமதிக்கப்படுகிறார்கள். 

      ஆண்கள், மேல் சட்டையை வரிசையில் காத்திருக்கும் போது மட்டும் அணியலாம். தரிசனத்திற்கு செல்லும் போது சட்டையைக் கழற்றி விட வேண்டும். காலை பதினோரு மணிக்கு வரிசையில் நின்று நாங்கள் மதியம் மூன்றே கால் மணிக்குத் தான் குருவாயூரப்பனைக் கண்டோம்.. வரிசையில் காத்திருந்த போது பக்தர்கள் சிலர் சேர்ந்து சத்தமாக நாம சங்கீர்த்தனம்  செய்தோம். நாங்கள் பாடிய பஜனை வரிகள் குருவாயூரப்பனின் பரமபக்தரான பூந்தானம் அருளிய,

" கிருஷ்ண கிருஷ்ணா முகுந்தா ஜனார்தநா

                               கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே

    அச்சுதானந்த கோவிந்த மாதவ

                                சச்சிதானந்த நாராயணா ஹரே"


     குருவாயூரப்பன் சங்கம்,சக்ரம், கதா,பத்மம் தாங்கி தரிசனமளித்தான்.       நல்ல தரிசனம் தான். நாலம்பலத்தில் அனுமதிக்காதது சற்று ஏமாற்றமாக இருந்தது. குருவாயூர் அப்பனின் கர்பகிரஹம் இருக்கும் இடம்   'ஸ்ரீ கோவில்' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்ரீ கோவிலைச் சுற்றியுள்ள முதல் பிரகாரமே நாலம்பலம் என்றழைக்கப்படுகிறது. பொதுவாக பக்தர்கள் இந்த நாலம்பலத்தில் சென்று குருவாயூரப்பனை தரிசனம் செய்வார்கள். ஆனால், தற்போது நோய் அச்சுறுத்தல் காரணமாக நாலம்பலத்தில் யாரையும் அனுமதிப்பதில்லை.

         தரிசனத்தைத் தொடர்ந்து த்வஜஸ்தம்ப பிரகாரத்தை வலம் வந்து  வெளியேவந்தோம்.  வெளியே இன்னும் கூட்டம் குறைந்தபாடில்லை...குருவாயூரப்பனுக்கும் கேரள மக்களுக்கும் என்ன அப்படியோர் பந்தமோ என எண்ணி பொறாமை கொள்ளச் செய்கிறது. அப்பனுக்கு காணிக்கையாக ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதை சமர்ப்பிக்கிறார்கள். அப்பப்பா, எத்தனை தார் தாராக பழங்கள், கனிவகைகள், பூக்கள், மூட்டை மூட்டையாக தானியங்கள் மற்றும் நெய். 

      அதுபோக, விழுந்து விழுந்து நமஸ்காரம் செய்யும் பக்தர்களைக் கண்டாலே நாத்திகனுக்கும் பக்தி வந்துவிடும். இவ்வாறு,  மாயக்கண்ணனின் சாம்ராஜ்யம் அமைதியாக குருவாயூரில் அவன் தலைமையில் அவன் அடியார்களுடன் நடக்கிறது.

          தரிசனம் கிடைத்த பரவசத்தோடு நேரே தெற்கு நடையிலுள்ள பிரசாத கவுண்டருக்கு வந்து பிரசாதம் வாங்க வந்து நின்றோம். அங்கு நான்கு மணிக்குத்தான் பிரசாதம் விநியோகம் தொடங்கும் என்பதைத் தெரிந்து கொண்டு காத்திருந்தோம்.  கவுண்டர் திறந்தவுடன் பிரசாதம் வாங்கி விட்டு பேருந்து ஏறப் புறப்பட்டோம். பாலகாட்டிற்கு பட்டாம்பி வழியாகச் செல்லும் பேருந்தில் ஓடி சென்று ஏறினோம்..அது தான் அன்றைய கடைசி பேருந்தாம். மணி அப்போது மாலை 4:40.


         காலை இரண்டு மணிக்கு கிளம்பியதால் ஏற்பட்ட அசதி காரணமாக சிறிது நேரம் உறங்கி விட்டோம். பேருந்து சொரனுர், ஒட்டபாலம் வழியாக இரவு 7:30 மணிக்கு பாலக்காட்டையடைந்தது.அங்கு இறங்கி கோவை பேருந்தை தேடினோம் கிடைக்கவில்லை. ஒருவரிடம் கேட்டபோது அவர் கோவைக்கு பேருந்து இனி  இல்லை வாளையாருக்கு சென்று போகுமாறு பரிந்துரைத்தார். எனவே வாளையார் பேருந்தைப் பிடிக்க ஆட்டோ பிடித்து அந்த நபர் கூறிய ஸ்டேடியம் பஸ் நிலையத்தையடைந்தோம்.ஆனால், அங்கு வாளையார் செல்லும் அன்றைய கடைசி பேருந்தும் புறப்பட்டுச் சென்றுவிட்டதாக கூறினார்கள்.


          என்னோடு வந்த பக்தர் மனம் தளர்ந்து,உடல் சோர்ந்து விட்டார். அடுத்து என்ன செய்யப் போகிறோம் என தெரியாமல் இருக்கும் சமயத்தில் குருவாயூரப்பன் அருளால் ஒரு சிந்தனை தோன்றியது. ரயில் நிலையம் சென்று ஏதேனும் ஒரு சிறப்பு ரயிலிலாவது ஏறி கோவையை அடைந்து விட வேண்டும் என்ற சிந்தனை. சற்றும் தாமதிக்காமல், ஒரு ஆட்டோவைப் பிடித்து உழவக்கோடு ரயில் நிலையத்தையடைந்து பயணச்சீட்டு அலுவலரிடம் விசியத்தைச் சொன்னோம்.


      அவர் சார்ட் க்லோஸ்சாகிவிட்டது . இனி தங்களால் ஏதும் உதவ முடியாது என்றார். பின் முன்பதிவு மையத்தில் இருந்த ஒரு இளம் பெண் நாங்கள் பதற்றத்தோடு இருப்பதைப் பார்த்து எங்களையழைத்து எங்கு போக வேண்டும் என்னவாயிற்று என்பதை விசாரித்து உடனே தனது கணினி திரையில் ஏதோ பார்த்த வண்ணம் 'கோவையா?' எனக் கேட்டார்.  நான் ஆம் என்று சொன்னேன். இரண்டு டிக்கெட் மட்டும் படுக்கை வகை பெட்டியில் இருப்பதாகக் கூறினார் அந்த பெண். அந்த பெண் மலையாளம் கலந்த தமிழில் அழகாகப் பேசினாள். ஆனால் அவள் பேச்சை ரசிக்க அப்போதைய சமயம் அனுமதிக்கவில்லை. விலை கொஞ்சம் கூடுதலாக ஆகும் எனக் கூறினாள். மேலும், அடுத்த நாள் அங்கு முழு அடைப்பு நிகழப்போவதாகவும் தெரிவித்தாள். நான் எப்படியாவது வீடு போய் சேர்ந்தால் போதுமென டிக்கெட் போடச்சொன்னேன். அந்த பெண் தொகையைக் கூறியதும் என்னிடம் போதிய பணமில்லை. எனவே, ஏ.டி.எம் சென்று பணம் எடுக்கச் சென்றேன். ஒரு இயந்திரம் இயங்கவில்லை. அருகிலிருந்த இயந்திரத்தில் பணத்தைப் பெற்று முன்பதிவு மையத்திற்கு விரைந்தேன். மணி அப்போது இரவு  8:40. 9:00 மணிக்கு வண்டி வந்துவிடும் என அந்தப் பெண் கூறியிருந்தார்.

       டிக்கெட் தொகையை செலுத்தியவுடன் எங்களுக்கான பயணச்சீட்டை அந்த பெண் அச்சடித்து கொடுத்தார். 'மதியெல்லோ' என மலையாளத்தில் சொல்லி, வண்டி பெங்களூரு செல்லும் சிறப்பு ரயில் எனவும், நான்காவது தளத்தில் சற்று தாமதமாக ஒன்போதரை மணிக்கு வரும் எனவும் பதற்றபடாமல் நிதானமாக செல்லுமாறும் கூறினார். நான், தோளில் எனது துணிப்பையையும், மனதில் அந்த பெண்ணின் முகத்தையும், இனிமையான குரலையும் சுமந்து கொண்டே நான்காம் தளத்தை நோக்கிச் சென்றேன்.


        நானும், என்னுடன் வந்த அந்த பக்தரும் அன்று ஏகாதசி என்பதால் எதுவும் உண்ணவில்லை. நான்காம் தளத்தை அடைந்ததும் எங்களை நாங்கள் ஆஸ்வாஸப்படுத்தி,  ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து குருவாயூரப்பனின் பிரசாதமான ஓர் வாழைப்பழத்தை மட்டும் உண்டோம்.


       இரவு 9:30 மணிக்கு ரயில் வந்ததும் எங்களுக்கான பெட்டியிலேறி எங்கள் இடத்தில் அமர்ந்தோம்.  ரயில் புறப்பட்டது. நாங்கள், ஒருவழியாக கோவையை இரவு 11:00 மணிக்கு அடைந்தோம்.  அங்கிருந்து ஒரு காரில் தத்தமது இல்லங்களை அடைந்து குருவாயூரப்பனுக்கு நன்றி கூறினோம்.

           நாராயண... நாராயண....







                      

4 comments:

  1. நாத்திகனான எனக்கும் பக்தி வரும்படி சிறப்பாக பதிவிட்டிருக்கிறாய் உன் அணுபவங்களை. குருவாயுரப்பனே அந்த அழகிய பெண் வடிவில் வந்ததாக பக்தியுடன் நினைக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம் நண்பரே. அவனே மோகிணி அவதாரம் எடுத்தவன் தானே. அமிர்தத்தை தேவர்களுக்கு வழங்க அவன் பூண்ட மோகிணி அவதாரம்.

      Delete
  2. நல்லதொரு தரிசனம். குருவாயூரப்பன் அனைவருக்கும் பூரண அருள் கொடுக்கட்டும்.

    சில முறை அங்கே பயணித்து தரிசனம் பெற்றிருக்கிறேன். அது ஆயிற்று பல வருடங்கள்! மீண்டும் எப்போது அங்கே அழைக்கிறானோ குருவாயூரப்பன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். கூடிய சீக்கிரம் பகவான் தங்களை அழைத்து தரிசன பாக்கியம் நல்க அவன் திருவடி தாமரைகளிலே அடியேனது விண்ணப்பம்.

      Delete