Monday 1 January 2024

வர்கலா பயணம்

 வணக்கம் நண்பர்களே, நான் கடந்த 28/12/2023 புதன் அன்று காலை ஆறு மணிக்கு வர்கலா பயணத்திற்காக கோவை ரயில்நிலையத்தை அடைந்தேன். எனது பயணம்  திடீரென நான் எடுத்த முடிவு என்பதால் என்னால் முன்பதிவு செய்ய இயலவில்லை. ஆகவே ஒரு முன்பதிவில்லா அனுமதிச் சீட்டை வாங்கிக்கொண்டு காத்திருந்தேன். என்னுடன் பயணிக்கப்போகும் சக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் ரயில் நிலையத்தின் முன்பகுதியில் காத்திருந்தனர். அவர்கள் ரயில்நிலையத்தின் முன்பகுதியில் இருக்கக்கண்டு அவர்களுடன் சேர்ந்து கொண்டேன்.அனைவரும் வந்து சேர்ந்த பிறகு, நாங்கள் பயணிக்கவிருந்த சபரி விரைவு இரயில் நடைமேடை இரண்டில் வருவதையறிந்து நடைமேடை இரண்டுக்கு சென்றோம். இரயில் 07:55 மணிக்கு அங்கு சரியான நேரத்தில் வர அனைவரும் S9 முன்பதிவு பெட்டியில் ஏறினர். நான் முன்பதிவு செய்யாத காரணத்தால் இரயிலின் கடைசி பகுதியில் அமைந்த முன்பதிவில்லா பெட்டியில் ஏறினேன். எதிர்பார்த்த கூட்டமில்லை எனவே அனைவரும் விரும்பும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தேன். இரயில் காலை 9:00 மணியளவில் பாலக்காட்டை அடைந்தது.முன்பே வாளையார் அருகே, சக கணித ஆசிரியர் பாலக்குமார் அவர்கள் அலைபேசியில் அழைத்து S9 பெட்டியில் இருக்கையிருப்பதாக கூற, பாலக்காட்டில் இரயிலிலிருந்து  இறங்கி S9 பெட்டிக்கு விரைந்தேன். அங்கு இருக்கையில் அனைவருடனும் சேர்ந்து அமர்ந்து கொண்டேன். காலை உணவு பரிமாறப்பட்டது. மூன்று இட்லி மற்றும் கெட்டி சட்னி, சாம்பார்.இரயில் ஒட்டப்பாலம் கடந்து சொரணுரில் அதிக நேரம் நின்றது. பின், வேகமெடுத்து திருச்சூர்,ஆலுவா போன்ற ஊர்களைக் கடந்து சென்றது.  மதியம் ஒரு மணிக்கு மதிய உணவை அருந்தினோம். காளான் பிரயாணி, தயிர் சாதம் ஊறுகாயுடன் பரிமாறப்பட்டது. காலை மற்றும் மதிய உணவை வழங்கிய எங்கள் பள்ளி தலைமையாசிரியை திருமதி. பானுமதி அவர்களுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்து, அவர் கொடுத்த நேந்திரம் பழ சிப்ஸ் பேகட்டை இரவு உணவிற்காக பத்திரப்படுத்திவிட்டேன். பின், கடலும், ஆறும் இணையும் இடங்கள், ஆறுகள், காடுகள் என இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டு சென்றேன். இரயில் மாலை 17:30 மணிக்கு வர்கலா இரயில் நிலையத்தை அடைந்தது. வர்கலா இரயில் நிலையத்தில் அனில் என்ற பயண விரிவுரையாளர் அறிமுகமானார். அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். பின்னர், 27 பேர் கொண்ட எங்கள் குழு நாங்கள் அன்றிரவு தங்கும் வீட்டிற்கு சென்றோம். திரு.அனில் அவர்கள் எங்களை வென்குளம் என்னும் ஊருக்கு அழைத்துச் சென்று வீட்டை காட்டினார். நாங்கள் அனைவரும் எங்களது அறைகளுக்கு சென்று நீராடி புத்துணர்வு பெற்று வர்கலாவில் 'அரபிகடலின் முத்து' எனப் புகழ்பெற்ற பாபநாசம் கடற்கரையை பார்க்கச் சென்றோம். இருள் சூழ்ந்ததால் ஏமாற்றமடைந்தாலும் கடற்கரையில் சிறிது நேரம் கழித்து விட்டு மீண்டும் விடுதிக்கு திரும்பினோம். நான் வர்கலாவில் கோவில் கொண்டுள்ள ஜனார்தனனை திசை நோக்கித் தொழுது கொண்டு விடுதிக்கு திரும்பினேன். இரவு விடுதியில் ஓய்வு எடுத்துக்கொண்டு அடுத்த நாள் காலையில் 06:00 மணிக்கு இரண்டு வேன்கள் வந்து நின்றது.  சரியாக 06:30 மணிக்கு வேனில் ஏறி புறப்பட்டு  முதலில் சிவகிரி என்ற இடத்திற்கு சென்றோம். இங்கே, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தத்துவம் மற்றும் சமூக சமத்துவத்திற்காக பாடுபட்ட ஸ்ரீ நாராயண குரு என்ற மகானின் சமாதி உள்ளது. இங்கே சிருங்கேரியில் உள்ளது போல் அன்னை சாரதா தேவி தாமரையில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். அன்னையை வணங்கிவிட்டு மேலே நடந்தால் ஸ்ரீ நாராயண குரு பௌதிக உடல் நீத்த குடில். சாளரம் வழியாக அவரது அறையில் நாற்காழி முதலிய பொருட்களை காணமுடிந்தது. அதைத்தொடர்ந்து வந்தது, கண்ணாடி அறை அதில் ஸ்ரீ நாராயண குரு பயன்படுத்திய கோல்,குவளை,வண்டி உள்ளிட்ட பொருட்களை கண்டோம். பின் ஸ்ரீ நாராயண குருவின் மூத்த சீடரான போதாநந்தா ஸ்வாமிகளின் சமாதியை கண்டு வணங்கி மேலே செல்ல ஸ்ரீ நாராயண குருவின் சமாதி பளிங்கு கற்களால் ஆன அறையை காணமுடிந்தது. அவரது சமாதியில் ஒருவிதமான ஆன்மீக அதிர்வலைகளை சற்று உணர முடிந்தது. பின் மணல் பரப்பிய தளத்தில் நடக்கும் போது மூணாரிலிருந்து அங்கு வந்திருந்த மூத்த சந்நியாசி ஒருவர் ஓர் சிறிய  சொற்பொழிவு நடத்தி நெகிழவைத்தார். பின், காலை சிற்றுண்டியை சிவகிரி மடத்திலேயே பிரசாதமாக உண்டோம். நிலக்கடலை கலந்த புட்டும் வாழைப்பழமும் தந்தார்கள் அத்தோடு சுக்கும் கரும்பு சர்க்கரை கலந்த தேநீர். அருமையாக இருந்தது. பின், அங்கிருந்து கிளம்பி ஸ்ரீ நாராயண குருவின் பிறப்பிடமாக செம்பழந்தி என்ற இடத்திற்கு சென்றோம். இங்கு ஸ்ரீ நாராயண குருவின் கோவிலும் அவர் பிறந்த கூரை வீடும் அதே நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ நாராயண குருவின் தாய் ஆரிய வல்லபையின் ஓவியமும் இந்த அறையில் காணக்கிடைத்தது.  இங்கேயும் ஆன்மீக அதிர்வுகளை உணர முடிந்தது. பின், உலகத்திலேயே மிக உயரமான சிவலிங்கத்தைக்காண செங்கல் என்னும் சிவதலத்தை அடைந்தோம். இந்த இடத்தின் பெயர் செங்கல் மகேஸ்வரம். இந்த கோவிலில் சிவபெருமானும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் கர்பகிரகத்தில் தரிசனமளித்தனர். 108 வகையாக கணபதியின் சிற்பங்கள் கண்களை கவர்ந்தன. இங்கே எழுப்பப்பட்டிருக்கும் சிவலிங்கம் 112 அடி உயரம் கொண்டு உலகிலேயே மிக பிரம்மாண்டமான லிங்கமாக திகழ்கிறது. மகாதேவனின் அருளாசியோடு புறப்பட்டு அருவிபுரம் என்னும் தலத்தை அடைந்தோம். இங்கு ஸ்ரீ நாராயண குருவின் கையால் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் உள்ளது. இவ்விடத்தின் தெற்கே நதி ஒன்று ஓடுகிறது. இங்கே மதிய உணவை நாங்கள் அனைவரும் உண்டோம். பின், நாராயண குரு அவர்கள் தவமிருந்த குகைக்கு சென்றோம். ஆற்றின் கரையில் இயற்கை எழில் சூழ‌ அமைந்த குகையில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்து விட்டு கிளம்பினோம். தற்போது மதியம் மூன்று மணியை கடந்திருந்தது. அப்போது ஆழிமலா என்ற கடற்கரைக்குச் சென்று அங்கு நிறுவப்பட்டுள்ள மிக பிரம்மாண்டமான சிவ பெருமானின் உருவத்தை கண்டு மெய்சிலிர்த்தோம். அந்த உருவம் சிமெண்ட் பூச்சாலும்,இரசாயன கலவையாலும் உண்டாக்கப்பட்டது. ஆழிமலையில் அரைமணி நேரம் செலவிட்டு, புகழ்பெற்ற கோவளம் கடற்கரைக்கு பயணித்தோம். மாலை 4:10 அளவில் கோவளத்தை அடைந்து கடற்கரையில் அலைகளுடன் விளையாடினோம். ஆர்ப்பரித்து வரும் அலைகளில் ஒரு மணிநேரம் விளையாடி 5:00 மணிக்கு கிளம்பி உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி ஆலயத்திற்கு 6:40 மணிக்கு வந்தடைந்தோம்.இரவு 08:30 மணிக்கு எங்களுக்கு இரயில் என்பதால் சீக்கிரமாக நடந்து பத்மநாப ஸ்வாமி ஆலயத்தை தொழுது, திருவம்பாடி கண்ணனையும் தொழுது வந்தோம். வழியில் இலவசமாக சூட சூட கஞ்சி கிடைத்தது. குளிருக்கு இதமாக கஞ்சியை சாப்பிட்டு பத்மநாபனுக்கு நன்றியை தெரிவித்துவிட்டு புறப்பட்டோம். வேன் எங்களை 7:25 மணிக்கு திருவனந்தபுரம் இரயில் நிலையத்தில் சேர்த்தது. இரவு உணவை முடித்துக்கொண்டு அனைவரும் நான்காம் நடைமேடையில் நின்ற அமிர்தா விரைவு இரயிலில் ஏறினோம். சரியாக  இரவு 08:30 மணிக்கு இரயில் புறப்பட்டது. காலை 4:45 மணிக்கு பாலக்காடு டவுனில் அனைவரும் இறங்கினோம். என்னுடன் வந்த அனைவரும் பேருந்து பிடித்து கோவை செல்ல சென்றுவிட்டனர். நான் அங்கேயே ஒரு மணி நேரம் காத்திருந்து பாலக்காடு -திருச்சி விரைவு‌ இரயிலில் பயணித்து போத்தனூரை அடைந்து 30/12/2023 அன்று காலை 8:30 மணிக்கு மீண்டும் வீட்டை அடைந்தேன். ஜனார்தன ஸ்வாமியை காணாத வருத்தம் ஒருபுறமிருந்தாலும், மற்ற இடங்களை ஒரே நாளில் கண்ட மகிழ்ச்சி ஆறுதலளித்தது. மொத்தத்தில்,வர்கலா சிவகிரி பயணத்தில் பல அனுபவங்களை பெற்றேன். வழியில் அறியாமல் இருந்த ஒரு சில ஊர்களைப் பற்றி அறிந்துகொண்டேன்.



4 comments:

  1. ஸ்ரீலஸ்ரீ சுந்தரா புரா ஹரி நவீனானந்த சுவாமிகள் அருளால் எல்லாம் நன்மைக்கே

    ReplyDelete
    Replies
    1. அவ்ளோ சீன்லாம் எனக்கில்லை

      Delete
  2. சிறப்பு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete