சிறுகதை போட்டிக்கு நான் எழுதிய மூன்றாவது கதை
" என்னடா வெங்காய மூட்டையெல்லாம் வண்டியில அனுப்பியாச்சா" என்று கேட்டபடி வெள்ளை வேட்டி,சட்டையுடன் வந்து நாற்காலியில் அமர்ந்தான் ராமமூர்த்தி. பெயரளவில் தான் ராமமூர்த்திஅவனது தந்தையின் காய்கறி வியாபாரத்தை தானே ஏற்று நடத்தி வந்தான்.அவனது தந்தை தனது கடும் உழைப்பால் காய் கறி வியாபாரத்தை வளர்த்திருந்தார்.எதிர்பாராத விதமாக நேர்ந்த ஒரு விபத்தினால் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, வியாபாரத்தை தான் ஏற்று நடத்தினான் ராமமூர்த்தி. அவனிடம் நிறைய வியாபாரிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்குவர். "என்னப்பா கண்ணப்பா மூனு மாசமா வட்டி வரல, வீட்டுப் பத்திரம் ஞாபகம் இருக்குதா?" என்றான் ஒரு வியாபாரியிடம்." அண்ணே, மழையில சரியா வியாபாரமே இல்லண்ண, கொஞ்சம் பொறுங்கண்ண, அடுத்த மாசம்..." என்றிழுத்த வியாபாரியிடம் " அப்படியா, சரிப்பா... அடுத்த மாசமே குடு ஆனா வட்டிக்கு வட்டியா சேர்த்து வரணும்" என்றான். அந்த வியாபாரி " ஐயா....."என அழுதவாரே இழுத்தான் அந்த அப்பாவி வியாபாரி." "அது சரி...உன் கஷ்டம் உனக்கு என் கஷ்டம் எனக்கு சரி ஒன்னு செய்யலாம் உன் வீட்டில் ஒரு சிட்டிருக்கே அதை என்னிடம் வர சொல்லு கணக்க தீத்துபுடலாம்" சற்றும் இரக்கமில்லாமல் அனைவரின் முன்னிலையிலும் பச்சையாக கூறினான் ராமமூர்த்தி. இதனை கேட்ட வியாபாரி அழுது கொண்டே போய் அவமானம் தாங்க முடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.
ராமமூர்த்தி தான் அவர் தற்கொலைக்கு காரணமென தெரிந்திருந்தும் விலை போன காவலர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. பாவம் அந்த குடும்பம் நிர்கதியானது.ஊரில் காய் கறி வியாபாரிகளுக்கு அவனால் மிகுந்த இடையூறுகள் ஏற்பட்டன. ராமமூர்த்திக்கு மந்திரி செல்வாக்கு கூட அதிகம். தன்னிடம் இருக்கும் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி அவ்வூரில், அவனிடம் மட்டுமே அனைத்து சில்லரை வியாபாரிகளும் காய் கறிகளை வாங்கும் நிலையை ஏற்படுத்தி விட்டான். விலையையும் கூட்டி அநியாயம் செய்து கொண்டிருந்தான். எதிர்த்துக் கேட்டவர்களுக்கு தந்திரமான முறையில் தொல்லைகள் கொடுத்து அவர்களைக் கடன் வாங்கத் தூண்டிடுவான்.
ஒரு கட்டத்தில் அவனிடம் கடன் வாங்கியவர்கள் அனைவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வளவு அக்கிரமங்களைச் செய்யும் அவனை கேட்க மக்கள் எவரும் துணியவில்லை. தனது ஊர் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் சொந்த காரர்களுக்கு மட்டும் நல்லது செய்து, ஊர் உயர் பதவிகளில் அந்த படித்த இளைஞர்களை அமரவைத்து தனது மகுடிக்கு ஆடும் பாம்புகளாக அவர்களை வைத்திருந்தான். அவர்களின் மூலம் பல நிலம் சம்பந்தப்பட்ட அரசாங்க வேலைகளை தானும் சாதித்துக் கொண்டு இருந்தான். இதுபோக, ஊரில் அதிக வட்டிக்கு தன் பணத்தை விட்டு வியாபாரம் செய்தான். வட்டி கட்ட இயலாத சிறு வியாபாரிகளின் நிலங்களை கையகப்படுத்தினான். இன்னும் கொடுமை என்னவென்றால் அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களிலுள்ள பெண்களை சீரழித்தான். இவ்வாறு ஒரு ஏகாதிபத்தியம் போல தன் அரசியல் பலத்தாலும் பண பலத்தாலும் ஊரையே தனது ஆளுகைக்குக் கீழ் வைத்திருந்தான் ராமமூர்த்தி.
அவன் பல அநியாயங்களை அரங்கேற்றிய வண்ணமிருந்தான்.ஒருமுறை, ராமமூர்த்தி தனது அறையில் வேறொரு பெண்ணை அணைப்பதை அவன் மனைவி கண்டுவிட்டாள். அவனது அநியாயங்களை பொறுக்கமுடியாமல் அவனது மனைவி அவனை விட்டு விலகி தன் தந்தை வீட்டிற்கே சென்றுவிட்டாள். ராமமூர்த்தியின் கொடுமைகள் இறைவனுக்கே பொறுக்கவில்லை போலும். அவனுக்கு குழந்தைகளே இல்லாமல் போனது. அவன் போகாத கோவில்கள் இல்லை பார்க்காத மந்திரவாதிகள் இல்லை. .ராமமூர்த்தி சுடுகாட்டு வெட்டியான் ஆறுமுகத்தைக்கூட்டாக வைத்துக்கொண்டு இரவில் இருவரும் மது அருந்துவார்கள். அப்போது வெட்டியானின் தேவைகளுக்காக நிறைய பணம் தருவான் ராமமூர்த்தி.வெட்டியானை பொறுத்தவரை ராமமூர்த்தி தான் அவனுக்கு தெய்வம்.வெட்டியானின் மகனுக்கு அரசு வேலையும் வாங்கிக்கொடுத்தான்.
தற்கொலை செய்த நபரின் இறுதி சடங்கிற்கு மாலையுடன் மயானத்துக்கு அவன் சென்ற போது அவனை ஒரு பெண் " நீயெல்லாம் விளங்கவே மாட்டாய். சத்தியமா சொல்லுறேன் என் புருஷன் உன்கிட்ட கைநீட்டின பாவத்துக்கு அவர நோகடிச்சு கொன்னுட்டியேடா பாவி" என்றபடி சுடுகாட்டு மண்ணை தூற்றி சாபமிட்டாள். அடுத்த நாள் காலையே அதிர்ச்சியான செய்தியொன்று அவனுக்கு காத்திருந்தது. வழக்கம் போல் காலையில் எழுந்து தனது நாற்காலியில் அமர்ந்து சிகரெட்டை பற்ற வைத்தான். மேஜை மீதிருந்த அவனது அலைபேசி அலறியது. அழைப்பை ஏற்றவனுக்கு திடீர் அதிர்ச்சி.
மறுமுனையில்,"அண்ணே, சரக்கு வந்த வழியில மல செக்போஸ்ட் ல போலீஸ் கிட்ட நம்ம லாரி மாட்டீருச்சு அண்ணே. நான் தப்பிச்சோம் பிழச்சோமென காட்டிற்குள் புகுந்து வந்து உங்களோட பேசறேன். நம்ம பசங்க வசமா போலீஸ் கிட்ட மாட்டிகிச்சு"என்றான் ராசு. "காசு குடுக்க வேண்டீது தேன" என்றான் ராமமூர்த்தி. "அண்ணே, யாரோ புது ஆளாம்." "சரி நீ தலைமறைவாகிடு.நான் பாத்துக்கிறேன்" என்று கூறி அழைப்பைத் துண்டித்தான். விரைந்து தனக்குத் தெரிந்த காவல்துறை உயரதிகாரியை தொடர்பு கொண்டு விஷயத்தை கூற முற்பட்டான். ஆனால் அந்த அதிகாரியின் இடத்தில் வேறொரு அதிகாரி நியமிக்கபட்டிருந்தார். அழைப்பு துண்டிக்கப்பட்டது. இது போல் பல நிகழ்ந்தன.
சரக்கு வரத்து குறைந்ததால் அவனது வியாபாரத்தில் படிப்படியாக வீழ்ச்சியை சந்தித்தான். இதற்கு ஏற்றாற்போல்,அவனது வாடிக்கையாளர்களும் மெதுவாக அவனை ஏமாற்ற ஆரம்பித்தார்கள். இதனால் மனமுடைந்த ராமமூர்த்தி மந்திரவாதியொருவரை வரவழைத்து தனக்கு ஏன் தற்காலத்தில் இவ்வளவு துன்பங்கள் என்பதையறிய முயற்சி செய்தான். அந்த மந்திரவாதியோ ராமமூர்த்தியிடம் அந்த பூஜை இந்த பூஜை யென நிறைய பணத்தைக் கொள்ளையடித்து சென்றுவிட்டான்.
ராமமூர்த்தி மிகுந்த வருத்தமடைந்தான்.அவனை சுற்றியிருந்த கூட்டம் அவனிடம் செல்வம் குறைய தொடங்கியதையறிந்து அவனிடமிருந்து படிப்படியாக விலகிச் செல்லலாயினர். அவனது செல்வாக்கு குறைய ஆரம்பித்தது.அவனால் பாதிப்படைந்த பலர் அவனை பழிவாங்க துடித்தனர். படிப்படியாக தனது சொத்துக்களை இழந்தான். போதாக்குறைக்கு வயோதிகம் வேறு அவனை படுத்தியெடுத்தது.மருத்துவமனைக்கு நடந்து நடந்து அவன் கால்கள் தேய்ந்ததுதான் மிச்சம்.
ஒருநாள், ராமமூர்த்தி தனது வீட்டு முற்றத்தில் நாற்காலியில் அமர்ந்து சற்று கண் வளர்ந்தான். அப்போது அவனால் பாதிக்கபட்ட ஒருவன் அவன் மீது கல்லெறிந்தான் அந்த கல் ராமமூர்த்தியின் நெற்றியில் பட்டு ரத்தம் கசிந்தது. "ஐய்யோ அம்மா..." ராமமூர்த்தி கூச்சலிட்டுக்கொண்டே நிலத்தில் சரிந்தான். அவ்வழியாக வந்த வெட்டியானின் மகன் கலைச்செல்வன் ராமமூர்த்தியை மருத்துவமனையில் சேர்த்தான். வெட்டியானும் விசயமறிந்து மருத்துவமனைக்கு விரைந்தான்.
ராமமூர்த்தியை அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருந்தனர். "ரத்தம் அதிகமா போனதால...மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதில் சிரமம் இருக்கு, வி வில் ட்ரை அவர் பெஸ்ட்" மருத்துவர் கூறி சென்றார். நாட்கள் கடந்தன ராமமூர்த்தியின் உடல் நிலை சற்று சீரடையவே அவனை அவசர சிகிச்சை பிரிவிலிருந்து அறைக்கு மாற்றினர். அறையில் ராமமூர்த்திக்கு நினைவு திரும்பிடவே, தான் செய்த தவறுகளை எண்ணிவருந்தினான். ராமமூர்த்தி கண் திறந்ததைக்கண்ட ஆறுமுகம் சற்று ஆறுதலடைந்து "சாமி ஏதாது ச்சாப்பிட்ரீகளா?" என கண்ணீரோடு கேட்டான். ராமமூர்த்தி ஏதும் பேசவில்லை. அவனது கண்களில் கண்ணீர் குளம் போல தேங்கியிருந்தது. தனது வாழ்க்கையை ஒரு முறை திரும்பிப்பார்த்தான். எத்தனை கொடுமைகள், எத்தனை அக்கிரமங்கள். கோரமான முகமொன்று அவன் கண் முன் தோன்றியது. தனது நிலையை கண்டு தானே அஞ்சி நடுங்கினான் ராமமூர்த்தி.
"ஆறுமுகோ, இனி நான் பொழக்கமாட்ட. எனக்கு எஞ்சி இருக்கறது என் வூடு மட்டுந்தே.அத என் மனைவிக்கு அப்புரோ நீ எடுத்துக்கோ. ஊ மவன் கிட்ட சொல்லி நா அடமானத்துக்கு அப்பாவி ஜனங்க கிட்ட புடுங்கி வைச்ச பத்தரத்த யெல்லா அவுங்கவுங்க கிட்டயே கொடுத்திட சொல்லு.இப்புடியாது என்னோட பாவ மூட்டையோட பாரோ கொஞ்மாவது குறயுதானு பாக்கலாம்" என்று சொல்லி கண்களை அகன்று விழித்தான் ராமமூர்த்தி. ஆறுமுகம் கதறிக்கொண்டு மருத்துவரை அழைத்து வருவதற்குள் ராமமூர்த்தியின் உயிர் பிரிந்திருந்தது.
காரியத்திற்கு பின்னர், இராம மூர்த்தியின் மனைவியின் துணைகொண்டு ராமமூர்த்தி ஏற்கனவே யார் யாரிடம் வரவு செலவு என்ற விஷயங்களை எழுதி வைத்திருந்த குறிப்பேட்டை பெற்று, அதனைக் கொண்டு ஆறுமுகமும் அவன் மகனும் நேர்மையாக செயல்பட்டு பத்திரங்களைப் பத்திரமாக அவரவர்களிடம் ஒப்படைத்து விட்டனர்.
இரண்டு நாட்கள் கழித்து அவ்வூர் டீக்கடை பெஞ்சில் சிலர் அமர்ந்திருக்க, "ராமமூர்த்தி கத இப்படி முடிஞ்சு போச்சே" என ஒருவர் கிசுகிசுக்க மற்றொருவர் அதற்கு "ஆமாப்பா, எப்படியோ என்னோட பத்திரம் வந்திருச்சு..இனிமே கொல சாமி சத்தியமா கடனே வாங்கமாட்டேனப்பா சாமி" என நிம்மதி பெருமூச்சு விட்டான்.
டீ கடையில், " ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கத உனக்கு தெரியுமா" என்ற பாடல் சன்னமாக ஒளித்துக்கொண்டிருந்தது.
***முற்றும்***