Friday, 18 December 2020

பிரியமான தோழி


சிறுகதை போட்டிக்கு நான் எழுதிய  இரண்டாவது கதை 

        

                                                    

         சரஸ்வதி அவசரமாக தன் வீட்டுக்கு புறப்பட்டு கொண்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து அவளைப் பார்க்க ஓர் வயதான பாட்டி லொக்கு லொக்கு வென இரும்பிக்கொண்டு வந்தார். "பாட்டி, அங்கேயே உட்காருங்க.இதோ வருகிறேன்" பையை மேஜைமேல் வைத்தபடி பாட்டியிடம் கூறினாள் சரஸ்வதி. வேகமாக வந்து பாட்டியை பரிசோதித்து, " பாட்டி, உங்களுக்கு சளி பிடுச்சிருக்கு.நீங்க பனிகாலத்துல வீட்ல இருக்கறது தான் நல்லது.இந்தாங்க இந்த மாத்திரையை இரண்டு நாள் காலையும் மாலையும் சாப்பாட்டுக்கு பின் சாப்பிடுங்க" என்று தனது மேஜை மேலிருந்த மாத்திரை அட்டையை எடுத்து இலவசமாக பாட்டியிடம் வழங்கினாள்.சரஸ்வதி எப்போதுமே வயதான ஏழை பெண்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆகவே, அப்பகுதியில் அனைத்து பாட்டிமார்களும் மருத்துவத்திற்கு சரஸ்வதியைத்தான் அணுகுவார்கள்.

இவள்‌ அதன் பின் கிளம்பி வீட்டுக்கு சென்றாள். மணி இரவு பத்தரையாகியிருந்தது. தனது காரை‌யியக்கி வீட்டை‌ அடைந்தாள். வீட்டின் சாவியை மறந்து தனது மருத்துவமனை அறையிலேயே விட்டுவந்துவிட்டாள். தனது வீட்டில் வேலை செய்யும் உறவுக்கார மற்றும் நம்பிக்கையான பெண் கலைவாணியிடம் ஒரு சாவி அவசரத்திற்கு கொடுத்து வைத்திருந்தாள்.

கலைவாணியும் சரஸ்வதியும் சமவயதுப் பெண்கள். கலைவாணியின் குடும்பம் பொருளாதார வசதி இல்லாமல் கஷ்டப்படும் குடும்பம். சரஸ்வதியும்,கலைவாணியும் சிறுவயதில் ஒரே பள்ளியில் படித்தாலும் கலைவாணி பாதியில் படிப்பை நிறுத்தவேண்டிய சூழ்நிலை வந்தது. அதற்குக் காரணம் கலைவாணியின் குடிகாரத் தந்தையின் திடீர் மரணம். கலைவாணியின் தாயும் அதைத் தொடர்ந்து இரண்டே வருடங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அதிலிருந்து கலைவாணி சரஸ்வதியின் பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தாள். பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு சரஸ்வதியின் வீட்டிலேயே இருந்தாள். சரஸ்வதியின் பெற்றோர் கலைவாணிக்கு நல்ல வரனாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். சரஸ்வதிக்கும் மாப்பிள்ளை பார்த்தனர் ஆனால் அவள் வந்த வரன்களையெல்லாம் வேண்டாமென சொல்லிவிட்டாள். தான் மேலும் படிக்க வேண்டும்‌ எனக்கூறிவிட்டாள். தற்போது கலைவாணிக்கு திருமணமாகி ஒரு வருடமாகிவிட்டது.

சரஸ்வதி முழு நேர மருத்துவராக மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தாள். கலைவாணியிடம் வீட்டின் சாவியை கேட்க தனது அலைபேசியில் அழைத்தாள் கலைவாணி அழைப்பை ஏற்கவில்லை. சரஸ்வதியின் பெற்றோர் சுற்றுலா சென்றுவிட்டனர்.வருவதற்கு பத்து நாட்களாகும். இரண்டு தெருக்கள் தள்ளி கலைவாணியின் வீடு இருப்பதால் அங்கு சென்று வாங்கிவர எண்ணினாள் சரஸ்வதி. சரஸ்வதி கலைவாணியின் வீட்டை அடைந்த சமயம் அங்கு விளக்குகள் அணைந்திருந்தது. சரஸ்வதி மெதுவாக சன்னலோரம் செல்லும் போது அவர்கள் அந்தரங்கமாக இருப்பதை பார்த்து விட்டாள். சரஸ்வதிக்கு மனதில் கல்யாண ஆசை துளிர்விட்டது. வேகமாக அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.அவர்களை இந்த நேரத்தில் தொந்தரவு செய்யக்கூடாது என்றாலும் தனக்கு வீட்டின் சாவி வேண்டும் என்ற நிர்பந்தத்தால் கலைவாணியின் வீட்டுக் கதவை தட்டினாள் சரஸ்வதி.

கலைவாணியும் அவள் கணவனும் திடுக்கிட்டு வெளியே வந்து பார்த்தால் வெளியே சரஸ்வதி கோட்டோடு நின்றிருந்தாள். " என்ன அக்கா, இந்த நேரத்தில?" என்றாள் கலைவாணி. " பதறவேண்டாம் கலை. நான் க்ளினிக்ல புறப்பட்டப்போ ஒரு பாட்டி வந்ததால அவங்களுக்கு மருந்து கொடுத்திட்டு அவசரமாக கிளம்பினேன் கிளம்பினப்போ எனது வீட்டு சாவியை மறதியாக மேஜை மீதே விட்டுட்டு வந்துட்டேன்" என்று தலையை

 தேய்த்தபடியே சொன்னாள் சரஸ்வதி.

" சரி சரி அக்கா, இவ்ளோ தானா, இருங்க உங்க சாவிய எடுத்திட்டு வர்றேன்" என்று கூறிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் கலைவாணி. வீட்டிலிருந்து சரஸ்வதியின் வீட்டு சாவியை எடுத்துக்கொண்டு சரஸ்வதியுடன் புறப்பட்டாள் கலைவாணி. "இல்ல கலை. சாவிய மட்டும் கொடு நான் போய்கரேன்" என்றாள் சரஸ்வதி. "இல்லக்கா, வழியில நாய் தொல்லை அதிகம் அதனால நான் எதுக்கும் துணைக்கு வருகிறேன்" என்றால் கலைவாணி. "என்னங்க..நான் ராத்திரி சரஸ்வதி அக்கா கூடயே அவங்களுக்கு துணையாக இருந்திட்டு காலைல‌ வர்றேன்" என்று தன் கணவனிடம் கூறிவிட்டு சென்றாள்.

கலைவாணி சிறுவயதிலிருந்து அதே ஊரில் வளர்ந்தவள் என்பதால் அவளுக்கு அங்கு அனைவரையும் தெரியும். ஆனால் சரஸ்வதி அவ்வூரில் பிறந்திருந்தாலும் படிப்பு,கல்லூரி என நகரங்களிலேயே வாழ்ந்தவள். ஆனால் கலைவாணி,சரஸ்வதியின் நட்பு மட்டும் தொடர்ந்து கொண்டு இருந்தது. என்ன தான் சரஸ்வதி படித்திருந்தாலும் நடைமுறை விசயங்கள் அவளுக்கு ‌அவ்வளவாக தெரியாது. கலைவாணி தான் அவளுக்கு எல்லாம் செய்து கொடுப்பாள்.

கலைவாணி தனக்கு சரஸ்வதியின் பெற்றோர் அளித்த வாழ்க்கைக்கு நன்றியாக சரஸ்வதிக்கு தேவையான எல்லா வேலைகளையும் செய்தாள். அவ்வப்பொழுது சரஸ்வதி தன் தோழி இதையெல்லாம் செய்வது தனக்கு பிடிக்கவில்லை என கூறியும் கலைவாணி கேட்க வில்லை. " நான் உனக்காக செய்யவில்லை உன் அப்பா அம்மா எனக்கு கொடுத்த‌ வாழ்க்கைக்காக செய்கிறேன்.அன்னிக்கு என் அப்பாவும் அம்மாவும் இறந்தப்ப அவங்க என்ன கைவிட்டிருந்தா இந்நேரம் என்னோட நிலைமை என்னவாயிருக்குமுன்னு எனக்கு இப்ப நினைச்சா கூட பயமா இருக்குது"என்பாள்.

சரஸ்வதி அவளது புராணத்தை கேட்டு அழுத்துப்போய் தூங்கியே விடுவாள். அன்று கலைவாணியும் சரஸ்வதியும் சரஸ்வதியின் இல்லத்திலேயே தங்கி விட்டனர். சரஸ்வதி கலைவாணியிடம் "நாம ரெண்டு பேரும் சேர்ந்து தூங்கி எத்தன வருஷமாச்சு"என்றாள். இருவரும் பேசிக்கொண்டே இருந்தனர். சரஸ்வதி தனக்கு தூக்கம் வரவில்லை எனவும் ஏதேனும் திகில் படம் பார்க்கப் போவதாகவும் கூறிச்சென்றாள். சரஸ்வதியின் அறையில் சுவற்றை ஒட்டிய பெரிய திரை தொலைகாட்சியிருக்கிறது. அதை வீட்டுவேலை செய்யும் போதெல்லாம் கலைவாணி அதில் படம் பார்த்தால் நன்றாயிருக்கும் என்று நினைப்பாள். ஆனால் பாவம்‌ அவளுக்கு அந்த தொலைக்காட்சியை இயக்கத் தெரியாது. இப்போது சரஸ்வதி அதில் படம் காட்டப்போகிறாள் என்றவுடன் ஒரே ஆனந்தம் கலைவாணிக்கு. "அக்கா , எனக்கும் தூக்கம் வரல" நானும் படம் பார்க்க வருகிறேன் என்றாள்".

 

  இருவரும் படம் பார்க்க அமர்ந்தனர். சரஸ்வதி அமேசான் தளத்தில் புதிதாக வெளியான ஒரு திகில் படத்தைப்போட்டாள் அதில் வந்த சில காட்சிகள் கலைவாணியை பயமுறுத்தினாலும் சரஸ்வதியின் துணையோடு அவள் அதைப் பார்த்தாள்.அந்த படத்தில் ஒரு கயவன் சொத்துத் தகராறில் ஒரு பெண்ணைக் கொன்று அந்த பெண்ணின் சடலத்தை உருத்தெரியாமல் எரிக்க இடுகாட்டுக்கு கொண்டு செல்கிறான் அப்போது அங்கிருந்த வெட்டியானிடம் லஞ்சம் கொடுத்து அந்த பெண் சடலத்தை எரிக்கச் சொல்கிறான். சடலத்தை எரிக்க அவர்கள் எத்தனித்த போது அங்கு வானத்திற்கும் பூமிக்குமாக ஒரு பெரிய பெண்ணின் முகம் தோன்றியது.அந்த முகத்தை பார்க்கவே பயங்கரமாக இருந்தது.கலைவாணி தன் கண்களை மூடிக்கொண்டாள் ஆனால் சரஸ்வதி மும்மரமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

 அந்த முகத்தில் ஆங்காங்கே வெடிப்புக்களும் ரத்தக்காயங்களும் இருந்தன. திடீரென அந்த முகம் தன் வாய் திறந்து பேச ஆரம்பித்தது. அதன் வாயில் அனைத்து பற்களும் சுறாமீனின் பற்களை போல் கோரை பற்களாக இருந்தது. அந்த பேய் சொன்னது " எனது உடல் எரியும் முன் நீங்களிருவரும் எரிந்து சாம்பலாக போகிறீர்கள்" எனக் கூறி தனது விழிகளை அகன்று விழித்தது. உடனே அந்த கண்களிலிருந்து நெருப்பு வரத்தொடங்கியது. அந்த கயவனும், வெட்டியானும் பயந்து ஓடினர் ஆனால் அவர்களால் தப்பிக்கவியலவில்லை. அவர்கள் இருவரும் எரிந்து சாம்பலானார்கள். இதை மிகவும் விறுவிறுப்பாக இருவரும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

  இதன் பின் ஒருவழியாக படம் முடிவுக்கு வரவே, இருவரும் தூங்கிவிட்டனர். கலைவாணி இதற்கு முன் இது போன்ற பெரிய திரையில் படம் பார்த்ததில்லை என்பதால் அந்த காட்சிகள் அவள் மனத்தில் பதிந்து விட்டது. கலைவாணி திடீரென திடுக்கிட்டு கத்தி கூச்சலிட்டு எழுந்தாள். சரஸ்வதி எழுந்து பதற்றத்தோடுயிருந்த கலைவாணியை தெளிவித்து கேட்ட போது, இரவு ஆழ்ந்த உறக்கத்தில் அவளிருந்த போது கனவில் படத்தில் பார்த்த உருவத்தைப் போலவே ஒரு உருவத்தை கண்டதாகவும், அவ்வுருவம் நெருப்பை கக்கிக் கொண்டு தன்னை துரத்தியதாகவும் தெரிவித்தாள்.

சரஸ்வதி மருத்துவராதலால் கலைவாணியின் நிலைமையை புரிந்து கொண்டு தான் செய்த தவறை புரிந்துகொண்டாள். மேலும் கலைவாணியை சரஸ்வதி பரிசோதித்த போது கலைவாணி தாயாகும் அறிகுறிகளைக் கண்டறிந்து மகிழ்ச்சியுற்றாள். அப்போது எதுவும் கலைவாணியிடம் சொல்லாமல் அவளை அமைதியாக உறங்கவிட்டு காலையில் கலைவாணியிடம் ஒரு சூடான காபியைக் கொடுத்து கலைவாணியிடம் அந்த நல்ல செய்தியை பகிர்ந்தாள். கலைவாணியால் சந்தோஷத்தை தாங்க முடியவில்லை. தனது கணவனிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளத் தன் வீட்டுக்கு விரைந்தாள்.

  வீட்டில் கணவனிடம் கலைவாணி விசியத்தை சொல்லவே அவள் கணவன் ஆனந்தத்தோடு இனிப்புகளை வாங்கிக்கொண்டு சரஸ்வதியின் வீட்டிற்கு சென்று சரஸ்வதிக்கு இனிப்புகளை வழங்கினார். சரஸ்வதி, கலைவாணியை நன்றாக கவனித்து கொள்ளும் படி அவள் கணவனுக்கு அறிவுரைகளை வழங்கினாள். அவ்வப்பொழுது மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வருமாறும் கூறினாள். நாட்கள் நகர்ந்தது. சுற்றுலா முடிந்து வந்த பெற்றோர் விசியமறிந்து கலைவாணிக்கு நல்ல முறையில் சீமந்தமும் செய்து வைத்து மிகுந்த அக்கரையுடன் கவனித்தனர்.கலைவாணிக்கு மாதம் நெருங்கியது. சரஸ்வதி கலைவாணிக்கு அவ்வப்பொழுது இலவசமாக சிகிச்சைகள் செய்து, தக்க அறிவுரையும் வழங்கி இறுதியில் பிரசவமும் இலவசமாகச் செய்தாள்.

கலைவாணிக்கு பெண்பிள்ளை பிறந்தது. சரஸ்வதியின் தூய்மையான சேவைக்காக கலைவாணியின் கணவன் சரஸ்வதிக்கு பரிசு கொடுக்க எண்ணி தன்னால் இயன்ற ஒரு கிராம் தங்கத்தை வழங்கினான். அதனை மனதளவில் ஏற்றுக் கொண்ட சரஸ்வதி, அதனை அந்த பெண் குழந்தைக்கு என்றே வைத்திருந்தாள். கலைவாணியும் அவள் கணவனும் தங்கள் குழந்தைக்கு சரஸ்வதியே ஒரு நல்ல பெயரை வைக்க வேண்டியதையடுத்து, சரஸ்வதி அந்த குழந்தைக்கு இரண்டு கிராம் தங்க காசை அன்பளிப்பாக வைத்து 'மஹா ஸ்வேதா' என்ற பெயரையும் சூட்டி மகிழ்ந்தாள். மற்றொரு புறம், தாய்மையின் ஆனந்தத்தை உணர்ந்த சரஸ்வதி தன் பெற்றோரிடம் திருமணத்திற்கு சம்மதமும் தெரிவித்தாள்.

****முற்றும்****

4 comments:

  1. கதை நன்று. பாராட்டுகள்.

    திகிலை புகுத்துவதற்காகவே, தொலைக்காட்சி பார்க்கும் பகுதியை இணைத்திருப்பது தெரிகிறது.

    ReplyDelete
  2. கதை சிறப்பாக உள்ளது.
    சரஸ்வதி மற்றும் கலையின் நட்பு அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
    முந்தின கதையில் வந்தது போல் அமானுஶிய சம்பவங்கள் வந்துள்ளன.
    ஒரு அம்மானுஶிய கதையையும் சீக்கிரம் எழுதி எங்களை குலை நடுங்கச் செய்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..ஆனால் அடுத்த கதையும் மானுஷ்யமாகத்தான் வந்துள்ளது

      Delete