Friday, 19 June 2020

திருப்பதி யாத்திரை



வணக்கம் நண்பர்களே,

                       முதுகலை நாட்களை பற்றி எழுதி வெகுநாட்கள் ஆகி விட்டது. எனவே இந்த பதிவில் திருப்பதியை பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.

   திருப்பதி என்பது ஒரு புனிதமான நகரம். யுகம் யுகமாக உள்ள கோவில்கள் இங்கு உண்டு. பெரும்பாலும் திருப்பதி வருபவர்கள் திருமலையை மட்டும் அடைந்து பெருமாளை சேவித்துச் செல்கின்றனர்.

       
 திருச்சுகவனுர் என்ற திருச்சானூர் பத்மாவதி தாயாரின் ஆலயம் பிரசித்தம். இங்கு தான் தாயார் அலர்மேல்மங்கையாக சேவை சாதிக்கிறார். எந்த வைணவ ஆலயங்களுக்கு சென்றாலும் தாயாரை வணங்கிவிட்டுத் தான் பெருமாளிடம் நாம் செல்ல வேண்டும். திருச்சானூர் பத்மாவதி தாயாரை சேவித்து விட்டு தான் திருமலையை அடைய வேண்டும் என்கிறது அன்னமாச்சாரியர் அருளிய 'ஸ்ரீ வேங்கடாசல மாஹாத்மியம்'. இது திருவரங்கத்தின் கோவிலொழுகிற்கு சமமான நூல்.

    திருப்பதியிலேயே புராதனமான ஆலயங்கள் மேலும் சில உள்ளன.

  ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில். இந்த கோவிலானது திருப்பதி ரயில் நிலையத்தின் அருகிலேயே உள்ளது.

        மிக பெரிய கோபுரத்துடன் காட்சியளிக்கும் திருப்பதி நகரின் பிரதானமான கோவில். இங்கு ஸ்ரீ கோவிந்த ராஜ பெருமாள் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

     இதன் வரலாறு சற்று சோகமானது.

    பதினோராம் நூற்றாண்டில், இரண்டாம் குலோத்துங்க சோழனால் சிதம்பரத்திலுள்ள கோவிந்த ராஜன் கோவில் சேதப்படுத்தப் பட்ட போது அங்கிருந்த மூலவர் மற்றும் உற்சவர்களை பகவத் ராமானுஜர் இங்கு சேர்ப்பித்து, அப்போதைய தொண்டை நாட்டு ராஜாவான யாதவராயனின் உதவியால் இவ்வாலயம் எழுப்பப்பட்டது.

     இப்பெருமாளுக்கு வைகானஸ ஆகமத்தின் படி பூஜைகள் நடைபெறுகின்றன.திருமலையில் நடப்பது போலவே அனைத்து உற்சவங்களும் நடைபெறுகின்றன. கோவிலில் ஸ்ரீ கோவிந்த ராஜ பெருமாள், பார்த்த சாரதிப் பெருமாள், ஸ்ரீ கல்யாண வேங்கடேஸ்வர பெருமாள், ஸ்ரீ ஆண்டாள் மற்றும் தனிக் கோவில் நாச்சியாராக ஸ்ரீ புண்டரிகவல்லி நாச்சியார் எழுந்தருளியுள்ளனர்.ஆழ்வார்களுக்கும் சந்நிதி உண்டு.

        திருமலையில், பகவத் ராமானுஜரை தவிர வேறு யாருக்கும் சந்நிதியில்லை. இதன் காரணம் ஆழ்வார்கள் திருமலையையே பெருமாளாக கருதியதால் மலை மீது ஏறவில்லையாம். அதனால் ஆழ்வார்களுக்கு மலைதாழ்வரையிலே ஆழ்வார் தீர்த்தம் என்ற இடத்தில் சந்நிதியுண்டு. இவ்விடேமே தற்போது கபில தீர்த்தம் என்று காஞ்சி பீடாதிபதிகளின் முயற்சியால் சைவச் க்ஷேத்திரமாக விளங்குகிறது.

      கோவிந்த ராஜ ஸ்வாமி சந்நிதியில் தான் அனைத்து ஆழ்வார்களின் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.

    அடுத்து, ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி பெருமாள் ஆலயம். இவ்விடத்திலுள்ள பெருமாளை ராமாயண காலத்தில் ராமனுடன் வாழ்ந்த ஜாம்பவான் என்ற பாகவதர் ப்ரதிஷ்டை செய்ததாக தல வரலாறு கூறுகிறது.

  ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி ஆலயம் திருப்பதி நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.இங்கு மூலவர் ஸ்ரீ ராம சந்திர மூர்த்தி சீதா பிராட்டியுடனும் இளைய பெருமாளான லக்ஷமண ஸ்வாமியுடனும் எழுந்தருளியுள்ளார்.

இங்கும் வைகானஸ ஆகமத்தின் படி பூஜைகள் நடைபெறுகிறது.ஆச்சார்ய ஸ்தானத்தில் விளங்கும் ஆஞ்சநேயர் ஸ்ரீ ராமனின் சந்நிதிக்கு நேர் எதிரே தனிக்கோவில் கொண்டருளியுள்ளார்.

    கோவிலைச் சுற்றி அருமையான நந்தவனம், குளு குளுவென இருக்கும்.

     இதையடுத்து, திருப்பதியிலிருந்து 12 கிலோ மீட்டர்  மேற்கு  நோக்கி பயணித்தால் 'ஸ்ரீ நிவாஸ மங்காபுரம்' இங்கு தான் பெருமாள் தனது கல்யாண கோலத்தை குறுமுனியான அகஸ்த்தியருக்கு காட்சியளித்த இடம்.  

இங்கு புகழ்பெற்ற சந்திரகிரி கோட்டையும் உள்ளது.ஸ்ரீ நிவாஸனின் கல்யாணத்தை காணாத அகத்தியர் பொதிகை மலையிலிருந்து நடந்தே திருமலைக்கு வரலானார்.

   அகத்தியரின் வருகையை அறிந்த பரந்தாமன் அவருக்கு மலையேறும் சிரமத்தைத் தராது, குறுமுனி நின்ற இடத்திலேயே தரிசனம் அளித்தாராம்.

     அது தான் ஸ்ரீ நிவாஸ மங்காபுரம். இங்கே பெருமாளின் திருநாமம் ஸ்ரீ கல்யாண வேங்கடேஸ்வர ஸ்வாமி. மேற்கூறிய அனைத்து கோவில்களும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நடத்தப்படும் கோவில்கள்.

 இங்கே பெருமாளை தரிசனம் செய்து திரும்பும் வழியில் ஸ்ரீ வேங்கடேஸ்வரா மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது.

    பின், ஸ்ரீ நிவாஸ மங்காபுரத்திலிருந்து திருப்பதி வரும் வழியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தாரால் நடத்தப்படும் ' கோசாலை'.இங்கு நிறைய பசுக்களும், காளைகளும் பராமரிக்கப்படுகின்றன.

இதில் சிறப்பு வாய்ந்த ' ஓங்கோல் பசு' வின் பால் தான் ஸ்ரீ நிவாஸனின் திருமஞ்சனத்திற்கு வழங்கப்படுகிறது.அங்கு சென்றால் கோ சேவை செய்யலாம். பசும்பாலில் தயாராகும் பால்கோவா மளிவு விலையில் கிடைக்கும்.

அங்கிருந்து புறப்பட்டால் வழி நெடுக கல்வி நிலையங்கள் தான்.

ஸ்ரீ வேங்கடேஸ்வர பல்கலைக்கழகம், ஸ்ரீ வேங்கடேஸ்வரா கல்லூரி என பாலாஜி காலனி வரை ஒரே கல்லூரி மயம் தான். ஸ்ரீ வேங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்கது.இது முழுக்க முழுக்க வேதங்களைக் கற்க,கற்பிக்க ஏற்படுத்தப் பட்ட பல்கலைக்கழகம்.

    இங்கு சென்றால் வேதம் பயிலும் மாணவர்கள் வேதமோதும் சப்தம் செவிகளுக்கு விருந்தாக அமையும். இதெல்லாம் நாம் திருப்பதியில் பார்க்க வேண்டிய இடங்கள் நண்பர்களே.

     அடுத்த முறை திருப்பதி செல்லும் போது இவ்விடங்களையெல்லாம் பார்த்து, ஆன்மீகமும் இயற்கையும் நிறைந்த இன்ப பயணமாக நம் பயணங்கள் அமையட்டும்.

   

11 comments:

  1. இவ்வளவு விஷயங்கள் இருக்கா? சூப்பர். எனக்கு கோயில் மட்டும்தான் தெரியும். அந்த பால்கோவா லட்டை விட சுவையாக இருக்குமா?

    ReplyDelete
  2. ம்ம்...மிகுந்த சுவையாக இருக்கும்..

    ReplyDelete
  3. எப்போது திருப்பதி போனாலும் இக்கோவில்களுக்கு போகத் தவறுவதில்லை. கபில தீர்த்தம் உட்பட . தூரம் குறாஇவா ஸ்ரீவாரி மெட்டு வழியாக மலைஏறியதும் உண்டு.

    ReplyDelete
  4. சிறப்பான தகவல்கள் நவீன்.

    மொழிபெயர்ப்பு பற்றி அறிந்தேன் வாழ்த்துகள் நவீன்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்... தாங்கள் எனது மொழிபெயர்ப்பை படித்து இன்னும் மேம்பட கருத்து கூறுங்கள் சார்

      Delete
  5. நவீன் இந்தக் கோயில்கள் எலலமே சென்றதுண்டு. பல முறை. நம் வீட்டில் திருப்பதி சென்றாலே இந்தக் கோயில்கள் எல்லாம் போகாம வர மாட்டாங்க. மலை ஏறியதும் பல முறை.

    பெருமாள் தாயார் திருமணம் நடந்த இடம் என்று சொல்லப்படும் நாராயணவனம். புத்தூரிலிருந்து 6,7 கிமீ தூரத்தில். இந்தக் கோயிலும் அருமையாக இருக்கும். இங்கு தாயாரின் சன்னதியில் அவர் திருமணத்திற்கு மஞ்சல் அரைத்ததாகச் சொல்லபபடும் பெரிய உரல் இருக்கிறது.

    இக்கோயிலுக்கும் அதிகம் சென்றதுண்டு.

    இராமானுஜர் மலையில் கால் பதித்து ஏறாமல் முழங்காலிட்டு நடந்து சென்றதாகவும் சொல்லப்படுவதுண்டு.

    ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க நவீன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆம் மேடம் ஸ்ரீ நிவாஸன் பத்மாவதி திருமணம் நடந்த இடத்தில் அதாவது நாராயணவனம் தான் மகேஷ் முன்னோர்கள் வாழ்ந்த இடம். இன்றும் கூட அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஏதோ ஸ்ரீ நிவாஸன் பத்மாவதி திருமணச் சான்று ஏதோ இருப்பதாக நம்பப்படுகிறது.

      Delete
  6. சிறப்பான தகவல்கள். திருப்பதிக்குச் சென்று முப்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. தலைநகர் வந்த பிறகு அங்கே செல்ல வாய்ப்பே அமையவில்லை. செல்ல வேண்டும் - என்றைக்கு அழைப்பு வருகிறதோ பார்க்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பெயரிலேயே வேங்கடவன் இருக்கிறான். சார்

      Delete
  7. Matured writing brother..no words to say keep rocking wat a talent you people have... wondering your skills...all the best bro

    ReplyDelete