Tuesday, 4 October 2022

திடீர் குருவாயூர் யாத்திரை

 வணக்கம் நண்பர்களே, 


       வலைதளம் பக்கம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. காரணம் எழுத ஏதும் கிடைக்கவில்லை. அதே சோறு, தூக்கம், ஏக்கம், வேலை என ஸ்வரஸ்யமாக எதுவும் கிடைக்கவில்லை. 

      ஆனால் தற்போது ஒரு யாத்திரை மேற்கொண்டேன்  அதை குறித்து பகிர்கிறேன். 

      நேற்று அக்டோபர் 3,திங்கட்கிழமை திடீரென எந்த திட்டமிடலும் இல்லாமல் குருவாயூருக்கு கிளம்பி விட்டேன். அது சரி, திட்டமிட்டு கிளம்ப குடும்பமா  குட்டியா... தனிமரம் தனி சுகம். காலை ஏழு மணி அளவில் பையை தூக்கிக்கொண்டு பேருந்துக்கு சென்றேன். சுமார் ஏழரை மணிக்கு உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி 8:30மணிக்கு பாலக்காட்டில் இறங்கி அப்போதே திருச்சூர் பேருந்தில் ஏறினேன். ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகு திருச்சூரை 10:30 மணிக்கு அடைந்து பின் குருவாயூருக்கு போகும் பேருந்தில் ஏறி 11:30 மணியளவில் குருவாயூரை அடைந்தேன். அங்கே வேஷ்டி மற்றும் துண்டுக்கு மாறி, கோவிலில் வரிசையில்  நிற்கையில் மணி மதியம் 12:30. இரண்டு மணி நேர காத்திருப்பிக்கு பின் பிற்பகல் இரண்டரை மணிக்கு குருவாயூரப்பன் வராக மூர்த்தியாக தரிசித்து பின் வெளியே வந்தவுடன் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மாலை 4:30 மணிக்கு நடை திறப்பார்களாம். பல வண்ண வண்ணக் காட்சிகளைக் கண்ட வண்ணம், (சுவரோவியங்கள்) ஏனென்றால் நான் மிகவும் நல்லவன், நடந்து வெளியே வர ஒலிபெருக்கியில் இலவச மதிய உணவிற்கான அறிவிப்பு வந்தது. ஓசி சோற்றை விடுவேனா? புகுந்து விட்டேன். திருப்தியாக சாப்பிட்டு பின் வந்து பேருந்திலேறி திருச்சூரை அடைந்து அங்கிருக்கும் வடக்குநாதரையும், பரமேற்காவு பகவதியையும் தொழுதுவிட்டு பேருந்து நிலையம் வந்து பார்த்தால் திருச்சூரிலிருந்து உக்கடம் வரையிலான பேருந்து காத்துக் கொண்டிருந்தது. ஜாலியாக ஏறியமர்ந்தேன் 7:30 மணிக்கு. இரவு 10 மணிக்கு உக்கடம் வந்து சேர்ந்து பின் ஒரு உள்ளூர் பேருந்தில் ஏறி வீட்டை இரவு 11:00 மணிக்கு அடைந்தேன். இதில் நான் வியந்தது என்னவென்றால் எல்லாம் தகுந்த நேரத்தில் நடந்தது. மதியம் தரிசனம் செய்ய இயலாமல் போயிருந்தால் மாலை  4:30 மணிக்கு மேல் தான் தரிசனம் செய்திருக்கவியலும். பின் வடக்குநாதரை தரிசனம் செய்ய சமயமிருந்திருக்காது. என்னை யாத்திரை முழுவதிலும் பார்த்தசாரதியாய் வழிநடத்திய கண்ணன் எனது வாழ்க்கையையும் வழிநடத்துவான் என்பதில் சந்தேகமில்லை. நமது திட்டங்கள் பொய்த்துப் போகலாம் ஆனால்  இறைவனது திட்டம் என்றும் பொய்ப்பதில்லை என்பதை நேற்று உணர்ந்தேன். 


Sunday, 27 December 2020

பாவமூட்டை

சிறுகதை போட்டிக்கு நான் எழுதிய மூன்றாவது கதை


                                                  

                                                            

 

" என்னடா வெங்காய மூட்டையெல்லாம் வண்டியில அனுப்பியாச்சா" என்று கேட்டபடி வெள்ளை வேட்டி,சட்டையுடன் வந்து நாற்காலியில் அமர்ந்தான் ராமமூர்த்தி. பெயரளவில் தான் ராமமூர்த்திஅவனது தந்தையின் காய்கறி வியாபாரத்தை தானே ஏற்று நடத்தி வந்தான்.அவனது தந்தை தனது கடும் உழைப்பால் காய் கறி வியாபாரத்தை வளர்த்திருந்தார்.எதிர்பாராத விதமாக நேர்ந்த ஒரு விபத்தினால் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, வியாபாரத்தை தான் ஏற்று நடத்தினான் ராமமூர்த்தி. அவனிடம் நிறைய வியாபாரிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்குவர். "என்னப்பா கண்ணப்பா மூனு மாசமா வட்டி வரல, வீட்டுப் பத்திரம் ஞாபகம் இருக்குதா?" என்றான் ஒரு வியாபாரியிடம்." அண்ணே, மழையில சரியா வியாபாரமே இல்லண்ண, கொஞ்சம் பொறுங்கண்ண, அடுத்த மாசம்..." என்றிழுத்த வியாபாரியிடம் " அப்படியா, சரிப்பா... அடுத்த மாசமே குடு ஆனா வட்டிக்கு வட்டியா சேர்த்து வரணும்" என்றான். அந்த வியாபாரி " ஐயா....."என அழுதவாரே இழுத்தான் அந்த அப்பாவி வியாபாரி." "அது சரி...உன் கஷ்டம் உனக்கு என் கஷ்டம் எனக்கு சரி ஒன்னு செய்யலாம் உன் வீட்டில் ஒரு சிட்டிருக்கே அதை என்னிடம் வர சொல்லு கணக்க தீத்துபுடலாம்" சற்றும் இரக்கமில்லாமல் அனைவரின் முன்னிலையிலும் பச்சையாக கூறினான் ராமமூர்த்தி. இதனை கேட்ட வியாபாரி அழுது கொண்டே போய் அவமானம் தாங்க முடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். 

    ராமமூர்த்தி தான் அவர் தற்கொலைக்கு காரணமென தெரிந்திருந்தும் விலை போன காவலர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. பாவம் அந்த குடும்பம் நிர்கதியானது.ஊரில் காய் கறி வியாபாரிகளுக்கு அவனால் மிகுந்த இடையூறுகள் ஏற்பட்டன.  ராமமூர்த்திக்கு  மந்திரி செல்வாக்கு கூட அதிகம். தன்னிடம் இருக்கும் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி அவ்வூரில், அவனிடம் மட்டுமே அனைத்து சில்லரை வியாபாரிகளும் காய் கறிகளை வாங்கும் நிலையை ஏற்படுத்தி விட்டான். விலையையும் கூட்டி அநியாயம் செய்து கொண்டிருந்தான். எதிர்த்துக் கேட்டவர்களுக்கு தந்திரமான முறையில் தொல்லைகள் கொடுத்து அவர்களைக் கடன் வாங்கத் தூண்டிடுவான். 

   

   ஒரு கட்டத்தில் அவனிடம் கடன் வாங்கியவர்கள் அனைவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வளவு அக்கிரமங்களைச் செய்யும் அவனை கேட்க மக்கள் எவரும் துணியவில்லை. தனது ஊர் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் சொந்த காரர்களுக்கு மட்டும் நல்லது செய்து, ஊர் உயர் பதவிகளில் அந்த படித்த இளைஞர்களை அமரவைத்து தனது மகுடிக்கு ஆடும் பாம்புகளாக அவர்களை வைத்திருந்தான். அவர்களின் மூலம் பல நிலம் சம்பந்தப்பட்ட அரசாங்க வேலைகளை தானும் சாதித்துக் கொண்டு இருந்தான். இதுபோக,  ஊரில் அதிக வட்டிக்கு தன் பணத்தை விட்டு வியாபாரம் செய்தான். வட்டி கட்ட இயலாத சிறு வியாபாரிகளின்  நிலங்களை கையகப்படுத்தினான். இன்னும் கொடுமை என்னவென்றால் அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களிலுள்ள பெண்களை சீரழித்தான். இவ்வாறு ஒரு ஏகாதிபத்தியம் போல தன் அரசியல் பலத்தாலும் பண பலத்தாலும் ஊரையே தனது ஆளுகைக்குக் கீழ் வைத்திருந்தான் ராமமூர்த்தி. 


     அவன்  பல அநியாயங்களை அரங்கேற்றிய வண்ணமிருந்தான்.ஒருமுறை, ராமமூர்த்தி தனது அறையில் வேறொரு பெண்ணை அணைப்பதை அவன் மனைவி கண்டுவிட்டாள். அவனது அநியாயங்களை பொறுக்கமுடியாமல்  அவனது மனைவி அவனை விட்டு விலகி தன் தந்தை வீட்டிற்கே சென்றுவிட்டாள். ராமமூர்த்தியின் கொடுமைகள்    இறைவனுக்கே பொறுக்கவில்லை போலும். அவனுக்கு குழந்தைகளே இல்லாமல் போனது. அவன் போகாத கோவில்கள் இல்லை பார்க்காத மந்திரவாதிகள் இல்லை.  .ராமமூர்த்தி சுடுகாட்டு வெட்டியான் ஆறுமுகத்தைக்கூட்டாக வைத்துக்கொண்டு இரவில் இருவரும் மது அருந்துவார்கள். அப்போது வெட்டியானின் தேவைகளுக்காக நிறைய பணம் தருவான் ராமமூர்த்தி.வெட்டியானை பொறுத்தவரை ராமமூர்த்தி தான் அவனுக்கு தெய்வம்.வெட்டியானின் மகனுக்கு அரசு வேலையும் வாங்கிக்கொடுத்தான்.  


      தற்கொலை செய்த நபரின் இறுதி சடங்கிற்கு மாலையுடன் மயானத்துக்கு அவன் சென்ற போது அவனை ஒரு பெண் " நீயெல்லாம் விளங்கவே மாட்டாய். சத்தியமா சொல்லுறேன் என் புருஷன் உன்கிட்ட கைநீட்டின பாவத்துக்கு அவர நோகடிச்சு கொன்னுட்டியேடா பாவி" என்றபடி சுடுகாட்டு மண்ணை தூற்றி சாபமிட்டாள். அடுத்த நாள் காலையே அதிர்ச்சியான செய்தியொன்று அவனுக்கு காத்திருந்தது. வழக்கம் போல் காலையில் எழுந்து தனது நாற்காலியில் அமர்ந்து சிகரெட்டை பற்ற வைத்தான். மேஜை மீதிருந்த அவனது அலைபேசி அலறியது.  அழைப்பை ஏற்றவனுக்கு திடீர் அதிர்ச்சி. 


    மறுமுனையில்,"அண்ணே, சரக்கு வந்த வழியில மல செக்போஸ்ட் ல போலீஸ் கிட்ட நம்ம லாரி மாட்டீருச்சு அண்ணே. நான் தப்பிச்சோம் பிழச்சோமென காட்டிற்குள் புகுந்து  வந்து உங்களோட பேசறேன். நம்ம பசங்க வசமா போலீஸ் கிட்ட மாட்டிகிச்சு"என்றான் ராசு.  "காசு குடுக்க வேண்டீது தேன" என்றான் ராமமூர்த்தி. "அண்ணே, யாரோ புது ஆளாம்."  "சரி நீ தலைமறைவாகிடு.நான் பாத்துக்கிறேன்" என்று கூறி அழைப்பைத் துண்டித்தான். விரைந்து தனக்குத் தெரிந்த காவல்துறை உயரதிகாரியை தொடர்பு கொண்டு விஷயத்தை கூற முற்பட்டான். ஆனால் அந்த அதிகாரியின் இடத்தில் வேறொரு அதிகாரி நியமிக்கபட்டிருந்தார். அழைப்பு துண்டிக்கப்பட்டது. இது போல் பல நிகழ்ந்தன. 

 

        சரக்கு வரத்து குறைந்ததால் அவனது வியாபாரத்தில் படிப்படியாக வீழ்ச்சியை சந்தித்தான். இதற்கு ஏற்றாற்போல்,அவனது வாடிக்கையாளர்களும் மெதுவாக அவனை ஏமாற்ற ஆரம்பித்தார்கள். இதனால் மனமுடைந்த ராமமூர்த்தி மந்திரவாதியொருவரை வரவழைத்து தனக்கு ஏன் தற்காலத்தில் இவ்வளவு துன்பங்கள்  என்பதையறிய முயற்சி செய்தான். அந்த மந்திரவாதியோ ராமமூர்த்தியிடம் அந்த பூஜை இந்த பூஜை யென நிறைய பணத்தைக் கொள்ளையடித்து சென்றுவிட்டான்.

    

       ராமமூர்த்தி மிகுந்த வருத்தமடைந்தான்.அவனை சுற்றியிருந்த கூட்டம் அவனிடம் செல்வம் குறைய தொடங்கியதையறிந்து அவனிடமிருந்து படிப்படியாக விலகிச் செல்லலாயினர். அவனது செல்வாக்கு குறைய ஆரம்பித்தது.அவனால் பாதிப்படைந்த பலர் அவனை பழிவாங்க துடித்தனர். படிப்படியாக தனது சொத்துக்களை இழந்தான்.  போதாக்குறைக்கு வயோதிகம் வேறு அவனை படுத்தியெடுத்தது.மருத்துவமனைக்கு நடந்து நடந்து அவன் கால்கள் தேய்ந்ததுதான் மிச்சம். 

       

       ஒருநாள், ராமமூர்த்தி தனது வீட்டு முற்றத்தில் நாற்காலியில் அமர்ந்து சற்று கண் வளர்ந்தான். அப்போது அவனால் பாதிக்கபட்ட ஒருவன் அவன் மீது கல்லெறிந்தான் அந்த கல் ராமமூர்த்தியின் நெற்றியில் பட்டு ரத்தம் கசிந்தது. "ஐய்யோ அம்மா..." ராமமூர்த்தி கூச்சலிட்டுக்கொண்டே நிலத்தில் சரிந்தான். அவ்வழியாக வந்த வெட்டியானின் மகன் கலைச்செல்வன் ராமமூர்த்தியை மருத்துவமனையில் சேர்த்தான். வெட்டியானும் விசயமறிந்து மருத்துவமனைக்கு விரைந்தான். 


         ராமமூர்த்தியை அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருந்தனர். "ரத்தம் அதிகமா போனதால...மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதில் சிரமம் இருக்கு, வி வில் ட்ரை அவர் பெஸ்ட்" மருத்துவர் கூறி சென்றார். நாட்கள் கடந்தன ராமமூர்த்தியின் உடல் நிலை சற்று சீரடையவே அவனை அவசர சிகிச்சை பிரிவிலிருந்து அறைக்கு மாற்றினர். அறையில் ராமமூர்த்திக்கு நினைவு திரும்பிடவே, தான் செய்த தவறுகளை எண்ணிவருந்தினான்.  ராமமூர்த்தி கண் திறந்ததைக்கண்ட ஆறுமுகம் சற்று ஆறுதலடைந்து "சாமி ஏதாது ச்சாப்பிட்ரீகளா?" என கண்ணீரோடு கேட்டான்.   ராமமூர்த்தி ஏதும் பேசவில்லை. அவனது கண்களில் கண்ணீர் குளம் போல தேங்கியிருந்தது. தனது வாழ்க்கையை ஒரு முறை திரும்பிப்பார்த்தான். எத்தனை கொடுமைகள், எத்தனை அக்கிரமங்கள். கோரமான முகமொன்று அவன் கண் முன் தோன்றியது. தனது நிலையை கண்டு  தானே   அஞ்சி நடுங்கினான் ராமமூர்த்தி.


       "ஆறுமுகோ, இனி நான் பொழக்கமாட்ட. எனக்கு எஞ்சி இருக்கறது என் வூடு மட்டுந்தே.அத என் மனைவிக்கு அப்புரோ நீ எடுத்துக்கோ. ஊ மவன்  கிட்ட சொல்லி நா அடமானத்துக்கு அப்பாவி ஜனங்க கிட்ட புடுங்கி வைச்ச பத்தரத்த யெல்லா அவுங்கவுங்க கிட்டயே கொடுத்திட சொல்லு.இப்புடியாது என்னோட பாவ மூட்டையோட பாரோ கொஞ்மாவது குறயுதானு பாக்கலாம்" என்று சொல்லி கண்களை அகன்று விழித்தான் ராமமூர்த்தி. ஆறுமுகம் கதறிக்கொண்டு மருத்துவரை அழைத்து வருவதற்குள் ராமமூர்த்தியின் உயிர் பிரிந்திருந்தது. 


       காரியத்திற்கு பின்னர், இராம மூர்த்தியின் மனைவியின் துணைகொண்டு  ராமமூர்த்தி ஏற்கனவே யார் யாரிடம் வரவு செலவு என்ற விஷயங்களை எழுதி வைத்திருந்த குறிப்பேட்டை பெற்று, அதனைக் கொண்டு ஆறுமுகமும் அவன் மகனும் நேர்மையாக செயல்பட்டு பத்திரங்களைப் பத்திரமாக அவரவர்களிடம் ஒப்படைத்து விட்டனர். 

       

      இரண்டு நாட்கள் கழித்து அவ்வூர் டீக்கடை பெஞ்சில் சிலர் அமர்ந்திருக்க, "ராமமூர்த்தி கத இப்படி முடிஞ்சு போச்சே" என ஒருவர் கிசுகிசுக்க மற்றொருவர் அதற்கு "ஆமாப்பா, எப்படியோ என்னோட பத்திரம் வந்திருச்சு..இனிமே கொல சாமி சத்தியமா கடனே வாங்கமாட்டேனப்பா சாமி" என நிம்மதி பெருமூச்சு விட்டான்.


        டீ கடையில், " ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கத உனக்கு தெரியுமா" என்ற பாடல்  சன்னமாக ஒளித்துக்கொண்டிருந்தது. 

                  

                                          ***முற்றும்***

Friday, 18 December 2020

பிரியமான தோழி


சிறுகதை போட்டிக்கு நான் எழுதிய  இரண்டாவது கதை 

        

                                                    

         சரஸ்வதி அவசரமாக தன் வீட்டுக்கு புறப்பட்டு கொண்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து அவளைப் பார்க்க ஓர் வயதான பாட்டி லொக்கு லொக்கு வென இரும்பிக்கொண்டு வந்தார். "பாட்டி, அங்கேயே உட்காருங்க.இதோ வருகிறேன்" பையை மேஜைமேல் வைத்தபடி பாட்டியிடம் கூறினாள் சரஸ்வதி. வேகமாக வந்து பாட்டியை பரிசோதித்து, " பாட்டி, உங்களுக்கு சளி பிடுச்சிருக்கு.நீங்க பனிகாலத்துல வீட்ல இருக்கறது தான் நல்லது.இந்தாங்க இந்த மாத்திரையை இரண்டு நாள் காலையும் மாலையும் சாப்பாட்டுக்கு பின் சாப்பிடுங்க" என்று தனது மேஜை மேலிருந்த மாத்திரை அட்டையை எடுத்து இலவசமாக பாட்டியிடம் வழங்கினாள்.சரஸ்வதி எப்போதுமே வயதான ஏழை பெண்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆகவே, அப்பகுதியில் அனைத்து பாட்டிமார்களும் மருத்துவத்திற்கு சரஸ்வதியைத்தான் அணுகுவார்கள்.

இவள்‌ அதன் பின் கிளம்பி வீட்டுக்கு சென்றாள். மணி இரவு பத்தரையாகியிருந்தது. தனது காரை‌யியக்கி வீட்டை‌ அடைந்தாள். வீட்டின் சாவியை மறந்து தனது மருத்துவமனை அறையிலேயே விட்டுவந்துவிட்டாள். தனது வீட்டில் வேலை செய்யும் உறவுக்கார மற்றும் நம்பிக்கையான பெண் கலைவாணியிடம் ஒரு சாவி அவசரத்திற்கு கொடுத்து வைத்திருந்தாள்.

கலைவாணியும் சரஸ்வதியும் சமவயதுப் பெண்கள். கலைவாணியின் குடும்பம் பொருளாதார வசதி இல்லாமல் கஷ்டப்படும் குடும்பம். சரஸ்வதியும்,கலைவாணியும் சிறுவயதில் ஒரே பள்ளியில் படித்தாலும் கலைவாணி பாதியில் படிப்பை நிறுத்தவேண்டிய சூழ்நிலை வந்தது. அதற்குக் காரணம் கலைவாணியின் குடிகாரத் தந்தையின் திடீர் மரணம். கலைவாணியின் தாயும் அதைத் தொடர்ந்து இரண்டே வருடங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அதிலிருந்து கலைவாணி சரஸ்வதியின் பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தாள். பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு சரஸ்வதியின் வீட்டிலேயே இருந்தாள். சரஸ்வதியின் பெற்றோர் கலைவாணிக்கு நல்ல வரனாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். சரஸ்வதிக்கும் மாப்பிள்ளை பார்த்தனர் ஆனால் அவள் வந்த வரன்களையெல்லாம் வேண்டாமென சொல்லிவிட்டாள். தான் மேலும் படிக்க வேண்டும்‌ எனக்கூறிவிட்டாள். தற்போது கலைவாணிக்கு திருமணமாகி ஒரு வருடமாகிவிட்டது.

சரஸ்வதி முழு நேர மருத்துவராக மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தாள். கலைவாணியிடம் வீட்டின் சாவியை கேட்க தனது அலைபேசியில் அழைத்தாள் கலைவாணி அழைப்பை ஏற்கவில்லை. சரஸ்வதியின் பெற்றோர் சுற்றுலா சென்றுவிட்டனர்.வருவதற்கு பத்து நாட்களாகும். இரண்டு தெருக்கள் தள்ளி கலைவாணியின் வீடு இருப்பதால் அங்கு சென்று வாங்கிவர எண்ணினாள் சரஸ்வதி. சரஸ்வதி கலைவாணியின் வீட்டை அடைந்த சமயம் அங்கு விளக்குகள் அணைந்திருந்தது. சரஸ்வதி மெதுவாக சன்னலோரம் செல்லும் போது அவர்கள் அந்தரங்கமாக இருப்பதை பார்த்து விட்டாள். சரஸ்வதிக்கு மனதில் கல்யாண ஆசை துளிர்விட்டது. வேகமாக அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.அவர்களை இந்த நேரத்தில் தொந்தரவு செய்யக்கூடாது என்றாலும் தனக்கு வீட்டின் சாவி வேண்டும் என்ற நிர்பந்தத்தால் கலைவாணியின் வீட்டுக் கதவை தட்டினாள் சரஸ்வதி.

கலைவாணியும் அவள் கணவனும் திடுக்கிட்டு வெளியே வந்து பார்த்தால் வெளியே சரஸ்வதி கோட்டோடு நின்றிருந்தாள். " என்ன அக்கா, இந்த நேரத்தில?" என்றாள் கலைவாணி. " பதறவேண்டாம் கலை. நான் க்ளினிக்ல புறப்பட்டப்போ ஒரு பாட்டி வந்ததால அவங்களுக்கு மருந்து கொடுத்திட்டு அவசரமாக கிளம்பினேன் கிளம்பினப்போ எனது வீட்டு சாவியை மறதியாக மேஜை மீதே விட்டுட்டு வந்துட்டேன்" என்று தலையை

 தேய்த்தபடியே சொன்னாள் சரஸ்வதி.

" சரி சரி அக்கா, இவ்ளோ தானா, இருங்க உங்க சாவிய எடுத்திட்டு வர்றேன்" என்று கூறிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் கலைவாணி. வீட்டிலிருந்து சரஸ்வதியின் வீட்டு சாவியை எடுத்துக்கொண்டு சரஸ்வதியுடன் புறப்பட்டாள் கலைவாணி. "இல்ல கலை. சாவிய மட்டும் கொடு நான் போய்கரேன்" என்றாள் சரஸ்வதி. "இல்லக்கா, வழியில நாய் தொல்லை அதிகம் அதனால நான் எதுக்கும் துணைக்கு வருகிறேன்" என்றால் கலைவாணி. "என்னங்க..நான் ராத்திரி சரஸ்வதி அக்கா கூடயே அவங்களுக்கு துணையாக இருந்திட்டு காலைல‌ வர்றேன்" என்று தன் கணவனிடம் கூறிவிட்டு சென்றாள்.

கலைவாணி சிறுவயதிலிருந்து அதே ஊரில் வளர்ந்தவள் என்பதால் அவளுக்கு அங்கு அனைவரையும் தெரியும். ஆனால் சரஸ்வதி அவ்வூரில் பிறந்திருந்தாலும் படிப்பு,கல்லூரி என நகரங்களிலேயே வாழ்ந்தவள். ஆனால் கலைவாணி,சரஸ்வதியின் நட்பு மட்டும் தொடர்ந்து கொண்டு இருந்தது. என்ன தான் சரஸ்வதி படித்திருந்தாலும் நடைமுறை விசயங்கள் அவளுக்கு ‌அவ்வளவாக தெரியாது. கலைவாணி தான் அவளுக்கு எல்லாம் செய்து கொடுப்பாள்.

கலைவாணி தனக்கு சரஸ்வதியின் பெற்றோர் அளித்த வாழ்க்கைக்கு நன்றியாக சரஸ்வதிக்கு தேவையான எல்லா வேலைகளையும் செய்தாள். அவ்வப்பொழுது சரஸ்வதி தன் தோழி இதையெல்லாம் செய்வது தனக்கு பிடிக்கவில்லை என கூறியும் கலைவாணி கேட்க வில்லை. " நான் உனக்காக செய்யவில்லை உன் அப்பா அம்மா எனக்கு கொடுத்த‌ வாழ்க்கைக்காக செய்கிறேன்.அன்னிக்கு என் அப்பாவும் அம்மாவும் இறந்தப்ப அவங்க என்ன கைவிட்டிருந்தா இந்நேரம் என்னோட நிலைமை என்னவாயிருக்குமுன்னு எனக்கு இப்ப நினைச்சா கூட பயமா இருக்குது"என்பாள்.

சரஸ்வதி அவளது புராணத்தை கேட்டு அழுத்துப்போய் தூங்கியே விடுவாள். அன்று கலைவாணியும் சரஸ்வதியும் சரஸ்வதியின் இல்லத்திலேயே தங்கி விட்டனர். சரஸ்வதி கலைவாணியிடம் "நாம ரெண்டு பேரும் சேர்ந்து தூங்கி எத்தன வருஷமாச்சு"என்றாள். இருவரும் பேசிக்கொண்டே இருந்தனர். சரஸ்வதி தனக்கு தூக்கம் வரவில்லை எனவும் ஏதேனும் திகில் படம் பார்க்கப் போவதாகவும் கூறிச்சென்றாள். சரஸ்வதியின் அறையில் சுவற்றை ஒட்டிய பெரிய திரை தொலைகாட்சியிருக்கிறது. அதை வீட்டுவேலை செய்யும் போதெல்லாம் கலைவாணி அதில் படம் பார்த்தால் நன்றாயிருக்கும் என்று நினைப்பாள். ஆனால் பாவம்‌ அவளுக்கு அந்த தொலைக்காட்சியை இயக்கத் தெரியாது. இப்போது சரஸ்வதி அதில் படம் காட்டப்போகிறாள் என்றவுடன் ஒரே ஆனந்தம் கலைவாணிக்கு. "அக்கா , எனக்கும் தூக்கம் வரல" நானும் படம் பார்க்க வருகிறேன் என்றாள்".

 

  இருவரும் படம் பார்க்க அமர்ந்தனர். சரஸ்வதி அமேசான் தளத்தில் புதிதாக வெளியான ஒரு திகில் படத்தைப்போட்டாள் அதில் வந்த சில காட்சிகள் கலைவாணியை பயமுறுத்தினாலும் சரஸ்வதியின் துணையோடு அவள் அதைப் பார்த்தாள்.அந்த படத்தில் ஒரு கயவன் சொத்துத் தகராறில் ஒரு பெண்ணைக் கொன்று அந்த பெண்ணின் சடலத்தை உருத்தெரியாமல் எரிக்க இடுகாட்டுக்கு கொண்டு செல்கிறான் அப்போது அங்கிருந்த வெட்டியானிடம் லஞ்சம் கொடுத்து அந்த பெண் சடலத்தை எரிக்கச் சொல்கிறான். சடலத்தை எரிக்க அவர்கள் எத்தனித்த போது அங்கு வானத்திற்கும் பூமிக்குமாக ஒரு பெரிய பெண்ணின் முகம் தோன்றியது.அந்த முகத்தை பார்க்கவே பயங்கரமாக இருந்தது.கலைவாணி தன் கண்களை மூடிக்கொண்டாள் ஆனால் சரஸ்வதி மும்மரமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

 அந்த முகத்தில் ஆங்காங்கே வெடிப்புக்களும் ரத்தக்காயங்களும் இருந்தன. திடீரென அந்த முகம் தன் வாய் திறந்து பேச ஆரம்பித்தது. அதன் வாயில் அனைத்து பற்களும் சுறாமீனின் பற்களை போல் கோரை பற்களாக இருந்தது. அந்த பேய் சொன்னது " எனது உடல் எரியும் முன் நீங்களிருவரும் எரிந்து சாம்பலாக போகிறீர்கள்" எனக் கூறி தனது விழிகளை அகன்று விழித்தது. உடனே அந்த கண்களிலிருந்து நெருப்பு வரத்தொடங்கியது. அந்த கயவனும், வெட்டியானும் பயந்து ஓடினர் ஆனால் அவர்களால் தப்பிக்கவியலவில்லை. அவர்கள் இருவரும் எரிந்து சாம்பலானார்கள். இதை மிகவும் விறுவிறுப்பாக இருவரும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

  இதன் பின் ஒருவழியாக படம் முடிவுக்கு வரவே, இருவரும் தூங்கிவிட்டனர். கலைவாணி இதற்கு முன் இது போன்ற பெரிய திரையில் படம் பார்த்ததில்லை என்பதால் அந்த காட்சிகள் அவள் மனத்தில் பதிந்து விட்டது. கலைவாணி திடீரென திடுக்கிட்டு கத்தி கூச்சலிட்டு எழுந்தாள். சரஸ்வதி எழுந்து பதற்றத்தோடுயிருந்த கலைவாணியை தெளிவித்து கேட்ட போது, இரவு ஆழ்ந்த உறக்கத்தில் அவளிருந்த போது கனவில் படத்தில் பார்த்த உருவத்தைப் போலவே ஒரு உருவத்தை கண்டதாகவும், அவ்வுருவம் நெருப்பை கக்கிக் கொண்டு தன்னை துரத்தியதாகவும் தெரிவித்தாள்.

சரஸ்வதி மருத்துவராதலால் கலைவாணியின் நிலைமையை புரிந்து கொண்டு தான் செய்த தவறை புரிந்துகொண்டாள். மேலும் கலைவாணியை சரஸ்வதி பரிசோதித்த போது கலைவாணி தாயாகும் அறிகுறிகளைக் கண்டறிந்து மகிழ்ச்சியுற்றாள். அப்போது எதுவும் கலைவாணியிடம் சொல்லாமல் அவளை அமைதியாக உறங்கவிட்டு காலையில் கலைவாணியிடம் ஒரு சூடான காபியைக் கொடுத்து கலைவாணியிடம் அந்த நல்ல செய்தியை பகிர்ந்தாள். கலைவாணியால் சந்தோஷத்தை தாங்க முடியவில்லை. தனது கணவனிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளத் தன் வீட்டுக்கு விரைந்தாள்.

  வீட்டில் கணவனிடம் கலைவாணி விசியத்தை சொல்லவே அவள் கணவன் ஆனந்தத்தோடு இனிப்புகளை வாங்கிக்கொண்டு சரஸ்வதியின் வீட்டிற்கு சென்று சரஸ்வதிக்கு இனிப்புகளை வழங்கினார். சரஸ்வதி, கலைவாணியை நன்றாக கவனித்து கொள்ளும் படி அவள் கணவனுக்கு அறிவுரைகளை வழங்கினாள். அவ்வப்பொழுது மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வருமாறும் கூறினாள். நாட்கள் நகர்ந்தது. சுற்றுலா முடிந்து வந்த பெற்றோர் விசியமறிந்து கலைவாணிக்கு நல்ல முறையில் சீமந்தமும் செய்து வைத்து மிகுந்த அக்கரையுடன் கவனித்தனர்.கலைவாணிக்கு மாதம் நெருங்கியது. சரஸ்வதி கலைவாணிக்கு அவ்வப்பொழுது இலவசமாக சிகிச்சைகள் செய்து, தக்க அறிவுரையும் வழங்கி இறுதியில் பிரசவமும் இலவசமாகச் செய்தாள்.

கலைவாணிக்கு பெண்பிள்ளை பிறந்தது. சரஸ்வதியின் தூய்மையான சேவைக்காக கலைவாணியின் கணவன் சரஸ்வதிக்கு பரிசு கொடுக்க எண்ணி தன்னால் இயன்ற ஒரு கிராம் தங்கத்தை வழங்கினான். அதனை மனதளவில் ஏற்றுக் கொண்ட சரஸ்வதி, அதனை அந்த பெண் குழந்தைக்கு என்றே வைத்திருந்தாள். கலைவாணியும் அவள் கணவனும் தங்கள் குழந்தைக்கு சரஸ்வதியே ஒரு நல்ல பெயரை வைக்க வேண்டியதையடுத்து, சரஸ்வதி அந்த குழந்தைக்கு இரண்டு கிராம் தங்க காசை அன்பளிப்பாக வைத்து 'மஹா ஸ்வேதா' என்ற பெயரையும் சூட்டி மகிழ்ந்தாள். மற்றொரு புறம், தாய்மையின் ஆனந்தத்தை உணர்ந்த சரஸ்வதி தன் பெற்றோரிடம் திருமணத்திற்கு சம்மதமும் தெரிவித்தாள்.

****முற்றும்****