Saturday 23 May 2020

கடன் பட்டார் உள்ளம் போல்...



நமஸ்காரம் நண்பர்களே,

ஒருவழியாக பல்கலைக்கழகத்தில், மகேஷ், நாயக், ராமகிருஷ்ணய்யா என நண்பர்கள் கூட்டம் அமைந்தது. முதுகலை முதலாமாண்டு எனக்கு அளிக்கப்பட்ட விடுதி 'H-block'.
அங்கிருக்கும் விடுதிகளிலேயே இயற்கையழகு சூழ்ந்த வனப்பான இடம் அதுதான். கட்டடமே வெளியே தெரியாது. அதனைச் சுற்றி மரங்கள் அடர்ந்திருப்பதால் குளு குளு வெனவிருக்கும். நள்ளிரவில் அங்கு சிறுத்தைகளின் நடமாட்டமும் உண்டு. நான் அங்கு செல்லும் போது இரண்டு தளங்களை மட்டும் அக்கட்டிடம் கொண்டிருந்தது.
    மூன்றாவது தளத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன.மேலும் அந்த விடுதியில் மட்டும்தான் இருபத்திநான்கு மணி நேரமும் ஜலம் வரும். 
         
   மற்ற விடுதிகளில், காலை ஒரு மணி நேரமும் மாலை ஒரு மணி நேரமும் தான் வருணதேவனின்அனுக்ரஹமிருக்கும்.

        என்னைப்  போன்ற பெருந்தீனிகாரர்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.

  எனக்கு விடுதியில் நாயக்கிடம் ஏற்பட்ட நட்பு நீண்ட நாள்கள் நீடிக்கவில்லை.காரணம் அவனது வாய்.சதா பேசி கொண்டே இருப்பான். நாங்கள் இருந்த அறை எண்.16. நாளுக்கு நாள் அவன் பேச்சு அதிகமாகி கொண்டே போனதால்,  ஒரு நாள் மாலை நான் எனது அறையை
விடுதிக்காப்பாளரின் அனுமதியோடு மாற்றிக்கொண்டேன்.

             அறை  எண்.2 க்கு மாறினேன். அங்கே தான், ராமகிருஷ்ணய்யா இருந்தான். அவன் ஒரு மாற்றுத்திறனாளி. எனவே அவனுக்கு உதவுவதாகக் கூறி விடுதிக்காப்பாளரின் நெஞ்சை தொட்டுவிட்டேன்.அவர் எனக்கு உடனே அனுமதியளித்தார்.

        ராமகிருஷ்ணய்யா திறமையானவன் மட்டுமல்ல பணிவுமிக்கவனும் கூட. அமைதியாகத் தானுண்டு தனது வேலையுண்டு என இருப்பவன். எனக்கு தனி மரியாதைதான் அறையில். மின்விசிறிக்கு கீழ் எனது கட்டில். சுகமான காற்றுதான் ஆனால் அது போடும் ஆட்டம் நடனக்கலைஞர்களை கூட விஞ்சும்.

         இவ்வாறு சுகமாக நாட்கள் கழிய, தானாக வம்பொன்று என்னை நோக்கி வந்தது. பாண்டிச்சேரியில் இருந்து இருவர்  விடுதியின் மூன்றாம் தள கட்டிட பணிக்காக அங்கு தங்கியிருந்தனர். இவர்களிருவரும் ஒப்பந்த ஊழியர்கள்.பல்கலைக்கழகம் பல ஒப்பந்தங்களை செய்துகொள்ளும். இது ஓர் வகை நிர்வாக வசதிக்காக நடப்பது வாடிக்கை. அவர்கள் தமிழில் உரையாடி கொண்டிருப்பர். நானும் அவர்களுடன் பேச ஆரம்பிக்க, நாங்கள் நண்பர்களானோம்.

          இரு வாரங்களுக்குப் பிறகு, அவ்விருவரில் ஒருவன் ஊருக்கு போய்விட்டான். அவன் ஊருக்கு போகட்டும் அல்லது காட்டுக்குப் போகட்டும் அது பற்றிப் பேச்சேயில்லை.

         அவன் எங்கள் விடுதி காவலாளியிடம் 500 ரூபாய் பெற்றுவிட்டு என்னிடம் வசூல் செய்துகொள்ளும் படி கூறிவிட்டுச் சென்றிருக்கிறான். இதை எனக்கு மற்றொரு நபர் தெரிவித்தார். அட ராமா, நான் ஏன் எவனோருவனுக்காக பைசா தரவேண்டும். நான் எனக்கே அறைகுறையாத்தான் செலவழிப்பேன்.

          இந்த நிலையில், நான் செய்வதறியாமல் திகைத்தேன்.
அன்றிலிருந்து சரியாக ஒரு வாரத்திற்கு நான் காவலாளியிடம் சரியாக பேசவில்லை. அந்த வாரம் அவருக்கு இரவு நேர பணி என்பதால் நான் இரவு பத்து மணிக்குத்தான் விடுதிக்குள் பூனை மாதிரி நுழைவேன் காரணம் பத்து மணிக்குத்தான் அவர் விடுதியின் இரண்டாம் நுழைவு வாயிலில் அமர்ந்த படி உறங்குவார். அருகில் சென்றால் அவரின் குறட்டைச்சத்தம் காதையே சுத்தம் செய்துவிடும்.அவ்வளவு சத்தம்.
ஒரு நாள் நான் கல்லூரியிலிருந்து விடுதிக்கு எனது பெரியவுடம்பை சுமந்து கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தேன்.

          எதிரில் காவலாளி தனது மிடுக்கான உடலுடன் மிதிவண்டியில் வந்து
கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் புதரில் எனது உருவத்தை மறைக்க முயன்றேன் ஆனால், அனைத்து மரங்களும் உடற்பயிற்சி செய்து ட்ரிம்மாக இருந்ததால் எனதுடலை மறைக்கமுடியவில்லை.

       காவலாளிக்கு என்ன அவசரமோ தெரியவில்லை வேகமாக எனது பார்வையிலிருந்து அகன்றார்.அதன் பின் நான் புதரிலிருந்து சாலைக்கு வந்து ஓர் தற்காலிக நிம்மதியுடன் நடந்தேன்.

           அப்போது திருமலையை நோக்கி நான்," அப்பனே ஸ்ரீநிவாஸா...நீயாவது கடனை வாங்கி விட்டு ஓரிடத்தில் நிற்கிறாய் ஆனால் என்னை ஏன் கடன் வாங்கமலே இப்படி ஓட வைக்கிறாய்" என கேட்டேன்.

           உடனே என் மனதிலோர் பதில் உதித்தது.

     இப்படி  ஓடியாவது உடலிளைக்குமா என்பது தான் அப்பதில்.
பின் விடுதியை அடைந்து அறையைத் திறந்து பொத்தென கட்டிலில் சாய்ந்தேன். அனேகமாக அந்த கட்டில் தற்போது  சற்று வளைந்துதான் இருக்கக்கூடும். திருப்பதி சென்றால் கட்டாயம் அதையொருமுறை தரிசனம் செய்ய வேண்டும்.

          மாலை ஓர் ஏழு மணியளவில், கதவை யாரோ நன்றாக தட்டினர். நான் தூக்கத்திலிருந்ததால் எனக்கு கனவில் கேட்பது போன்றதோர் உணர்வு. சத்தம் அதிகரிக்கவே நான் எழுந்து கதவைத் திறந்தால் அங்கு எதிரில் காவலாளி.

            எனது தூக்கம் துக்கமாய் மாறியது. அவரின் கண்களை சந்திக்க என் கண்கள் மறுத்தன. ஆனால் அவர் என்னை உலுக்கி, " உன்னைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நீ யாரிடமும் கை நீட்டுபவனல்ல" என சுந்தர தெலுங்கில் கூறினார். மேலும்,"உனது அறையில் எனது விசிலை காலை வைத்துச் சென்றேன் அதை எடுக்கத்தான் வந்தேன்" என கூறினார்.

           இதை கேட்ட என் மனதில் ஓர் புயலுக்கு பின் அமைதி.
 
           ஆம்.  பர்சை விட்டு ஒரு ரூபாய் கூட எடுக்க தயங்கும் எனக்கு அன்று அந்த காவலாளியின் வார்த்தைகள் அவ்வளவு ஆறுதலாக இருந்தது.


              ஸ்ரீ நிவாஸனுக்கு நின்ற இடத்திலிருந்தே நன்றி கூறினேன்.
 
 வேறென்ன என்னால் செய்ய இயலும்.அவனுண்டியில் பணமா போட முடியும்.     பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரை பாயும். கடன் அன்பை முறிக்கும். இல்லையா நண்பர்களே?

     




14 comments:

  1. நட்புக்குள் இப்படி சில சுவையான ஷேஷ்டைகள் நடப்பது இயல்புதான்.

    ReplyDelete
    Replies
    1. நட்பா?, பணமென்றால் நான் பல மைல் தூரம் அவர்களை விட்டு விலகி விடுவேன் நண்பரே...

      Delete
  2. Naveen brother why don't you go to kalaka povathu yaru...if you participate in that definitely you will be the title winner

    ReplyDelete
    Replies
    1. கலக்கப் போவது கிண்டப்போவது கிளரப்போவது எல்லாம் அவன் செயல்.

      Delete
  3. சுவாரஸ்யமாக சென்றது பதிவு நன்றி.

    ReplyDelete
  4. வெளுத்துக் கொண்டே இருக்கிறது.சார். நன்றி

    ReplyDelete
  5. நல்ல சுவையான அனுபவங்களை சுவைபட எழுதுகின்றீர்கள் நகைச்சுவையும் கலந்து!

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்...இவையனைத்தும் எனது வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்.

      Delete
  6. அனைத்து மரங்களும் உடற்பயிற்சி செய்து ட்ரிம்மாக இருந்ததால் எனதுடலை மறைக்கமுடியவில்லை.//

    //," அப்பனே ஸ்ரீநிவாஸா...நீயாவது கடனை வாங்கி விட்டு ஓரிடத்தில் நிற்கிறாய் ஆனால் என்னை ஏன் கடன் வாங்கமலே இப்படி ஓட வைக்கிறாய்" //

    ஹா ஹா ஹா செமையா சிரித்துவிட்டேன். மரங்கள் பத்தி நீங்க சொல்லிருப்பது போல வேறு வார்த்தைகளில் ஆனால் கிட்டத்தட்ட இதே அர்த்தம் வருவது போல ஒரு எழுத்தில் நான் எழுதி வைத்திருக்கிறேன்.

    அது சரி சிறுத்தை எல்லாம் நடமாடும் இடத்தில் நு சொன்னது இன்னும் சிரிப்பு...உங்களை எல்லாம் கண்டு அதுதான் பயந்திருக்கும்!!

    ஸ்வாரஸியமாக எழுதறீங்க. நன்றாக எழுத வருகிறது.

    கீதா

    ReplyDelete
  7. திருமதி.கீதா மேடம். என்னைப் போன்ற மகான்கள் வாழுமிடத்தில் அன்பே நிறைந்திருக்கும். மானும் புலியும் ஓர் தடாகத்தே ஓர் இடத்தில்
    ஒற்றுமையாய் நீரருந்தும்..அது சரி ஃப்ல்டர் காபி என்னாச்சு மாமி.

    ReplyDelete
  8. மகா ஸ்வாரஸ்யம்! சில ிடங்கள் வாய்விட்டு சிரிக்கும்படி சுவையாக ிருந்தது.

    ReplyDelete
  9. ஒரு தீவிர ரசிகை இப்போது முதல் நான் உனக்கு. டைமிங் காமெடி செமையா வெளுத்து வாங்குறே. முயற்சி பண்ணா ஒரு நல்ல நகைச்சுவை எழுத்தாளரா வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உன்னிடம் இருக்கிறது இருக்கிறது

    ReplyDelete