Friday 29 May 2020

மனமும்..சமணமும்!

வணக்கம் நண்பர்களே,

நான் அதிர்ந்து போயிருந்த அக்கணம்    என்னுள் நிறைய ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும்.
எனது அன்னை ஒப்புதல் கடிதத்தில் கையொப்பமிட்டு என்னிடம் அளித்தார். 

                    நான் அதை பத்திரப்படுத்தி விட்டு,சிறிது நேரம் அறையிலேயே அமர்ந்தேன்.


            பின், தாயின் வற்புறுத்தலின் பேரில் வீட்டிற்குக் கிளம்பினேன்.

       பேருந்திலேறி சீட்டு வாங்கியமர்ந்தேன்.

      அந்த வயதிலேயே வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிய ஓர் அறிமுகம் எனக்குக் கிடைத்தது.


               நிறைய பௌத்த நூல்களின் மேல் எனது நாட்டம் செல்லவே..
     எனது ஒன்பதாம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன்.

           அதில் எனக்கு புத்தரைப் பற்றிய பாடமொன்று இருந்தது.

           அதை புரட்டி பார்க்கையில் , புத்தரின் போதனையைத் தொகுத்துக் கூறும் ஒரு ஆங்கில வாசகம் இருந்தது.

                       "Life is full of sorrows, the desire is the root cause of sorrow.
                            To avoid miseries in the world,lead a virtuous life."

      என்ற அந்த வாசகமென்னை மிகவும் கவர்ந்தது.

     பின் பாட்டி காசி சென்று வாங்கி வந்த மின்தட்டில் புத்த கயா பற்றிய காட்சிகள் வந்தன.  அதையடிக்கடி எனது கணினியில் கண்டு கொண்டே இருந்தேன்.

       இந்த நிகழ்வுகளெல்லாம் எனது வளரிளம் காலத்தை ஆக்கிரமித்திருந்தாலும்
    வயிற்றுக்குள் பறந்த பட்டாம்பூச்சிகளுக்கு மட்டும் குறைவேயில்லை.

           காரணம் பக்கத்து வீட்டில் புதிதாக குடி வந்த  வடநாட்டுக் குடும்பம்.

          அந்த குடும்பத்தில் என் வயதையொத்த ஓர் சிறுமியிருந்தாள் அவள் பெயர் 
     அதிதி.

      தினமும் மாலையில், மொட்டை மாடியில் நாங்களிருவரும் பேசுவோம்.


         அவர்கள் சமண சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தனர்.

       அவர்களின் இல்லத்திற்கு நான் சென்ற போது அவளது தாயார் என்னை நன்றாக உபசரித்தார். 

     அவர்களது பூஜையறைக்கு என்னை அதிதி அழைத்துச் சென்றாள்.

    அவர்கள் அதை மிகவும் தூய்மையாக வைத்திருந்தனர்.

      அனைத்தும் வெள்ளிச் சிலைகள். தவக்கோலத்தில் ஆடைகளற்ற ஆண் சிலைகள். ஒவ்வொரு சிலைக்கும் மேலே ஒரு சிறிய குடையிருந்தது.
  
    நான் அவர்கள் பூஜையறையில் நிற்பதை கண்ட அவளின் அம்மா அவளை தனியாக அழைத்து திட்டியிருப்பார் போல தோன்றியது.

        அவள் வந்ததும் என்னிடம் அவள் சிரித்துக்கொண்டே என்னை அவ்விடம் விட்டு வெளியேறச் செய்தாள்.

         வெளியில்  வந்து நான் அந்த சிலைகளைப் பற்றி அவளிடம் கேட்டேன்.

         அவள் மிகவும் ஆர்வத்துடன் அந்த சிலைகளைக் பற்றி எனக்கு கூறினாள்.

     அவளுடைய அறிவு என்னை வியப்படையச் செய்தது.

     அவள் சமண மதத்தின்
24 தீர்த்தங்கரர்களைப் பற்றி எனக்குத் கூறினாள்.

           அவர்கள் ஞானிகளென்றும், பற்றற்றவர்கள் எனவும் கூறினாள்.

         இதையெல்லாம் எனது ஒன்பதாம் வகுப்பு புத்தகத்தில் படித்ததாக நினைவு கூர்ந்தேன். 
     அதன்பின், அவ்வருடக் கோடை விடுமுறையில் எனது தாயாரின் பிறப்பிடமான விஜயமங்கலம் என்றவூருக்குச் சென்றேன்.


   அங்கு ஒரு கோவில் இருந்தது. அதை அப்பகுதி மக்கள் 'நெட்டை கோபுரம்' என அழைத்தனர்.

        அங்கு சென்றேன்.

    என்ன ஆச்சர்யம்!  அதிதி வீட்டில் நான் கண்ட சிலைகளைப் போலவே அங்கும் இருந்தன. அங்கிருந்த ஒரு வயதானவர் தான் கோவிலைக் திறந்து தரிசனம் செய்து வைத்தார்.


       நான் ஊரிலிருந்து வந்ததும் அதிதியிடம் இவ்விஷயத்தைக் கூறினேன். அதற்கு அவள் ஒரு வரலாற்றையே எனக்கு கதை போலச் சொன்னாள். சமணர்கள் வட நாட்டிலே பரவியிருந்தாலும் பஞ்சம் காரணமாக தெற்கு நோக்கி வந்தனராம்.

     அவ்வாறு வந்த சமணர்களைப் பாண்டிய மன்னனொருவன் ஆதரித்து அவர்கள் தங்குவதற்கு இடமலித்தானாம்.

      சமணர்கள் பெரும்பாலும் துறவிகளாகயிருந்ததால் அவர்கள் குகைகளிலும் கோவில்களிலும் தஞ்சமடைந்தனராம்.

      அவ்வாறு வாழ்ந்த சமணர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் குடிபெயர்ந்தனராம்.

             தங்களது ஆழ்ந்த அறிவுக் களஞ்சியங்களை பரவச் செய்ய அப்போது இங்கிருந்த சமயங்கள் வாய்ப்பளிக்காததால் அவர்கள் பலரும் தாங்கள் வாழ்ந்த குகைகளிலும்,பாறைகளிலும் தங்கள் செய்யுட்களை எழுதினார்களாம்.


          இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நான் அவளின் அறிவைக் கண்டு வியந்தேன். அவளை காதலிக்கவும் செய்தேன். ஆனால் காலம் இப்போதும் விளையாடியது.

          அவள் தந்தை செய்த தொழிலில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் அவர்கள் தங்கள் சொந்தவூரான ஜெய்பூருக்கே சென்றுவிட்டனர். அவளை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற எனக்கு தோல்விதான் மிஞ்சியது. அவளது தாயார் தான்
என்னுடன் பேசினார்.

            அவளது தாயார் கூறினவாவது," நாங்கள் தமிழ் நாட்டை விட்டு வந்துவிட்டோம்.இனி அதிதியுடன் நீ பேசுவதற்கு என்னயிருக்கிறது.மரியாதையாக போனை வை" என திட்டிவிட்டார்.

      சில நாட்களில்,    அதே வீட்டிற்கு வேறு யாரோ குடிவந்தனர்.
           
  இப்போதும்,    அந்த வீட்டின் மொட்டை மாடியை பார்க்கும்போதெல்லாம் அதிதியின் நினைவுகள் என் கண் முன்னே நிழலாடும்.

        
     


              

12 comments:

  1. நினைவுகள்....

    நினைவுப் பேழையிலிருந்து சில - நன்று. தொடரட்டும் உங்கள் நினைவலைகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். எனது நினைவலைகளை வாசித்ததற்கு.

      Delete
  2. சில நினைவுகள் என்றுமே நீங்காதவை...

    ReplyDelete
  3. அதிதீயை இழந்தாலும் அவரால் கிடைத்த சமணர்களின் அறிமுகம் அவள் உன்னுள் விட்டுச் சஎன்ற அழியா சொத்து. வாழ்வில் இப்படித்தான் நாண் ஆசைப் படுவது அணைத்தும் கிடைக்காது. ஆனால் எல்லாவற்றிலிருந்தும் நமக்கு நிச்சயம் சிறந்த படிப்பினைகள் கிட்டும். உன் பதிவு நான் வாழ்வில் இழந்த சிலரின் நிணைவுகளையும் கொண்டுவந்தது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சமணர்களின் கதை என்பது நான் அவளுடன் பேச நானாக ஏற்படுத்திக்கொண்ட ஓர் தலைப்பு.
      எனக்கு அப்போது அவள் தான் முக்கியமாகப் பட்டாள்.

      Delete
  4. அருமையான மற்றும் அழகான நினைவுகல். என்ன ுலகம் ிது, ொரு நல்ல ுரவுகளுக்குகூட ஏதாவது ொரு காறணம் தேவைபடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆம். முக்கியமாக இந்த உறவுக்கு உறவை தக்கவைக்க ஏதாவது செய்து கொண்டே இருக்கவேண்டும்.இல்லையென்றால் உறவு தொலைந்து விடும்.

      Delete
  5. நவீன் உங்களின் நினைவுப்பெட்டகத்திலிருந்து நினைவுத் துளிகள் அழகானவை. சில நினைவுகள் நம்மை எப்போதுமே உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும்.

    தொடருங்கள் நாங்களும் தொடர்கிறோம்.

    துளசிதரன்

    அதிதி என்றால் உங்களுக்குக் கண்டிப்பாக அர்த்தம் தெரிந்திருக்கும். அதிதி காலம் நேரம் இல்லாமல் என்ற அர்த்தமும் உண்டு.

    அதிதி உங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காலத்தில் வந்து உங்களுக்கு அருமையான ஒரு விஷயத்தை அறிய உதவியிருக்கிறாள். இல்லையா. இந்த சமண விஷயம் அதன் தத்துவம் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்கு ஒரு கருவியாக...இப்படித்தான் வாழ்வில் நம்மையும் அறியாமல் பல படிப்பினைகள் நமக்குக் கிடைக்கிறது. சிலவற்றை நாம் கூர்ந்து அறிகிறோம். சிலவற்றை நமது அறியாமையால் மிஸ் செய்துவிடுகிறோம்.

    நல்ல விஷயம் நவீன். தொடர்ந்து எழுதுங்கள். நன்றாக எழுதுகின்றீர்கள். வாழ்த்துகள்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பசுமையான நினைவுகள் நன்றி துளசிதரன் சார்.
      அதிதி என்னுடன் வாழ்க்கை முழுவதும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.நன்றி கீதா மேடம்

      Delete