Saturday 20 June 2020

சிதறி விழுந்த மழைத்துளிகள்


வணக்கம் நண்பர்களே,
 
 திருப்பதி மகேஷ் எனக்கு துளசிதரன் சார் எழுதிய 'காலம் செய்த கோலமடி' என்ற புதினத்தை எப்போதோ  தந்திருந்தார்.

 அதனை இந்த லாக்டவுன் சமயத்தில் தான் படிக்க முடிந்தது.
புதினம் படித்த போது மனித உறவுகளின் மகத்துவத்தை புரிந்துகொண்டேன்.இதோ அதன் விமர்சனம்.
     புதினத்தின் கதாபாத்திரங்கள் என்னை மதுரைக்கும்,மருதூருக்கும், திண்டுக்கல்லுக்கும் என்னை இட்டுச்சென்றன என்று கூறினால் அது மிகையாகாது.
       
ஆஹா என்ன கதாபாத்திரங்கள்.அவர்தம் மனங்களில் தான் எத்தனை எண்ணங்கள்.அதிலும் அந்த எண்ணங்களை ஆசிரியர் படம்பிடித்து காட்டிய விதம் அருமை.ஆனால் ஜயலட்சுமி எனக்கு நடைமுறையில் இருந்து வேறுபட்ட ஒரு பெண்ணாகவே தெரிகிறாள்.லதாவின் வெறுப்பு நியாயமானதுதான்.அழகான கணவனையுடைய அனைத்து பெண்களுக்கும் இந்த வெறுப்பு இருக்கும். 

ஆனால் ஜெயலட்சுமி பின்னாளில் லதாவிற்கு உதவியது ஆச்சரியமாகவுள்ளது.ஒருவேளை லதாவின் மீனாட்சியும் சுந்தரேசனும் அருள்புரிந்த விதமோ தெரியவில்லை.கோபாலின் பாத்திரம் லதாவிற்கு எரிச்சலூட்டுவதாக இருந்தாலும்.அந்த உறவே அவளை பின்னாளில் தாங்குகிறது...நித்யா அதற்கு பாலமாக அமைத்திருப்பது அற்புதம்.காமத்தை காதலாக மாற்றிய குழந்தை நித்யா.எ‌ன அருமையான கதாபாத்திரங்கள்.


           இந்த புதினத்தை வாசிக்கும் போது மிகவும் ஆர்வமாக இருந்தது.ஓர் அழகிய குடும்பம்.அந்த குடும்பத்தில் எத்தனை மாற்றங்கள்.அருமை.
    லதாவின் இனிய குடும்பம் இவ்வாறான மாற்றங்களை எதிர்கொள்ளும் என புதினத்தின் தொடக்க பக்கங்களை வாசிக்கும் போது உணர இயலவில்லை. பின் பகுதியில் அவ்வாறான மாற்றங்கள் நிகழத்தொடங்கியதும் ஆச்சர்யமாக இருந்தது. 
        
       குழந்தைகள்  இருவரும் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக அமைந்திருக்கிறார்கள்.முப்பத்திமூன்று ஆண்டுகளுக்குப் பின் கோபாலை லதா சந்திப்பது ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு. காலத்தின் கட்டளை என்றும் தோன்றுகின்றது. துரைராஜை புரிந்து கொண்டு அவனை மணந்த ஜெயலட்சுமி ஒரு புதுமைப் பெண்.

        சாமித்தாத்தாவின்  மறைவிற்கு பின் பல மாற்றங்கள்.நட்பை சரியாக தேர்வு செய்ய தூண்டும் போஸின் பாத்திரம் ஒர் 'ஆர்கிடைப்' என்றே கூறலாம்.நகர வாழ்க்கையையும் கிராம வாழ்க்கையையும் கண் முன்னே கொண்டுவந்துள்ளார் ஆசிரியர்.

   சத்தியமூர்த்திக்கு என்ன ஆனது என அறிய ஆவலாய் இருக்கிறது. போஸின் தாக்கம் கோபாலிடம் இருக்கும்போது ஏன் சத்திய மூர்த்தியின் தாக்கம் அவனிடத்தில் இல்லை என்ற கேள்வி எழுகிறது.
ஒருவேளை தவறு செய்து வருந்தும் கோபாலின் நிலை சத்தியமூர்த்தியின் தாக்கமோ? 

      கோபால் மற்றும்  துரைராஜின் உருவ ஒற்றுமை. இறுதியில் இவையனைத்தும் காலத்தின் கோலமென ஆசிரியர் சொல்லிமுடிப்பது 
வியப்பை ஏற்படுத்துகிறது.இந்த புதினத்தை படிக்கும்போது ஆனந்தம்,வியப்பு,ஆச்சர்யம் என பல ரசங்கள் வெளிப்படுகின்றன.

இதுபோன்ற முக்கோண உறவுகள்,அதாவது லதா, துரைராஜ்,ஜெயலட்சுமி, இலக்கியத்தில் பல காலமாக இருந்துவருகிறது.கோபால் தனது கல்லூரி பேராசிரியர் கனவை விடுத்து எப்படி போலீஸ்காரனானான்? மணிகண்டனை போன்ற மிருகங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன.அம்மிருகங்கள் பெண்ணின் பலவீனத்தை பதுங்கி அறிந்து பாய்கின்றன. விசாலியின் மாமனாரும் ஓர் மிருகமே.காமம் வலியது ,உயர்ந்த சிந்தனை கொண்ட மனிதனைக்கூட சில வினாடிகளில் மிருகமாகும் வல்லமை அதற்குண்டு. அன்று பார்த்தனின் தேர்தட்டில் மாயோன் உரைத்தது ஞாபகம் வருகிறது. பீஷ்மர், த்ரோணரை கூட அர்ஜுனா நீ ஒருகால் வென்று விடுவாய் ஆனால் காமத்தினின்றும்,க்ரோதத்தினின்றும் மீழ்வதே உண்மையான வெற்றி என்றான் பார்த்தசாரதி.  எவ்வளவு உண்மை. ஆகமொத்தம், 'காலம் செய்த கோலமடி' வாசித்தது மகிழ்ச்சியளிக்கிறது.மேலும் யூ ட்யூபிலும் ஆசிரியரது சில நாடகங்களை பார்த்தேன். ஆம். பரசுராமக்க்ஷேத்திரமான மலைநாட்டின் இயற்கை அரவனைப்பில் இத்தகைய உயர்ந்த சிந்தனைகளைத் தவிர வேறென்ன தோன்றக்கூடும்.

10 comments:

  1. வாழ்த்துக்கள். இதையும் சீக்கிரம் மொழிப்பெயர்ப்பு செய்யவும். நாவலுக்கு பொருத்தமாக கீதை வாசகத்தை புகுத்தியது என்னை கவர்கிறது.

    ReplyDelete
  2. நல்லதொரு விமர்சனம் நவீன் ஹரி. நண்பர் துளசிதரன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. நல்லதொரு விமர்சனம். நிச்சயம் இந்தப் புதினத்தைப் படிக்கிறேன். வாழ்த்துக்கள் துளசிதரன் சார்.

    ReplyDelete
  4. மிக்க மிக்க நன்றி. நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. திருப்பதி மகேஷ் அப்போது புத்தகங்கள் வாங்கிய போது அவர் நண்பர்களுக்கும் சேர்த்து என்று அறிந்திருந்தாலும் விமர்சனம் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொருவரும் எழுதுவது மகிழ்க்சியாக இருக்கிறது. மீண்டும் மிக்க நன்றி. வேலைப் பளு. மீண்டும் கருத்து தருகிறேன்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி‌ சார். தங்களின் எழுத்துக்கள் எனக்கு ஊக்கம்.

      Delete
  5. நவீன் மிக்க நன்றி. உங்களுக்கும், மகேஷிற்கும் மிக்க மிக்க நன்றி. தான் வாசித்த நாவலைத் தன் நண்பர்களுக்கும் பகிர்ந்தது மகிழ்ச்சி. நாவலின் கதாபாத்திரங்களுள் பயணித்து அவர்களைப் பற்றிய உங்கள் கருத்துகளைப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி. ஆங்கில ஆசிரியரான உங்களுக்கு ஈடிபஸின் மனோநிலை தெரிந்திருக்கும், அது போல் ஒரு மனநிலைதான் துரைராஜுவுக்கு. அங்கு தாய். இங்கு சகோதரி. இங்கு மெயின் அல்லாத சில கதாபாத்திரங்களைப் பற்றி பேசியது நீங்கள் ஆழ்ந்து வாசித்திருப்பது புரிகிறது. சத்திய மூர்த்தியின் தாக்கம் நீங்கள் சொல்லியிருப்பது போல் உண்டுதான். சத்தியமூர்த்தி போல நட்புகள் சிலர் எல்லோர் வாழ்விலும் இருப்பார்கள்தான். அவர்களைப் பற்றி எப்போதாவது ஆதங்கப்படுவதும், காணாமல் போன நல்ல நட்புகள் மொபைல், சோசியல் மீடியா உள்ள இந்த காலத்தில் கூட நிகழ வாய்ப்பில்லாமல் போகும் இது போன்ற நட்புகள் 35 வருடங்களுக்கு முன்பு காணாமல் போக வாய்ப்பு கூடுதல்தான். ஜெயலக்ஷ்மிக்கு ஆசிரியரிடம் ஏற்பட்ட ஈர்ப்பு அந்த வயதிற்கான சீண்டுதல் ஆனால் அவரோடு வாழ நினைக்கவில்லை. என்றாலும் லதா துரைக்கு சகோதரி என்ற விஷயம் தெரிந்து துரை விலகும் போது அதைச் சேர்த்து வைப்பது நடக்காது என்பதால் தான் இருவருக்கும் துணை நின்று தானும் வாழ்ந்து அவளையும் வாழவைக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்படுபவள்.

    மிக்க நன்றி மீண்டும்.

    துளசிதரன்

    ReplyDelete
  6. சிக்கலான கதை அமைப்பைக் கையாண்டிருந்தார் துளஸிஜி. நானும் படித்து ரசித்தேன். நல்லதொரு விமர்சனம்.

    ReplyDelete
  7. சுவாரஸ்யமான புதினம். அருமையான விமர்சநம். கீதை வரிகளை கொண்டுவந்து பொருத்தியது உனது தனிச்சிறப்பு

    ReplyDelete